சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் கடந்த ஓராண்டு செயலறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 13ஆவது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 99 Bistro Paya Lebar, Life Long Learning Institute, 11 Eunos Road 8, #01-02, Singapore 408601 என்ற முகவரியில், 10.02.2018. சனிக்கிழமையன்று, 17.45 மணியளவில் துவங்கியது.
தலைமையுரை:
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் - சிறப்பு விருந்தினர்களையும், பொதுக்குழு உறுப்பினர்களையும் வரவேற்றார்.
கடந்த ஆண்டில் மன்றம் திட்டமிட்டிருந்ததை விட அதிகளவில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, நகர்நலப் பணிகளாற்றப்பட்டுள்ளதாகவும், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வகுப்பறை விரிவாக்கக் கட்டுமானப் பணிக்காக அதிக தொகை நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,
கல்வி உதவி கோரி இக்ராஃ கல்விச் சங்கம் மூலமும், மருத்துவ உதவி கோரி ஷிஃபா அறக்கட்டளை மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதிகள் உரிய காலத்தில் ஒதுக்கி வழங்கப்படுவதாகக் கூறியதோடு, இதற்காக உதவிய மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இவை உட்பட – மன்றத்தின் நகர்நலப் பணிகள் அனைத்திற்காகவும் தொடர்ந்து தாராளமாக உதவி வரும் மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் நன்றி கூறிய அவர், உறுப்பினர்கள் அவரவர் அண்டை வீடுகளில் உள்ள – பொருளாதாரத்தில் நலிவுற்றோரின் தேவைகளை ஆய்ந்தறிந்து, தகுதியானவர்களை உதவி கோரி விண்ணப்பிக்கச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கூறி அவர் உரையை முடித்தார்.
ஆலோசகர் உரை:
தொடர்ந்து, மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் உரையாற்றினார். மன்றத்தின் ஓராண்டு நிறைவின்போது – ஆண்டுக்கொருமுறை மட்டுமே வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படுவதாகவும், இக்கூட்டத்தில் மட்டுமே மன்றத்தின் கடந்த ஓராண்டு செய்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் தகவல்களை முன்வைத்து, உறுப்பினர்கள் அனைவரது கருத்துக்களும் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையில், அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதுபோல, செயற்குழுவில் இடம்பெறாத உறுப்பினர்கள், மன்றத்தின் காலாண்டுப் பருவ உறுப்பினர்களாக – தாமாக முன்வந்து இணைந்து செயல்படுமாறும், இதன் மூலம் செயற்குழுவின் நடவடிக்கைகளில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க இயலும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாளையம் ஹபீப் முஹம்மத் வாழ்த்துரையாற்றினார். சிங்கை காயல் நல மன்றத்தினரின் ஒற்றுமையுடன் கூடிய செயல்பாடுகள் அனைவருக்கும் முன்னுதாரணமான செயல் என்று புகழ்ந்துரைத்த அவர், மன்ற ஆலோசகரின் வழிகாட்டலில் – இளைஞர்களின் உத்வேகத்துடன் கூடிய செயல்பாட்டின் காரணமாக, இம்மன்றம் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் உரிய காலக்கெடுவுக்குள் செயல்படுத்தி முடிக்கப்படுவதாகக் கூறினார்.
மன்றத்தின் அவ்வப்போதைய செயல்பாடுகளை உள்ளூர் ஊடகங்களில் உடனுக்குடன் செய்தியாக வெளியிட்டால் மட்டுமே, அதன் நடவடிக்கைகளை அனைவரும் அறிந்துகொள்ள முடியும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக இந்நடவடிக்கையில் தொய்வு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு, அக்குறையைக் களைய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கத்தர் காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் தொடர்ந்து உரையாற்றினார்.
தன்னை இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பளித்தமைக்காக நன்றி கூறிய அவர், நகர்நலப் பணிகளுக்காக - புதுப்புது திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை உடனுக்குடன் செயல்படுத்துவதிலும் சிங்கை காயல் நல மன்றம் அனைத்துலக மன்றங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வதாகக் கூறினார்.
கல்வி உதவி வழங்குவதற்காக இயங்கி வரும் இக்ராஃ கல்விச் சங்கத்திலும், மருத்துவ உதவிக்காக இயங்கி வரும் ஷிஃபா அறக்கட்டளையிலும் சிங்கை காயல் நல மன்றத்தின் பங்கேற்பு அளப்பரியது என்று புகழ்ந்த அவர், இதற்காக இணைந்து செயலாற்றும் அனைத்துலக காயல் நல மன்றங்களின் அனைத்து அங்கத்தினருக்கும் நன்றி கூறினார்.
ஹாங்காங் பேரவையுடன் இணைந்து, தமது கத்தர் காயல் நல மன்றம் நடத்தி வரும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் உள்ளிட்ட மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், சிங்கப்பூர் காயல் நல மன்றமும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
செயலரின் ஆண்டறிக்கை:
மன்றத்தின் கடந்த 2017ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை, செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் சமர்ப்பித்துப் பேசினார்.
மன்றத்தின் காலாண்டுப் பருவ துணைக் குழு உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்புடன் – நகர்நலப் பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், பணிகளைத் திட்டமிடல், ஒருங்கிணைத்தல், செயல்படுத்தல் ஆகிய முப்பரிமாணங்களிலும் – துணைக்குழுவினரின் பணி மகத்தானது என்று கூறி, அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
பின்னர், மன்றத்தின் கடந்த ஓராண்டு நடவடிக்கைகளை பவர் பாய்ண்ட் உதவியுடன் அவர் கூட்டத்தில் பகிர்ந்தார். அவற்றின் சுருக்கம் வருமாறு:-
கல்வி உதவித்தொகையில் புதிய முயற்சி:
இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் – கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பிற்காக கல்வி உதவி கோரும் ஆண் மாணவர்களுக்கு, வட்டியில்லாக் கடன் முறையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் புதிதாகத் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வகைக்காக சிங்கை மன்றம் 2.05 லட்சம் ரூபாயை கடந்த 2017ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது.
ஷிஃபா மூலம் மருத்துவ உதவி:
கடந்த 2017ஆம் ஆண்டில், ஷிஃபா அறக்கட்டளை மூலம் 132 பேரிடமிருந்து மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றுக்காக சிங்கை காயல் நல மன்றத்தால் மட்டும் 1 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2016/17 பருவத்தில் மட்டும் மொத்தம் 4.04 லட்சம் ரூபாய் மன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது அதிக நிதியாகும்.
மக்கள் மருந்தகம்:
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் மருந்தகம் துவங்கப்பட்டள்ளது. ஷிஃபா அறக்கட்டளையின் செயல்பாடுகளில் இது ஒரு மைல் கல். இதற்காக தனிப்பெரும் உழைப்பைத் தொடர்ந்தளித்து வரும் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சாளை நவாஸ் அவர்களுக்கு நன்றி.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
கடந்தாண்டில், நோன்புப் பெருநாள் & ஹஜ் பெருநாட்களில் 253 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் நல உதவி:
முதியோர் நல உதவித் திட்டத்தின் கீழ், 6 முதியோருக்கு தலா 1,500 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ளது.
துளிர் பள்ளிக்கு கட்டுமானப் பணி உதவி:
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் வகுப்பறைக் கட்டிட விரிவாக்கப் பணிக்காகவும், அப்பள்ளி மாணவ-மாணவியருக்கு சீருடை வகைக்காகவும் மன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து வழங்கிய சிறப்பு நிதியிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இமாம் – முஅத்தின் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றத்துடன் இணைந்து, ஆண்டுதோறும் இரு பெருநாட்களிலும் – நகர பள்ளிவாசல்களின் இமாம் – முஅத்தின்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை திட்டத்தில் இணைந்து, கனிசமான பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஹாஃபிழ்கள் ஊக்கத் தொகை:
காயல்பட்டினம் நகர மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்டு வரும் ஹாஃபிழ்கள் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 2017ஆம் ஆண்டில் பல்வேறு மத்ரஸாக்களின் – திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த 37 ஹாஃபிழ் – ஹாஃபிழாக்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
உண்டியல் நிதி:
மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கும் நோக்கில், உண்டியல் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 5,204 சிங்கப்பூர் டாலர்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு, மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக உதவிய அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் நன்றி.
உள்நாட்டு நிகழ்ச்சிகள்:
மன்றம் இயங்கி வரும் சிங்கப்பூர் நாட்டிலும் பல்வேறு அறப்பணிகளில் இணைந்து செயல்படும் நோக்கில், சிங்கை காயல் நல மன்றத்தையும் உள்ளடக்கிய - சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் (FIM)சார்பில் நடத்தப்பட்ட கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 80 மாணவ-மாணவியர் பங்கேற்று, துறை வாரியான ஆலோசகர்களின் நல்ல பல ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
அதுபோல, சிங்கை அதிபர் மேடம் ஹலீமா யஃகூப் அவர்கள் அதிபராவதற்கு முன், பாராளுமன்ற உறுப்பினராகவும் - சபாநாயகராகவும் இருந்த காலகட்டத்தில், நாட்டிற்காற்றிய சேவைகளைப் பாராட்டி, Indian Muslim Community சார்பில் விருந்துபசரிப்பு நடத்தப்பட்டது.
மன்ற உறுப்பினர் மறைவு:
மன்றத்தில், தனது தன்னார்வமிக்க பணிகளால் முழு ஈடுபாட்டுடன் இயங்கிய இளவல் சாளை ஷேக் ஷீத், இந்தோனேஷியாவில் சோகமான முறையில் இறையடி சேர்ந்ததையொட்டி, அவரது நல்லடக்கம் & குடும்பத்தினரை ஆற்றுப்படுத்தும் பணிகளை – மன்றத்தின் மூத்த உறுப்பினர் நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஸிக் ஒருங்கிணைப்பில் மன்றம் முன்னின்று செய்தது. கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமின் பாவப் பிழைகளை மன்னித்து, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் சேர்த்தருள்வானாக.
வரவு – செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் கடந்தாண்டு வரவு – செலவு கணக்கறிக்கையை பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் – பவர் பாய்ண்ட் உதவியுடன் சமர்ப்பிக்க, தேவையான விளக்கங்கள் பெறப்பட்ட பின், அனைவர் சார்பில் ஒப்புதலை ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் அஹ்மத் முன்மொழிய, எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைன் வழிமொழிதலுடன் கூட்டம் ஒப்புதலளித்தது. செயற்குழு உறுப்பினர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் கணக்குகளைத் தணிக்கை செய்திருந்தார். அதன் சுருக்கம்:-
உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த நன்கொடை 34 ஆயிரத்து 280 சிங்கப்பூர் டாலர்கள்.
மன்றத்தின் நலத்திட்டப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டுள்ள தொகை 35 ஆயிரத்து 584 சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் 17 லட்சம் இந்திய ரூபாய்).
துணைக்குழு உறுப்பினர்களுக்குப் பாராட்டு:
கடந்தாண்டில் மன்றத்தின் செயற்குழுவினருடன் துணைக்குழு உறுப்பினர்களாக இணைந்து செயலாற்றி, மன்றப் பணிகளுக்கு முழுமையாகத் துணை நின்ற உறுப்பினர்கள் ஹாஃபிழ் அஹ்மத், ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா, அஹ்மத் ஜமீல், அப்துல் காதிர், ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஸூஃபீ ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழும் 2018ஆம் ஆண்டிற்கான துணைக்குழு புதிய உறுப்பினர்களாக – ஹஸன் சுலைமான், ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல், டாக்டர் அஷ்ஃபக், ஸாஹிப் அஸ்ஹர், சோனா அபூபக்கர் ஸித்தீக், செய்யித் லெப்பை, எஸ்.எச்.உதுமான், ஹபீப் முஹம்மத் ஆகியோர் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் முன்மொழிய, சாளை ஷேக் நவாஸ் வழிமொழிந்தார்.
திருமண அழைப்பு:
மார்ச் மாதம் நடைபெறவுள்ள தனது திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு டாக்டர் அஷ்ஃபக் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதுபோல, சிங்கையிலிருந்து விடைபெற்று – அமீரகத்தில் பணியாற்றச் செல்லும் உறுப்பினர் ஜமீல், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தனது திருமணத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். சிங்கை மன்றத்தின் ஓரங்கமாக தனக்கும் பணியாற்ற வாய்ப்பளித்தமைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அவர்.
வருங்கால மணமகன்களான அவ்விருவரின் நல்வாழ்விற்காகவும் கூட்டம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தது.
கூட்ட நிறைவு:
கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மன்றத்தின் அனைத்து அங்கத்தினருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், மன்றத்தின் பல்வேறு நலத்திட்டப் பணிகளில் துணைக்குழு உறுப்பினர்களாகத் துணை நின்று தொடர்ந்து முழு ஒத்துழைப்பளித்த ஷாஹுல் ஹமீத் பாதுஷா, ஜமீல், எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோருக்கும், நடப்பு கூட்டத்திற்குத் தேவையான தகவல்களை பவர் பாய்ண்ட் முறையில் ஆயத்தம் செய்தளித்த ஜெ.எஸ்.தவ்ஹீத், ஜமீல் ஆகியோருக்கும், கூட்ட நிகழ்விடமான 99 Bistroவைத் தந்துதவிய அதன் நிர்வாகத்திற்கும் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் முறைப்படி நன்றி கூறினார்.
ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் அஹ்மத் துஆவைத் தொடர்ந்து, 19.15 மணிக்கு கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும் இரவுணவு பஃபே முறையில் வழங்கி உபசரிக்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |