காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்; ஸூஃபீ ஹழ்ரத் அவர்களின் ஃகலீஃபா; தமிழ்நாடு மாநில அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை தலைவர்; காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மவ்லவீ எஸ்.எம்.எச்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானீ பாக்கவீ, 05.03.2018. திங்கட்கிழமையன்று 09.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76.
அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் பஞ்சாயத் வீதியிலுள்ள அவரது இல்லத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என முதலில் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அண்டை வீட்டார் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலரின் பரபரப்பான கருத்துப் பரிமாற்றங்கள் சமூக ஊடகங்கள் வழியே நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் வட்டாட்சியர், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், இவ்வாறாக அடக்கம் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என அரசு விதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசியதையடுத்து, காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென - குடும்பத்தாரால் பின்னர் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 06.03.2018. செவ்வாய்க்கிழமையன்று 11.00 மணியளவில், அவரது ஜனாஸா தொழுகை – காயல்பட்டினம் குத்துக்கல் தெருவிலுள்ள ஸூஃபீ மன்ஸிலில் நடத்தப்பட்டது. அவரது மகன் மவ்லவீ எம்.ஏ.எஸ்.அபூபக்கர் ஹம்மாத் தொழுகையை வழிநடத்தினார். பின்னர் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நல்லடக்கத்தில் - இலங்கை, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அன்னாரின் சீடர்களும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|