காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களில், CCTV கேமராக்களை நிறுவிட வலியுறுத்துவதற்காக, தலைமையாசிரியர்களுடன் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
நகரில் அதிகரித்துவரும் குற்றங்களை கருத்தில்கொண்டு, கடந்த சில மாதங்களாக, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம், நகரில் செய்து வருவதை பொது மக்கள் அறிவர். அதன் ஓர் அம்சமாக - பொது இடங்களில், CCTV கேமராக்கள் நிறுவிட நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், 2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு, TAMIL NADU URBAN LOCAL BODIES (INSTALLATION OF CLOSED CIRCUIT TELEVISION UNITS IN PUBLIC BUILDINGS) RULES 2012 என்ற விதிமுறைகளை அறிவித்தது. அந்த விதிமுறைகள்படி, அதிகளவில் மக்கள் வந்து செல்லும் அனைத்து பொது கட்டிடங்கள், பொது இடங்களில் - CCTV கேமராக்கள் நிறுவப்படவேண்டும். அந்த விதிமுறைகள் தெரிவித்துள்ளப்படி, உயர்நிலை பள்ளிக்கூடங்களும் (HIGHER SECONDARY SCHOOLS) பொது கட்டிடங்களாக கருதப்படும்.
நகரில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் சமீபத்தில் சந்தித்தனர். பள்ளிக்கூட வளாகங்களில் CCTV கேமராக்கள் பொறுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்து அப்போது அவர்களுக்கு விளக்கப்பட்டது.
அந்த சந்திப்பின் போது, இது வரை CCTV கேமராக்கள் நிறுவாத பள்ளிக்கூடங்களை உடனடியாக CCTV கேமராக்கள் நிறுவிட வலியுறுத்தியும், ஏற்கனவே CCTV கேமராக்கள் நிறுவியுள்ள பள்ளிக்கூடங்களை, தங்கள் வளாகத்தை சுற்றி விடுப்பட்டுள்ள பகுதிகளிலும், முழுமையான பாதுகாப்பினை கருத்தில் கொண்டு - CCTV கேமராக்கள் நிறுவிட வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 3, 2018; 9:45 am]
[#NEPR/2018030301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|