நூறு சதவிகிதம் CCTV கேமரா கண்காணிப்பிலுள்ள நகராக காயல்பட்டினத்தை ஆக்க முயற்சித்திட, ஜமாஅத்துகள் – ஊர் நலக் குழுக்களுக்கு “நடப்பது என்ன?” வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
எழில்மிகு கடற்கரை நகரமான காயல்பட்டினத்திற்கு பெருமைகள் பல உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று - இங்கு காவல் நிலையங்கள் இல்லாமல் இருப்பதும் ஆகும். இருப்பினும் - சமீப காலங்களாக நகரில் - கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பதனை அனைவரும் அறிவர்.
குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், எதிர்பாராத விதமாக நேர்ந்த குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும் சி.சி.டி.வி. கேமராக்கள் உலகெங்கும் பயன்பட்டு வருகின்றன. இந்த கேமராக்கள் - நாம் அன்றாடம் செல்லும் வங்கிகள், வியாபார ஸ்தலங்கள் என பல்வேறு பொது இடங்களில் இன்று நிறுவப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் - தொடர்ந்து, காவல் நிலையம் இல்லாத ஊர் என மட்டும் இல்லாமல், குற்றங்களும் இல்லாத ஊராக நிலைத்திட - பொது இடங்களில் - சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்படுவது மிகவும் அவசியம் ஆகும்.
மேலும் - தமிழக அரசு, 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட விதிமுறைகளும் (The Tamil Nadu Local Bodies [Installation of CCTV units in public buildings] Rules 2012) பொது இடங்களில் CCTV கேமராக்கள் நிறுவுவதை கட்டாயமாக்கியுள்ளது.
நகரின் சில ஜமாஅத்துகளும், பொது நல அமைப்புகளும் - தத்தம் பகுதிகளில், தற்போது சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவ துவங்கியுள்ளன. அந்த கேமராக்களை அவர்களே நிறுவி, அவர்களே பராமரித்தும் வருகின்றனர். இதன் மூலம் - அந்நியர்களின் கையில் இந்த பதிவுகள் செல்லும் என்ற அச்சத்திற்கு இடம் இல்லை.
எனவே - தேவையான இடங்களில், தேவையான அளவில் - சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவி - தத்தம் பகுதிகளுக்கு மட்டுமன்றி, ஊரின் அனைத்து பகுதிகளுக்கும் - இறைவனின் உதவியுடன் - பாதுகாப்பு வழங்கிட முயற்சிகளை மேற்கொள்ளும்படி - நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், ஊர் நல குழுக்களுக்கும் - நடப்பது என்ன? குழுமம் - மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
இறைவன் நாடினால், அடுத்த சில மாதங்களுக்குள் - காயல்பட்டினத்தில் பொது இடங்கள், 100 சதவீதம் சி.சி.டி.வி. கண்காணிப்பில் உள்ளன என்ற சூழலை உருவாக்குவோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 3, 2018; 11:30 am]
[#NEPR/2018030302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|