காயல்பட்டினம் அஞ்சல் நிலைய வாடகைக் கட்டிடம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலருடன் “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
60 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் காயல்பட்டினம் தபால் நிலையம், தற்போது வேறு இடத்திற்கு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
நகரின் மைய பகுதியில் வேறு இடம் இல்லாததை அடுத்து, நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 83 / 84 இடத்தில் உள்ள காலியிடம் ஒன்றில், வாடகை அடிப்படையில் கட்டிடம் கட்டி தர, காயல்பட்டினம் நகராட்சியிடம் சில மாதங்களுக்கு முன்பு, தபால்துறை கோரிக்கை வைத்தது.
2.77 ஏக்கர் பரப்பளவு கொண்ட சர்வே எண் 83 / 84 இடத்தில், தற்போது - நகராட்சி குடிநீர் தொட்டி, பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், சார்பதிவாளர் அலுவலகம், நூலகம், ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, அம்மா உணவகம் என பல்வேறு பொது கட்டிடங்கள் அமைந்துள்ளன.
தபால்துறையின் கோரிக்கையை தொடர்ந்து, ஜூலை 2016 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம், தபால்துறைக்கு வாடகை அடிப்படையில் கட்டிடம் கட்டிட - காயல்பட்டினம் நகராட்சி அனுமதியும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில வாரங்களில், முந்தைய நிர்வாகத்தின் பதவிக்காலம் நிறைவுற்றதை அடுத்து, இந்த தீர்மானம் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள - தனி அலுவலரிடம் பல்வேறு தருணங்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த தீர்மானம் மற்றும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையையும் தனி அலுவலர்கள் (திரு அறிவுட்ச்செல்வன், திரு பொன்னம்பலம்) மேற்கொள்ளாத சூழலில், கடந்த ஜூலை மாதம், நகரின் பொது நல அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு - ஆணையர் திரு பொன்னம்பலத்திடம் மீண்டும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.
அதன் பிறகும் - ஆணையர் பொன்னம்பலம், இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து வினவும் போது எல்லாம், பொருத்தமில்லாத பதில்களையே வழங்கி வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து - இது சம்பந்தமாக, தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு மூலமாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி வசமும் இது சம்பந்தமான மனு வழங்கப்பட்டது. நடப்பது என்ன? குழுமம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனருக்கு அறிவுறுத்தினார்.
இருப்பினும் - இந்த கோரிக்கை சம்பந்தமாக, பல்வேறு தவறான தகவல்களை காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம், தனது உயர் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக - தபால் நிலையத்திற்கு கட்டிடம் கட்ட கோரப்பட்டுள்ள இடம் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு தேவைப்படும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இது முற்றிலும் பொய்யான கூற்றாகும்.
சர்வே எண் 83 / 84 இடத்தில், பல்வேறு காலியிடங்கள் உள்ளன. அவ்விடம் ஒன்றில் தபால் நிலையத்திற்கு கட்டிடம் கட்டுவதால், பேருந்து நிலையத்திற்கு எவ்வித இடையூறும் வராது. மேலும் - நகராட்சி நிறைவேற்றும் தீர்மானத்தை நிறைவேற்ற ஆணையர் கடமைபட்டவர்; தன்னிச்சையாக - மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மறுக்ககூடாது.
மேலும் - மக்கள் கோரிக்கைகளை மதிக்காமல், துச்சமாக எண்ணி புறந்தள்ளி வரும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வணிக கட்டிடத்தில், DCW தொழிற்சாலைக்கு என நகரில் செயல்புரியும் CITY UNION BANK (CUB) என்ற தனியார் வங்கிக்கு ATM மையம் அமைத்திட இடம் ஒதுக்கி தன்னிச்சையாக, சந்தேகத்திற்குரிய வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்மபலத்தின் இந்த தன்னிச்சை போக்கால் - அனைவரும் எளிதாக அணுகக்கூடிய, ஊரின் மையப்பகுதியை விட்டு தபால் நிலையம் சென்றுவிடும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.
இந்த உண்மையை விரிவாக விளக்கும் விதமாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மை செயலர் திரு ஹர்மந்தர் சிங் IAS அவர்களை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள், சென்னையில் நேற்று நேரடியாக சந்தித்தனர். அந்த சந்திப்பில் - இக்கோரிக்கை குறித்த அனைத்து விளக்கங்களும், எவ்வாறு மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் ஈடுபட்டு வருகிறார் என்பதும் விளக்கப்பட்டது.
கீழ்க்காணும் ஆவணங்களும் - அரசு செயலர் பார்வைக்கு வழங்கப்பட்டது.
// தபால்துறை - காயல்பட்டினம் நகராட்சிக்கு எழுதிய கடிதம்
// பொது நல அமைப்புகள், பொது மக்கள் - கட்டிடம் கட்ட ஆதரவு தெரிவித்து வழங்கிய மனு நகல்
// சர்வே எண்கள் 83 / 84 - FMB வரைபடங்கள்
// சர்வே எண்கள் 83 / 84 இடத்தில் எங்கெங்கே காலியிடங்கள் உள்ளன, கட்டிடங்கள் உள்ளன என விளக்கும் வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள்
// இது சம்பந்தமாக 2016 இல் காயல்பட்டினம் நகராட்சி நிறைவேற்றிய தீர்மானம் விபரம்
// சர்வே எண் 84 இடம் (சார்பதிவாளர் அலுவலகம், கால்நடைத்துறை மருந்தகம்) குறித்து - 1990 ஆம் ஆண்டு, அப்போதைய காயல்பட்டினம் பஞ்சாயத்து நிறைவேற்றிய தீர்மானம் விபரம்
கோரிக்கைகளை, விபரங்களை பொறுமையாக கேட்டறிந்த அரசு செயலர், இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரிடம் பேசுவதாக நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 3, 2018; 1:30 pm]
[#NEPR/2018030303]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|