காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஐந்து இடங்களில் பேவர் ப்ளாக் சாலைக்குப் பகரமாக தார் சாலை அமைக்க வைக்கப்பட்ட கோரிக்கையின் தற்போதைய நிலை குறித்து “நடப்பது என்ன?” குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் ஐந்து பிரதான சாலைகளான - அப்பாபள்ளி தெரு, சொலுக்கார் தெரு, மஃதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு - ஆகியவற்றில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், PAVER BLOCK கற்கள் கொண்டு சாலைகள் அமைக்க, காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்தப்புள்ளிகள் கோரியிருந்தது.
ஏற்கனவே, இது போல - நகரின் முக்கிய சாலையான சி-கஸ்டம்ஸ் சாலையினையும் PAVER BLOCK கற்கள் கொண்டு அமைத்திட நகராட்சி திட்டமிட்டபோது, நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில், பொது மக்கள், பொது நல அமைப்புகள் கையெழுத்து பெறப்பட்டு, அந்த முடிவு மாற்றப்பட்டது, எல்லாப்புகழும் இறைவனுக்கே! அதன் பிறகு - பல்வேறு தருணங்களில், காயல்பட்டினத்தில் PAVER BLOCK சாலைகள் அமைக்கக்கூடாது என கோரிக்கைகள், நகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் - பொது மக்களின் கருத்துக்களை துச்சமாக மதித்து தொடர்ந்து செயல்புரிந்து வரும் காயல்பட்டினம் நகராட்சி, TURIP 2017-18 திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.
இந்த தெருக்கள் சார்ந்த ஜமாஅத்துகளை ஒருங்கிணைத்து, நடப்பது என்ன? குழுமம் - சில வாரங்களுக்கு முன்பு, உள்ளாட்சித்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited அமைப்பின் மேலாண்மை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனுக்கள் வழங்கியிருந்தது.
மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட மனுவிற்கு கீழ்க்காணும் பதிலினை காயல்பட்டினம் நகராட்சி வழங்கியுள்ளது.
மனுவில் கண்டுள்ள சாலைகளானது TURIP 2017-18 திட்டத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. எனவே மேற்கண்ட நிர்வாக அனுமதி மாற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் - இது சம்பந்தமாக, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் திரு K.ராஜன், நடவடிக்கை எடுக்கக்கோரி - காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, அதன் நகலை - நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பியுள்ளார். இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 5, 2018; 12:00 pm]
[#NEPR/2018030502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|