காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா, 24.02.2018. சனிக்கிழமையன்று, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் தலைமையேற்றார். ஆங்கில ஆசிரியை வாழிஹா பர்வீன் வரவேற்றார். தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி – பள்ளியின் ஆண்டறிக்கையை தமிழிலும், ஆங்கில ஆசிரியை ஆர்.செல்வ நங்கை ஆங்கிலத்திலும் வாசித்தனர்.
கடந்த கல்வியாண்டில் 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் பள்ளியளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவியருக்கும், பாடங்களில் 100 சதவிகித தேர்ச்சிக்குக் காரணமான ஆசிரியையருக்கும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
முதன்மைக் கல்வி உதவியாளர் பேராசிரியர் எம்.சீனி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவரும் – காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றியதோடு, சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கினர்.
பின்னர், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆங்கில ஆசிரியை அமல ராணி நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது. இதில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|