காலத்தின் ஓட்டத்திற்கேற்ப இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து, செயற்கையில் மதிமயங்கி மனிதகுலம் ஓடிக்கொண்டிருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எளிதாகக் கிடைத்த பல உணவுப் பொருட்களும், பாத்திரங்கள் உள்ளிட்ட பாண்டங்களும், கட்டுமானப் பொருட்களும் இன்று ஊர் ஊராகச் சென்று தேடினாலும் கிடைக்காத நிலையிலுள்ளது.
குறிப்பாக உணவுப் பொருட்களில் பெரும்பாலும் செயற்கையை உள்வாங்கிக் கொண்டு, இயற்கையைத் துரத்தி விட்டுவிட்டதால் – இன்று கழிவுகள் தேங்கி, அவற்றை வெளியேற்ற மனித உடல் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
இன்று வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவற்றின் கேடுகள் குறித்து பல அரிய தகவல்களை மேற்கோள் காட்டி அன்றாடம் எண்ணிலடங்காத அளவுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
அதன் காரணமாகவோ என்னவோ – திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தானியங்கள், பழங்கள் என இயற்கையான உணவுப் பொருட்கள் மட்டுமே தொன்றுதொட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டு வந்த நிலை மாறி, உறைக்குள் அடைக்கப்பட்ட – வேதிப்பொருட்களை உள்ளடக்கிய பண்டங்களே இத்தனை காலமாய் அந்நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாறிருக்க, நிகழாண்டு ஜனவரி மாதம் துவங்கி காயல்பட்டினத்தில் சில மாற்றங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஜனவரி மாத நடுப்பகுதியில் நடைபெற்ற – காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெரு ஞானியார் இல்லத் திருமணத்தில் நடப்பு வழமைக்கு மாற்றமாக, நகர மக்கள் பல்லாண்டு காலம் பயன்படுத்தி, சில ஆண்டுகளுக்கு முன் மறந்துவிட்ட மண் கலசத்தில் குடிநீரும், மண் குவளையில் இறைச்சியும் – பருப்பும் வைக்கப்பட்டு, திருமண விருந்து பரிமாறப்பட்டது.
அடுத்த சில நாட்களில், மரைக்கார் பள்ளித் தெரு அரபி இல்லத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பில், சாக்லேட் – செயற்கைக் குளிர்பானங்கள் போன்ற நடப்பு பயன்பாட்டு வழமையைத் தவிர்த்து – கடலை மிட்டாய், எள் மிட்டாய், மணிலா கேக் உள்ளிட்ட பாரம்பரிய தின்பண்டங்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டோருக்குப் பகிரப்பட்டது.
நேற்று, சொளுக்கார் தெரு கம்பல்பக்ஷ் இல்லத்தில் நடைபெற்ற சுன்னத் நிகழ்ச்சியின் நிறைவில் – நிலக்கடலை மிட்டாய், வேர்க்கடலை மிட்டாய், எள் மிட்டாய், மணிலா கேக் ஆகியவற்றைக் கொண்ட பொதி அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இத்திருமணங்களிலும், இன்னும் சில திருமணங்களிலும் இதுபோன்று பாரம்பரிய தின்பண்டங்கள் பயன்படுத்தப்பட்டு, தற்போது அது நகரில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. “ரொம்...ப நாளைக்கு அப்புறம் கடலை மிட்டாய் சாப்பிடுறேன்...”, “மணிலா கேக் சாப்பிட்டு எவ்......ளோ நாளாச்சி...?”, “இத திங்கும்போதே பழசெல்லாம் நெனப்புக்கு வருதே...?” என பொதுமக்கள் பேசிச் செல்வதை இவ்விடங்களில் தவறாமல் கேட்க முடிந்தது.
மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் நவீன வழமையைத் தவிர்த்து, இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் நாவிதர்களைக் கொண்டே சுன்னத் செய்யப்பட்டமை கூடுதல் தகவல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரில் நாவிதர்கள் மட்டுமே சுன்னத் செய்து வந்த நிலை முற்றிலும் மாறிவிட்ட நிலையில், தற்காலத்தில் பத்தில் ஓரிரு குழந்தைகளுக்கு பாரம்பரியம் மாறாமல் நாவிதர்களாலேயே சுன்னத் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க, ரமழான் நோன்பு துறப்பு – இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பள்ளிவாசல்களில் கஞ்சி பரிமாற ப்ளாஸ்டிக் குவளைகள் தற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் ரமழான் மாதத்தில் மீண்டும் மண் குவளைகளில் கஞ்சி வழங்க ஒரு பள்ளிவாசலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், குவளைகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|