காயல்பட்டினம் நகர பொதுமக்களின் உணர்வுகளையும், நகரின் பாரம்பரியத்தையும் கருத்திற்கொண்டு, பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் சாவடியை அகற்றிடுமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் - காவல்நிலையங்கள் இல்லை, மதுக்கடைகள் இல்லை, திரையரங்குகள் இல்லை - என்பது அனைவரும் அறிந்தது. பல ஆண்டுகளாக இவ்வூரில் இவைகள் இல்லாமல் இருப்பதால், இவ்வூருக்கு மட்டும் பெருமை அல்ல; மாவட்டத்திற்கும் - ஏன் தமிழகத்திற்கும் - தான் பெருமை!
இவ்வூரில் - சமீப காலங்களாக, போதை பொருட்களின் புழக்கம், மதுபானங்களின் புழக்கம், கொள்ளை, கொலை, வெளிமாநிலத்தவர் / வெளிமாவட்டத்தினர் வருகையால் குற்றங்கள் என பல்வேறு பிரச்சனைகள் உருவாகியுள்ளன. இவைகள் குறித்து, அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் உள்ள மக்களால், பல மாதங்களாக, பல்வேறு தருணங்களில் - காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும் - நகர பொதுமக்களும், பொது நல அமைப்புகளும் - காவல்நிலையம் இல்லாத ஊர் என்ற பெயர் மட்டுமல்லாமல், குற்றங்கள் குறைவாக உள்ள ஊர் என்ற பெயரை மீண்டும் பெற - பல்வேறு முயற்சிகளை - பல தருணங்களில் காவல்துறையின் உதவியோடு - செய்தும் வருகிறார்கள்.
குற்றங்களை குறைக்க - அரசு விதிமுறைப்படி, பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா நிறுவிட நகராட்சிக்கு காவல்துறை அறிவுறுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது
கடற்கரை பகுதியில் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்களை அடையாளம் காண - நுண்ணறிவு துறை மூலம் காவல்துறை தகவல் சேகரித்து, உறுதியான - இறுதியான நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது
நகரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானங்களை விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு உறுதியான - இறுதியான நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது
போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடங்களில் அதிக போக்குவரத்து காவல்துறையினரை பணியில் அமர்த்தும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது
நகரில் வலம்வரும் / குடியேறி இருக்கும் வெளிமாநிலத்தவரை கண்காணிக்க காவல்துறை தரவுத்தளம் (DATABASE) உருவாக்கி நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது
ரோந்து பணிகளில் அதிக காவலர்களை, அதிக நேரம் காவல்துறை ஈடுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது
இந்த எதிர்பார்ப்புகள் இருக்கும் வேளையில் - காவல்நிலையம் இல்லாத ஊர் என்ற பெயர்பெற்ற இவ்வூரில், பேருந்து நிலையம் வளாகத்தின் வெளியில் காவல்நிலையம் சாவடி ஒன்று தற்போது நிறுவப்பட்டுள்ளது - அச்சத்தையும், அதிர்ச்சியையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
அமைக்கப்பட்டுள்ளது காவல்துறை சாவடி தான், காவல்நிலையம் அல்ல என்றாலும் - பிற்காலங்களில் காவல்நிலையம் அமைத்திட, இதனை ஒரு முன்னோடியாக தான் பெருவாரியான மக்கள் பார்க்கிறார்கள்.
ஒரே காவல்நிலையம், பல ஊர்களை கட்டுப்படுத்துகிறது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த, குற்றங்களை குறைத்திட ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காவல்நிலையம் / காவல்துறை சாவடி இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது காவல்துறை அறிந்த ஒன்று. எனவே - பொதுமக்களின் உணர்வுகளையும், நகரின் பாரம்பரியத்தையும் கருத்தில் கொண்டு, பேருந்து நிலையம் வளாகம் வெளியில் நிறுவப்பட்டுள்ள காவல்துறை சாவடியினை அகற்றிட உத்தரவிடக்கோரி - மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம், இன்று (12-3-2018) நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 12, 2018; 11:30 am]
[#NEPR/2018031201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|