சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் – காயலருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 65-வது செயற்குழு கூட்டம் கடந்த 02.03.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் பத்ஹா ஷிஃபா அல்-ஜஸீரா பார்ட்டி ஹாலில் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் முஹ்சீன் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் நயீமுல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதிக் கூட்டத்தை துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
சகோதரர் நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காயல் மண்ணின் மைந்தர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஜனாப் KAM அபூபக்கர் அவர்களையும் மற்றும் கலந்துகொண்ட அனைத்துச் செயற்குழு உறுப்பினர்களையும் வரவேற்றார்.
தலைமையுரை:
தலைமையுரை ஆற்றிய சகோதரர் ஹைதர் அலி, 2018-2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு தமது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், காயல் மண்ணின் மைந்தர் ஜனாப் KAM அபூபக்கர் அவர்களின் வருகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் அவர்களின் சிறுபிராயம் முதலான சமூக சேவைகளைப் பற்றியும், காயிதே மில்லத் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் அவர் ஆற்றிய பல சமுதாய சேவைகளை பற்றியும் இங்கு நினைவுகூர்ந்தார். அனைத்து சமுதாயத்தினருக்கும் ஆற்றிய பல நல்ல சமூக சேவைகளை அங்கீகரிக்கும் முகமாக, கடையநல்லூர் மக்கள் அன்பொழுக அரவணைத்து ஜனாப் KAM அபூபக்கர் அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
தற்பொழுது அரபு நாடுகளில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் மருத்துவம், சிறுதொழில், கல்வி சார்ந்த உதவிகளை அந்தந்த ஜமாஅத் மூலமே தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டுக் காயல் நல மன்றங்கள் ஒன்றிணைத்து அவர்களின் பங்களிப்பை ஸதகத்துல் ஜாரியா என்னும் நிரதர நன்மை பயக்கக்கூடிய சிறந்த திட்டங்களை செயல்படுத்த முனைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நமதூரில் படித்த சகோதரிகளுக்கு எந்த வகையில் நம்மால் வேலை வாய்ப்பினை எற்படுத்ட முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும், மேலும் நமதூரில் இருந்து IAS, IPS, பத்திரிகையாளர், வழக்கறிஞர் போன்றோரை காண்பது மிக அரிது, எனவே இதற்க்கு உண்டான மிகப் பெரிய அளவிலான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் கூறினார்.
இக்ராவின் வட்டியில்லா கல்வி கடன்
இக்ரா கல்வி அமைப்பின் சிறந்த திட்டமான, நகரில் மாணவர்கள் பயன் பெரும் பொருட்டு அவர்களுக்குக் கல்லூரி படிப்பினை தொடர வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தினை பற்றி சகோதரர் முஹம்மது நூஹு அவர்கள் விளக்கம் அளித்தார். இத்திட்டத்தில் எமது மன்றமும் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற இக்ரவின் கோரிக்கையை ஏற்று, செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று ரூபாய் 30,000/- வழங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது அவர்கள் வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் உரை:
உரையின் ஆரம்பமாக ரியாத் காயல் நலமான்றத்தின் இந்தச் செயற்குழு கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த மன்ற நிவாகிகளுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து பேசுகையில்:
ரியாத் காயல் நலமன்றம் (RKWA)-வின் சீரிய செயல் பாடுகள் மற்றும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்யும் மனப்பான்மையுடைய உறப்பினர்களை கொண்ட இம்மன்றத்தின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாகும், நமதூருக்கு தேவையான காரியங்களை செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நற்செயலுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் வழங்குவானாக என்று துஆச் செய்தார்.
கடந்த காலங்களில் தாம் ரியாத் மாநகரில் “ரியாத் காயல் பைத்துல்மால்” அமைப்புடன் இணைத்துப் பணியாற்றியதையும், அதைத் தொடர்ந்தது ஜித்தா காயல் நல மன்றத்தில் தாம் ஆற்றிய பணிகளை பற்றியும் நினைவு கூர்ந்தார்.
சகோதரர் ஹைதர் அலியின் தலைமை உரையை ஆமோதித்து பேசியவர், சிறு சிறு நல உதவிகள் நகரில் உள்ள ஜமாத்துகள் முன்னெடுத்து செய்வார்களேயானால் நாம் மற்ற சிறப்பு செயல் திட்டங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றார். இதற்காக அந்தந்த முஹல்லா ஜமாத்தினர் தனியாக பைத்துல்மால் ஏற்படுத்தி அதன் மூலம் நல உதவிகளைச் செய்துகொள்ளலாம் என்றார்.
நகரில் சிறுதொழில் செய்யும் ஆர்வமுடைய நிறையப் பெண்கள் இருக்கின்றார்கள், அவர்களை ஆர்வமூட்டி அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார். அரசு சார்பாக நமதூருக்கு கிடைக்க வேண்டிய நலத் திட்டங்களை பெற, நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முறையாக அணுக வேண்டும் என்றார்.
Kayal Schools Welfare Projects பற்றிக் குறிப்பிடுகையில், இத்துட்டத்துக்கு அரசாங்கமே பெரும் தொகையினை ஒதுக்குவதாகவும், அதை நாம், நமது சட்ட மன்ற உறுப்பினரை அணுகி நமதூரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நலத் திட்ட உதவிகளைச் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பெறலாம் என்று கூறினார். இதன்மூலம் இத்திட்டத்திற்காக நாம் ஒத்துக்கும் நிதியினை இன்ன பிற செயல் திட்டங்களில் பயன்படுத்தலாம் என்றார்.
நமதூர் அரசு மருத்துவ மனைக்குச் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தேவையான மருத்துவ உபகரணங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையை (ஹைகிரௌண்ட்) மத்திய அரசின் நிதிமூலம் Multi-Specialty மருத்துவமனையாகத் தரம் உயர்த்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும், மண்டல புற்று நோய் மையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாகவும் கூறினார், எனவே நமதூர் மக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
அறுபது வயதைக் கடந்த உலமாக்களுக்கு அரசு “உலமாக்கள் ஓய்வு ஊதிய திட்டம்” மூலம் மாதந்தோறும் ரூபாய் 1,500/- ஓய்வூதியமாக வழங்குகிறது என்றும், நகரில் உள்ள மருத்துவரிடம் வயது சான்றும், அவர் இருபது ஆண்டுகள் பணிபுரிந்ததற்கான சான்று கடிதமும் இணைத்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஓய்வு ஊதியம் கிடைக்கப்பெறும் என்று கூறினார்.
“முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம்” அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுவதாகவும், 1:2 என்னும் விகிதாச்சாரத்தில் நாம் ரூபாய் 1,000/- நிதியளித்தால் அரசாங்கம் ரூபாய் 2,000/- நிதி வழங்கும் என்றும், இதன் மூலம் சிறுதொழில் செய்ய முனையும் நமது சகோதரிகளுக்கு தையல் இயந்திரம் போன்ற உபகரணங்கள் கிடைக்கச்செய்யலாம் என்று கூறினார்.
பள்ளிவாசல்களின் மையவாடியின் சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் அரசாங்கம் நிதி ஒதுக்குவதாகக் கூறினார். இது போன்று இன்னும் அதிகமான அரசாங்க நல உதவித்திட்டம் இருப்பதாகவும், அதை நம் மக்களுக்கு முறையாகக் கொண்டுசேர்க்கும் பட்சத்தில் அவர்கள் அதன்மூலம் பயன் பெறுவார்கள் என்று கூறினார்.
நகரில் மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த நலவுதவிகளை மேற்கொள்ள ஷிஃபா மற்றும் இக்ரா அமைப்புகள் இருப்பது போல், அரசாங்க நலத் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடைய தனியாக ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை ரியாத் காயல் நல மன்றம் முன்னெடுத்து செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
சிறப்பு விருந்தினரின் உரைக்கு நன்றி தெரிவித்த சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள், ஜனாப் KAM அபூபக்கர் அவர்களின் ஆக்கப்பூர்வமான உரையில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை இனி வரும் செயற்குழுவில் கலந்தாலோசித்து அவற்றைச் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் கடந்த ஆறு வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நடப்பு ஆண்டிற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சகோதரர் இப்ராஹீம் ஃபைசல் மற்றும் சகோதரர் இர்ஷாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சகோதரர் PMS முஹம்மது லெப்பை, சகோதரர் வெள்ளி சித்தீக், சகோதரர் NM செய்யத் இஸ்மாயில், சகோதரர் SAC ஸாலிஹ் மற்றும் சகோதரர் இப்ராஹீம் இர்ஷத் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இறுதியாக சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
ரியாத் கா.ந.மன்றம் சார்பாக ரியாதிலிருந்து...
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA.
|