சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் மாணவர்கள் முதற்பரிசு, மூன்றாம் பரிசு ஆகியவற்றையும், சிறப்பு ஆறுதல் பரிசையும் வென்றுள்ளனர். அவர்களுக்கு ஜாவியாவில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
சென்னை - மண்ணடி, அங்கப்பன் தெருவிலுள்ள மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி வரும் மஆரிஃபுல் ஹுதா திருக்குர்ஆன் மனனப் பயிலகத்தின் (ஹிஃப்ழு மத்ரஸா) பட்டமளிப்பு விழா, 25.02.2018. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதனையொட்டி, தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில்,
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த – ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் உடைய மகன் ஹாஃபிழ் எஸ்.எம்.அப்துல் காதிர் ஆமிர், முதலிடம் பெற்று, 25 ஆயிரம் ரூபாய் பணப்பரிசைப் பெற்றார்.
கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.ஐ.ஷெய்க் நூருத்தீன் உடைய மகன் ஹாஃபிழ் எஸ்.என்.தைக்கா தம்பி மூன்றாமிடம் பெற்று 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசைப் பெற்றார்.
சதுக்கைத் தெருவைச் சேர்ந்த இசட்.ஏ.முஹம்மத் ஃபைஸல் உடைய மகன் ஹாஃபிழ் எம்.எஃப்.அப்துல்லாஹ் – சிறப்பு ஆறுதல் பரிசு பெற்ற 10 போட்டியாளர்களுள் ஒருவராகத் தேர்வு பெற்று, 1000 ரூபாய் பணப்பரிசைப் பெற்றார்.
இவ்விழாவில், ஏராளமான காயலர்கள் உட்பட – இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டினர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
தம் கல்லூரியின் சார்பில் கலந்துகொண்ட இம்மூவரையும் பாராட்டும் வகையில், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில், பாராட்டு நிகழ்ச்சி – 04.03.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணிக்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமை தாங்கினார். அதன் ஆசிரியர் மவ்லவீ கே.ஸலாஹுத்தீன் மளாஹிரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ வாழ்த்துரையாற்றினார்.
முதற்பரிசை வென்ற மாணவர் ஹாஃபிழ் எஸ்.எம்.அப்துல் காதிர் ஆமிர், மூன்றாம் பரிசை வென்ற ஹாஃபிழ் எஸ்.என்.தைக்கா தம்பி, சிறப்பு ஆறுதல் பரிசை வென்ற ஹாஃபிழ் எம்.எஃப்.அப்துல்லாஹ் ஆகியோருக்கு – கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் - முறையே எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, கல்லூரியின் தலைவர் முஹம்மத் நூஹ், எம்.எஸ்.எம்.முஹம்மத் மரைக்கார் ஆகியோர் சால்வை அணிவித்து, பொற்கிழி வழங்கினர்.
கல்லூரியின் நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், அனைத்து மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சாதனை மாணவர்களைப் பாராட்டினர். கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஒய்.எம்.அப்துல்லாஹ் ஃபாஸீ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத் |