ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இதுகுறித்த அம்மன்றத்தின் நிகழ்வறிக்கை:-
துபை காயல் நல மன்றம் நடத்திய 41வது காயலர் சங்கமம்!
தித்திக்கும் திருமறை ஓதும் கிராஅத் போட்டியுடன் காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. காலை 11 மணிக்கு ஆரம்பித்த இப்போட்டியில் மொத்தம் 18 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு தங்களது இனிமையான குரலால் குர்ஆன் வசனங்களை மிக அழகாகவும், தெளிவாகவும் ஓதினார்கள். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒரு பக்கம் காயலர்கள் தங்கள் குடும்பத்துடனும், தனித் தனியாகவும் வருகை தந்து கொண்டிருந்தனர். வரவேற்புக் குழுவினர் மும்முரமாக இயங்கி வருகை தருவோருக்கு சீட்டுகள் வழங்கிக்கொண்டிருந்தனர். காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் உபயத்தில் நவீன மின்னணு இயந்திரங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனால் தாள்களில் எழுதுவது, சரி பார்ப்பது, தகவல்களைப் புதுப்பிப்பது என்ற பணிகள் இலகுவாயின. வருபவர்களின் பிறப்பு வருடத்தை அடையாளமிட்டு அழுத்தினால் அவர்களின் பெயர்கள் உடனடியாக திரையில் வர, ஒரு கிளிக்கில் அவர்களின் பெயரும், அடையாள எண்ணும் கொண்ட அச்சடிக்கப்பட்ட சீட்டை இயந்திரம் தந்து விடும். இதனால் பதிவு செய்யும் நேரம் நிறைய மிச்சமானது.
சூடான சுண்டலும், சுவையான தேனீரும் வந்தவர்களை வரவேற்ற அடுத்த வரவேற்புக் குழு! பரஸ்பரம் சந்திப்புகளும், ஸலாம்களும் பரிமாறப்பட்டு, நலம் விசாரித்த பிறகு அடுத்த கடமையை நிறைவேற்றுவதற்காக காயலர்கள் அருகிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதை நோக்கி விரைந்தனர்.
கடந்த 06.04.2018 வெள்ளிக்கிழமை துபை ஸஃபா பூங்கா இந்தக் கண்கொள்ளா காட்சிகளைப் பதிவு செய்தது. ஆம்! 41வது காயலர் சங்கமம் கண்கொள்ளாக் காட்சியாகவும், மட்டற்ற மகிழ்ச்சியாகவுமே ஒவ்வொரு காயலருக்கும் திகழ்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நீண்ட தூரங்களிலிருந்து வரும் தங்கள் சொந்தங்களை, பந்தங்களை, நண்பர்களைப் பார்க்கும் ஆவல் ஒவ்வொரு காயலரின் முகத்திலும் தென்பட்டது.
ஜும்ஆ தொழுகை முடிந்ததும் காயலர் தின நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ஆலிஜனாப் அபூபக்கர் ஷாதுலி அவர்கள் அழகிய குரலில் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை சிறப்பாக துவக்கி வைத்தார். பின்னர் செயற்குழு உறுப்பினர் சாளை சலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இக்பால் ஹாஜியார், ரியாத் காயல் நல மன்றத் தலைவர் முஹம்மத் நூஹு ஸாஹிப், அபூபக்கர் ஷாதுலி ஆகியோரையும், அபூதாபி காயல் நல மன்றத் தலைவர் பொறியாளர் மக்பூல் அவர்களையும், திரளாக வருகை தந்த ஆண்கள், பெண்கள், காயல் இளவல்கள் அனைவரையும் அவர் வரவேற்றார். அவரே நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
மன்றத் தலைவரின் தலைமையுரையுடன் நிகழ்ச்சி சூடு பிடித்தது. அவர் தனது உரையில் கூறியதாவது:
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை நாம் கூடுகிறோம். ஒன்று பொதுக்குழுக் கூட்டமாகவும், இன்னொன்று காயலர் தினமாகவும் நடத்தப்படுகிறது. இந்த ஒன்றுகூடல்களில் கிராஅத் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வருகை தந்தவர்களைப் பதிவு செய்யும் நோக்கம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளவும், வேலை தேடி வந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவுமே. புதிய கருத்துகளையும், ஆலோசனைகளையும் இங்கே வந்திருப்பவர்கள் தர வேண்டும். சந்தா பணம் கொடுக்காதவர்கள் உடனே உரியவர்களிடம் பணம் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
அடுத்ததாக புதிதாக வந்தவர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மேடைக்கு வந்து தங்கள் பெயர், தெரு, படிப்பு, வேலை விவரங்களைத் தெரிவித்தனர். வேலை தேடி வந்தவர்கள் தங்கள் துறையைத் தெளிவு படுத்தினார்கள்.
பின்னர் அபூதாபி காயல் நல மன்ற புதிய தலைவர் பொறியாளர் மக்பூல் அவர்கள் உரை நிகழ்த்தினார். “ஐந்து வருடங்களுக்கு முன்பு துபை-அபூதாபி இணைந்து செயல்பட்டோம். தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகிறோம். நமது நோக்கம் நமதூர் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பளிப்பது, கல்வி, மருத்துவ உதவிகள் செய்வது போன்றவையே. பெரிய திட்டங்களை அபூதாபி காயல் நல மன்றம் தனியாக செயல்படுத்த முடியாது. அதற்கு இதர காயல் நல மன்றங்களின் கூட்டு முயற்சி தேவை” என்று அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய மன்றத் தலைவர் அவர்கள் தன் மகன் ஜமீலுக்கு எதிர்வரும் 04.08.2018 அன்று திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அதில் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு, “இந்தத் திருமணத்தை அதிக செலவில்லாமல் நடத்திட திட்டமிட்டுள்ளோம். பொதுவாக திருமணச் செலவுகளைக் குறைக்க வேண்டும். திருமண அழைப்பிதழ்களை அதிக செலவில் அடிக்காமல், வாட்ஸ்அப், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலம் அனுப்ப வேண்டும். அதிகப்படியான திருமணச் செலவுகளைக் குறைத்து அந்தத் தொகையை வைத்து “திருமண நிதி” (Marriage Fun) என்று ஒன்றை உருவாக்கலாம். அதனை ஏழைகளுக்கு திருமணம் புரிந்திட அளித்து உதவலாம்” என்று ஆலோசனை வழங்கினார்.
அடுத்து பேசிய ரியாத் காயல் நல மன்றத் தலைவர் முஹம்மத் நூஹு அவர்கள், “சஊதியில் இப்படி திறந்தவெளியில் ஒன்று கூட முடியாது. ஆனால் இங்கே இயற்கை அழகு பொருந்திய பூங்காவில் ஒன்று கூடியுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. மன்றத் தலைவர் இளைய தலைமுறையினரின் புதிய சிந்தனைகள், புதுப் புது யோசனைகள் தேவை என்று சொன்னார்கள். அதுமாதிரியான வளர்ச்சிப் பணிகளுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். இக்ரா பணிகளை இலகுவாக்க மென்பொருள் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். நாம் உதவிகள் செய்வது ஒருபுறமிருக்க, அரசு நலத் திட்டங்கள் எத்தனையோ நமது மக்களுக்குத் தெரியாமல் இருக்கின்றன. அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தி அதன் பலன்களை மக்களுக்குக் கிடைக்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் இக்பால் ஹாஜியார் தனது உரையில், “திருமண நேரத்தில் தெருவை அடைக்காமல் மொகுதூம் பள்ளி வளாகத்தில் திருமணம் நடத்துவதற்கு அரங்கம் அமைக்கப்படுகிறது. அதுபோன்று சிறுமியருக்கான மக்தபும் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. “புதிய தலைமுறையினர் முன்வந்து காயல் நல மன்றப் பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டும்” என்று சாளை சலீம் வேண்டுகோள் விடுத்தார்.
உறுப்பினர்கள் நமதூர் நலனுக்கான பல கருத்துகளை நிகழ்ச்சியில் பதிவு செய்தனர்.
செயற்குழு உறுப்பினர் யூனுஸ் அவர்கள் தன் மகளை தன் சகோதரர் புகாரீ காக்கா மகன் திருமணம் முடிப்பதாகவும், எதிர்வரும் 04.08.2018 அன்று நடைபெறும் தங்கள் இல்லத் திருமணத்திற்கு அனைவரும் வந்து கலந்து சிறப்பித்துத் தரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அதனையடுத்து செயற்குழு உறுப்பினர் எஸ்.எல். காஜா அவர்கள் எதிர்வரும் 05.08.2018 அன்று நடைபெறும் தனது இல்லத் திருமணத்திற்கு அனைவரும் வந்து கலந்து சிறப்பித்துத் தரும்படி அழைப்பு விடுத்தார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் காயல் மணம் நிரம்பிய களறிச் சாப்பாடு பரிமாறப்பட்டது. அறுசுவை உணவுண்டு அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. சிறுவர், சிறுமியருக்கான போட்டிகளை சாளை சலீம் குழுவினர் நடத்தினர்.
பெரியோர்களுக்கான வினாடி வினா போட்டியினை செயற்குழு உறுப்பினர் ‘குயிஸ் மாஸ்டர்’ எம்.யூ. ஷேக் நடத்தினார். சாக்குப் போட்டியும் நடைபெற்றது. பின்னர் பந்து கைமாற்றும் போட்டி நடைபெற்றது.
அஸ்ர் இடைவேளையில் தேனீரும், பருப்பு வடையும் பரிமாறப்பட்டன. பின்னர் பரிசளிப்பு விழா ஆரம்பமானது.
முன்னதாக பெண்களுக்கென மொத்தமாக மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஆண்களில் காலை 11 மணிக்குள் வந்தோர், ஜும்ஆவுக்கு முன் வந்தோர், ஜும்ஆவுக்குப் பின் வந்தோர் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசுகளுக்கு அனுசரனை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நிகழ்ச்சியில் நன்றி நவிலப்பட்டது.
அனுசரனை வழங்கியோர்:
தங்க நாணயங்கள்:
1. அரிஸ்டோ ஸ்டார் (ஜே.எஸ்.ஏ. புகாரீ)
2. ஹலி மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ் (சாளை சலீம்)
பரிசுப் பொருட்கள்:
1. டோஷிபா எலிவேட்டர்ஸ் - 1000 திர்ஹம் (விஎஸ்எம் அபூபக்கர்)
2. ஆரியாஸ் நிறுவன பங்குதாரர் பால் முஹம்மத் - 1000 திர்ஹம்
3. V.S.T. ஷேக்னா
2. காழி அலாவுத்தீன்
3. ரியாஸ்
4. எம்.யூ. ஷேக்
நிகழ்ச்சியின் இறுதியாக மன்றச் செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றியுரை நவின்றார். கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்தவர்கள், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தவர்கள், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனங்களை மேற்பார்வை செய்தவர்கள், அகமகிழ்ச்சியுடன் அதிகமாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நீக்கமற நிழற்படங்கள் எடுத்து நீங்கா நினைவுகளை நிலைப்படுத்திய ஸுப்ஹான், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ ‘டி’ பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தந்தவர்கள், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து, அவர்களது தொடர்புகளைப் புதுப்பித்த வரவேற்புக் குழுவைச் சார்ந்த சகோதரர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரனை வழங்கியவர்கள் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
வழமை போன்று யாரையும் எதனையும் எதிர்பார்க்காமல் நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து மொத்த நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவுகள் பிரியும்பொழுது உள்ளபடியே கவலை வரும். சொந்தங்கள் பிரியும்பொழுது துக்கம் தொண்டையை அடைக்கும். அதே போன்று நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரிய மனமின்றி பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர்.
அனைத்து நிழற்படங்களையும் காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
https://photos.google.com/share/AF1QipOS2XHnBAmmPc_U8ZcLno7qCUKPknKlZbmIz5-WAWIulYvuaVSdxnlIKdjiOJ9KdQ/photo/AF1QipPaOrMEgbMPQgezdiPQ0USYr2VAeqp6PZn0xD4t?key=NXpPQTltYnFOb1JQTzhlcFZQejNOYTNmcWxFbHB3
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
M.S.அப்துல் ஹமீத்
|