அரசு சட்ட விதிகளின் படி, நகராட்சியின் நிதிநிலை, பணிகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்குத் தகவலறிக்கையாக வெளியிடுமாறு, “நடப்பது என்ன?” தொடர்ந்த வழக்கில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, முறைமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2009 ஆம் ஆண்டு, தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (பொது வெளிப்பாடு) விதிகள் - தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
அதன்படி - ஒரு உள்ளாட்சிமன்றம் குறித்த பல்வேறு முக்கிய அடிப்படை தகவல்கள், நிதி நிலை, வெளியிடப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் விபரம், நிறைவேற்றப்பட்ட பணிகள் விபரம், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் விபரம், குடிநீர் இணைப்பு உட்பட அடிப்படை சேவைகளை பொது மக்கள் எவ்வாறு பெறுவது, பெறும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை எவ்வாறு தீர்ப்பது போன்ற தகவல்கள் - குறிப்பிட்ட காலகட்டங்களில், தொடர்ச்சியாக - உள்ளாட்சிமன்றத்தின் இணையதளத்திலும், உள்ளாட்சி மன்ற அலுவலக தகவல் பலகையிலும் - வெளியிடப்படவேண்டும்.
இது குறித்து பலமுறை காயல்பட்டினம் நகராட்சிக்கு நினைவூட்டல் செய்தபின்பும், அத்தகவல்களை காயல்பட்டினம் நகராட்சி புதிப்பிக்காததை அடுத்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் (TAMILNADU LOCAL BODIES OMBUDSMAN, நடப்பது என்ன? குழுமம் சார்பாக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் - தனது ஆணையை, நடுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
நடுவத்தின் ஆணை வருமாறு:
2009 ஆம் ஆண்டு அரசினால் வெளியிடப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொதுத்தகவல் விவரங்களை வலைத்தளம் மூலமாகவோ அல்லது தகவல் பலகை மூலமாகவோ அல்லது அரசு குறிப்பிடும் வகையில் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு இம்முறைமன்ற நடுவம் அறிவுறுத்தி ஆணையிடுகிறது.
நிர்வாகத்தின் வெளிப்பதைத்தன்மையை நிரூபிக்கும் பொருட்டு பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இது போன்ற நேர்வுகளில் செயல்படவேண்டுமென்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மேல்குறிப்பிட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட பொது விவரங்களை பொது மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் பிற நகராட்சிகளும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுமாறு திருநெல்வேலி நகராட்சிகள் மண்டல இயக்குனருக்கு அறிவுறுத்தியும் இம்முறைமன்ற நடுவம் ஆணையிடுகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 24, 2018; 5:30 pm]
[#NEPR/2018042403]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|