காயல்பட்டினம் நெய்னார் தெரு – கீழ நெய்னார் தெரு ஆகிய இரண்டு தெருக்களுக்கிடையே – காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தையொட்டிய மின் கம்பத்தில், இன்று நள்ளிரவில் உயரழுத்த மின்சாரத்தைக் கடத்திச் செல்லும் மின் கம்பி வடம் ஒன்று அறுந்து தொங்கியது.
அதுபோல, அதே பகுதியில் மற்றோர் இடத்திலும் மின் கம்பி வடம் அறுந்து தொங்கி, சாலையோரத்தில் நின்ற கார் மீது படிந்தவாறு கிடந்தது.
அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அப்பக்கமாகச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சில பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக – அங்கு யாரும் நெருங்கி விடாத அளவில் பாதுகாப்பாக நின்றுகொண்டனர்.
நெய்னார் தெருவைச் சேர்ந்த ‘அம்பலம்’ ஜாஃபர் ஸாதிக் என்ற சமூக ஆர்வலர், இக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியுற்று, உடனடியாக காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொள்ள, அங்குள்ள தரைவழி தொலைபேசியில் இணைப்பே கிடைக்கவில்லை என்பதால், காயல்பட்டினம் மின் வாரிய துணைப் பொறியாளரின் கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு பிரச்சினையைக் கூறியிருக்கிறார்.
“காலை 8 மணிக்கு வயர் மேன் வருவார்” என அவர் கூற, “உயிருக்கு ஆபத்தான நிலையில் மின் கம்பி வடம் தொங்கிக் கொண்டிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும்” என்று அவர் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பிரச்சினைக்குக் காது கொடுக்காமல், அலட்சியமாகப் பேசியதாகக் கூறிய அவர், உடனடியாக, “நடப்பது என்ன?” குழுமத்தில் உடனடியாக தனது புகாரைப் பின்வருமாறு பதிவு செய்தார்:-
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். நான் காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவிலிருந்து அம்பலம் ஜாஃபர் ஸாதிக்... (LTS கோல்ட் ஹவுஸில் முன்பு பணியாற்றினேன்.)
(1) எங்கள் வீட்டின் முன்புறமுள்ள மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்கிலிருந்து புகை வருகிறது. கடுமையான - எரிந்த வாசனை வீடு முழுக்க வீசுகிறது.
(2) எங்கள் பகுதி முழுக்க Low voltage காரணமாக, மின் சாதனப் பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இரவு முழுக்க மின் விசிறியும் சரியாக இயங்கவில்லை.
இக்குறைகளைச் சரி செய்வதற்காக, நமது காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தின் தரைவழி தொலைபேசி எண்ணுக்கு (+91 4639 283202) பலமுறை தொடர்புகொண்டும் யாரும் எடுக்கவில்லை. இக்கட்டான காலகட்டங்களில் யாரேனும் தொடர்புகொள்வதற்காகவே அந்த எண் உள்ளது என்றும், அவசர அடிப்படையில் பழுதுகளைச் சரி செய்வதற்காகவே மின் வாரிய அலுவலகத்தில் 24 மணி நேரமும் யாரேனும் இருப்பார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் எனக்கு மின் வாரிய அலுவலகத்திலிருந்து தீர்வு கிடைக்கவில்லை.
சரி, புதிதாக ஒரு AE வந்திருக்கிறாரே...? அவருக்குத் தொடர்புகொண்டு சொல்லலாம் என அவரது கைபேசி எண்ணுக்கு இன்று அதிகாலையில் தொடர்புகொண்டேன்.
“உங்க லைன் மேனுக்குச் சொல்லுங்க...” என்றார்.
“சார்! உங்க அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டேன்... யாரும் எடுக்கவில்லை... லைன் மேனும் யாரும் எடுக்கவில்லை... இன்று காலை 9 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு என்றும் மின்தடை செய்வீர்கள். நேற்றிலிருந்து எங்களுக்கு சரியான மின் வினியோகம் இல்லை... என்ன செய்ய?” என்று நான் கேட்டேன்.
“காலங்காத்தால ஏன் எனக்கு ஃபோன் செய்து தொந்தரவு பண்றீங்க? 8 மணிக்கு லைன் மேன் வந்து சரி செய்வார்” என்று மிக அலட்சியமாக பதில் சொல்கிறார்.
“சார்! நாங்கள் எங்கள் குறைகளை உங்களிடம்தான் சொல்ல முடியுமே தவிர, நாங்களே மின் கம்பத்தில் ஏறி சரி செய்ய இயலாது! தெரு விளக்கு தீப்பிடித்து எரிகிறது என்று நான் கூறிய பிறகும் மிகவும் அலட்சியமாக பதில் சொல்கிறீர்களே...?” என்று ஆதங்கத்துடன் கூறினேன்.
ஆக மொத்தத்தில், இந்த நிமிடம் வரை (24.04.2018. செவ்வாய்க்கிழமை காலை 06.45 மணி) எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
தயவுசெய்து, நமது “நடப்பது என்ன?” குழும அட்மின்கள் இது விஷயத்தில் தலையிட்டு, எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தர அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
இப்படிக்கு,
அம்பலம் ஜாஃபர் ஸாதிக்,
கீழ நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
தொடர்புக்கு: +91 7010258054)
இவ்வாறு அவரது புகார் அமைந்திருந்தது. இதே போன்ற புகார் பெரிய நெசவுத் தெருவிலிருந்தும் “நடப்பது என்ன?” குழுமத்தால் பெறப்பட்டு, உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இப்புகாரையடுத்து, ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திலுள்ள உயரதிகாரி, தூத்துக்குடியிலுள்ள மின்வாரிய மண்டல உயரதிகாரி ஆகியோரது தொடர்பு எண்களை “நடப்பது என்ன?” குழுமத்தினர் குழுமத்தில் பதிவு செய்து, அவர்களைத் தொடர்புகொள்ளக் கூறியதோடு, தாங்களும் நிர்வாகத்தின் சார்பில் அவ்வதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர்.
அடுத்த சில மணித்துளிகளில் நிகழ்விடம் வந்த மின் வாரிய அலுவலர்கள் விரைவாக அப்பழுதுகளைச் சரிசெய்தனர்.
இரவு நேரங்களில் இதுபோன்று - மின்சாரம் தொடர்பான விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகையில், காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திலுள்ள தரைவழி தொலைபேசியைத் தொடர்புகொண்டால் எப்போதுமே Engage ஒலி கேட்டவண்ணமே உள்ளதாகவும், இவ்வாறு தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினர்.
இரவு நேர புகார்களுக்கு சரியான நடவடிக்கைகளை உடனுக்குடன் வழங்கிட, மின் வாரிய உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
|