தூத்துக்குடி – திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும், காயல்பட்டினம் வழியாகவே செல்ல வேண்டும் என வலியுறுத்தும் வாசகம் அடங்கிய அறிவிப்புப் பலகை, திருச்செந்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் 3 இடங்களில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள் பல - பல ஆண்டுகளாக, காயல்பட்டினம் வழியை புறக்கணித்து சென்று வந்தன. இது சம்பந்தமாக - ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக, தொடர் மனுக்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இதன் பயனாக - முந்தைய நிலவரத்தை விட கூடுதலான பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக தற்போது செல்கின்றன. இருப்பினும் - காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பல்வேறு பேருந்துகள் - தற்போதும், காயல்பட்டினம் வழியை புறக்கணித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் திருச்செந்தூர் பேருந்து நிலையம் வளாகங்களில், காயல்பட்டினம் வழியாக அரசுப்பேருந்துகள் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை நிறுவ அனுமதிகோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக சில மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக, தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் IAS யை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து விளக்கங்கள் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில், திருச்செந்தூர் மார்க்கத்தில் இயங்கும் பேருந்துகள் நிற்கும் இடத்தில, திருச்செந்தூர் மார்க்கத்தில் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளும், காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை, நடப்பது என்ன? குழுமத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல் 11 அன்று நிறுவப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர் அனீஸ் சேகர் IAS யை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் மதுரையில் சந்தித்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நிறுவப்பட்ட அறிவிப்பு பலகை போல், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் நிற்கும் இடத்தில நிறுவிட அனுமதி கோரினர்.
விபரங்களை கேட்டறிந்த மதுரை மாநகராட்சி ஆணையர், காயல்பட்டினம் வழியாக பேருந்துகள் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு பலகை நிறுவிட அனுமதியினை உடனடியாக வழங்கினார். அதனை தொடர்ந்து - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, அறிவிப்பு பலகை - மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில், நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் - ஏப்ரல் 18 அன்று - நிறுவப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அதன் தொடர்ச்சியாக - திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி மனோரஞ்சினி அவர்களை, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சில தினங்களுக்கு முன்பு சந்தித்து, திருச்செந்தூர் பேருந்து நிலைய வளாகத்திலும், அறிவிப்பு பலகைகளை நிறுவிட அனுமதி கோரினர். செயல் அலுவலரின் அனுமதியை தொடர்ந்து, இன்று - திருச்செந்தூர் பகத் சிங் பேருந்து நிலைய வளாகத்தில், மூன்று இடங்களில் அறிவிப்பு பலகை, நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் நிறுவப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
திருச்செந்தூர் பேருந்து நிலைய வளாகத்தில், இந்த அறிவிப்பு பலகையை நிறுவிட முழு ஒத்துழைப்பு நல்கிய மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS மற்றும் திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி மனோரஞ்சினி ஆகியோருக்கு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 22, 2018; 2:15 pm]
[#NEPR/2018042202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|