உலக புத்தக நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் எழுத்து மேடை மையத்தின் சிறார் பிரிவான ‘கண்ணும்மா முற்றம்’, அரசு நூலகம் ஆகியன இணைந்து, சிறாருக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியை 21.04.2018. சனிக்கிழமையன்று 09.30 மணி முதல் 13.00 மணி வரை நடத்தின.
காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப் அனைவரையும் வரவேற்றார். கத்தீப் மாமுனா லெப்பை நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
கர்நாடக மாநிலம் - பெங்களூருவிலிருந்து, ‘பஞ்சு மிட்டாய்’ எனும் தலைப்பிலான சிறார் இதழை நடத்தி வருகிற - இந்நிகழ்ச்சிக்கென்றே வரவழைக்கப்பட்டிருந்த கதைசொல்லிகளான ஜெயக்குமார், அவரது மனைவி ஷர்மிளா ஜெயக்குமார் ஆகியோர் கதை சொல்லல் நிகழ்ச்சியை நடத்தினர்.
குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறி - பாடல், குறு நாடகம், வேடிக்கை விளையாட்டு என பல வடிவங்களில் நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்தி, குழந்தைகளின் கலையார்வத்தைத் தூண்டிவிட்டனர். நிறைவில், அங்கிருந்த பெற்றோரிடம் அவர்கள் கூறியதாவது:-
எல்லாமே இயந்திரமயமாகிப் போன இக்காலத்தில், எங்கு பார்த்தாலும் – குழந்தைகள் தம் வீடுகளிலுள்ள பெரியவர்களின் தொடுதிரை கைபேசிக் கருவிகளுடன் மூழ்கிப் போவது மிகச் சாதாரணமாகிவிட்டது... இதன் காரணமாக, துள்ளித் திரிய வேண்டிய அவர்களது பிஞ்சுப் பருவம் பாழாகி, உடல் நலம் கெட்டு, தன்னலச் சிந்தனை – பிடிவாதம் போன்ற கெட்ட பண்புகள் பெருகிவிடுகின்றன...
“பா...வம்! எல்லா நாளும் ஸ்கூலுக்குப் போன பிள்ளைங்களுக்கு இப்பத்தானே லீவு கெடச்சிருக்கு...? கொஞ்சம் ஃபோன வச்சி வெளையாடிட்டுத்தான் போகட்டுமே...?” என்று பெற்றோர் கருதி, அதன்படி செயல்படுவதே இக்குறைபாட்டுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளது...
குழந்தைகளுக்கு கருவிகளைக் கைகளில் கொடுக்காமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்திடத் தூண்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்... இதைத் தொடர்ந்து அவர்களின் அன்றாடப் பழக்கவழக்கத்தில் கொண்டு வருவது பெற்றோர் கைகளில்தான் உள்ளது!”
என்றனர். இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 மழலையர், சிறுவர் – சிறுமியர் கலந்துகொண்டனர்.
எழுத்து மேடை மைய நிர்வாகிகளுள் ஒருவரும் – காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை ஆசிரியர்களுள் ஒருவருமான. அ.ர.ஹபீப் இப்றாஹீம் எழுதி வெளியான ”ஊஞ்சல் தாத்தா” எனும் சிறுவர் நூல், சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்ற அனுசரணையில் – நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
எழுத்து மேடை மைய நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூறியதோடு, நிகழ்ச்சியை நடத்திய ஜெயக்குமாருக்கும், நூலக ஆர்வலர் முத்து குமார் ஷர்மிளா ஜெயக்குமாருக்கும் – எழுத்து மேடை மையம் சார்பில் நினைவுப் பரிசாக கதர் ஆடைகளை வழங்கினர்.
‘பஞ்சு மிட்டாய்’ சிறார் இதழின் – இதுவரை வெளியாகியுள்ள இரண்டு இதழ்களை ஜெயக்குமார் – அரசு நூலகர் முஜீபிடம் நூலகத்திற்கான அன்பளிப்பாக வழங்கினார்.
|