கத்தர் காயல் நல மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம், ஜுன் 01ஆம் நாளன்று – இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் என, விளையாட்டுப் போட்டிகளுடன் குடும்ப சங்மக நிகழ்ச்சியாக நடைபெற்ற அதன் 100ஆவது செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 100ஆவது செயற்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல், 13.04.2018. வெள்ளிக்கிழமையன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு மதிய விருந்துடன், கத்தர் நகரிலுள்ள Al Biddha பூங்காவில் மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் பாஜுல் கரீம் அவர்கள் தலைமையில் நனிசிறப்புடன் நடந்தேறியது . மன்றத்தின் 100வது செயற்குழு கூட்டத்தை சிறப்பிக்கும் வண்ணம் கார்மேகமும் திரண்டு வந்து அனைவரையும் வரவேற்றது.
துவக்கமாக மன்றத்தின் 100வது செயற்குழுவான இந்த நிகழ்வை ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப் பாஜுல் கரீம் அவர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஹாஃபிழ் கோனா சதக்கத்துல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
வாழ்த்துரை :-
கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும், மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப் யூனுஸ் அவர்கள் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் மன்ற தலைவர் ஜனாப் மீரான் அவர்கள் விடுமுறை காரணமாக தாயகம் சென்றுள்ளதால், அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தலைமையுரை :-
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப் பாஜுல் கரீம் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கின்ற மன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் அனைவர்க்கும் எனது அன்பான ஸலாம் "அஸ்ஸலாமு அலைக்கும்"
குறைவான உறுப்பினர்களை கொண்டு ஆரம்பமான நம் மன்றம் இன்று இறைவன் கிருபையால் நிறைவான உறுப்பினர்களோடு 100வது செயற்குழுவில் அடியெடுத்து வைத்திருப்பதில் அளவிலா ஆனந்தம். இந்த இனிய தருணத்தில் நம் மன்றத்திற்காக உழைத்த, உதவிய அனைத்து நல்லுள்ளகளுக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன்.
மேலும் மன்றத்தின் செயல்பாடுகளை பட்டியலிட்டு விவரித்த அவர், மன்றத்தின் சார்பில் நடைபெற்ற "மாடித்தோட்டம்" , "உணவே மருந்து" போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் ஏழை மாணவ-மாணவியருக்கு உண்டான பள்ளிச் சீருடை திட்டம், புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஆகியன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்தகைய திட்டங்கள் நம் மன்றதிருக்கென பிரத்தியேக தனித்துவத்தை பெற்று தந்திருக்கின்றது.
இந்த தனித்துவம் தான் மக்களின் மத்தியில் மன்றத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுடன், நமது செயல்பாடுகளை இன்னும் வீரியத்துடன் செயல்பட தூண்டுகிறது. நாம் யாவரும் ஒற்றுமையுடன் இன்னும் சிறப்புடன் செயலாற்ற வேண்டுகிறேன்.
பின்னர் நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து கீழ்காணும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது
இரங்கல் தீர்மானம்
அண்மையில் காலமான ஜித்தா காயல் நல மன்ற அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களது தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மறுமை வாழ்விற்காக துஆ செய்யப்பட்டது.
நிதிநிலை அறிக்கை
மன்ற பொருளாளர் ஹுசைன் ஹல்லாஜ் அவர்கள் இந்த பருவத்திற்கான நிதிநிலை அறிக்கை வாசித்து மன்ற ஓப்புதல் பெற்றார்
ஏழை எளிய மாணவ /மாணவிகளின் பள்ளிச்சீருடை திட்டம்.
ஏழை எளிய மாணவ /மாணவிகளின் சீருடை திட்டம் குறித்து மன்ற செயலாளர் MN சுலைமான் அவர்கள், பிற நல மன்றகளின் பங்களிப்பு, கடந்த ஆண்டின் செயல்முறை, நடப்பாண்டில் நடைமுறை திட்டம் மற்றும் இதுவரை ஒப்புதல் அளிக்காத மன்றங்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் அளித்தல் போன்ற செயல்பாடுகளை விவரித்து கூறினார்.
பொதுக்குழு மற்றும் இஃப்தார்
இன்ஷா அல்லாஹ் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் – வரும் ஜூன் மாதம் 1ஆம் நாளன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது.நிகழ்விடம் பின்னர் தெரிவிக்கப்படும்
விளையாட்டு
சிறுவர் சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி அனைவருக்கும் பரிசளிக்கப்பட்டது. அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், ஆடவருக்கு மன்றத்துணை தலைவர் SA முஹய்யித்தீன் சற்று வித்தியாசமான முறையில் வார்த்தை ஜாலங்களுக்கு ஏற்ப செய்கை புரியும் போட்டி நடத்தினர். இதனை அங்குள்ள அனைவரும் கண்டு ரசித்தனர். சாதனைக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மகளீருக்கு தையல் போட்டி தனியாக நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றோருக்கும் பரிசளிக்கப்பட்டது.
நிறைவாக, மன்றத்தின் சார்பில் ஒருங்கிணைப்பு குழுவினர்கள் மற்றும், மன்றத்தின் நிதி ஆதாயங்களில் மிகுந்த ஆர்வமுடன் செயலாற்றி வரும் மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் MN ஷாஹுல் ஹமீது அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, ஹாபிழ் முஹம்மது லெப்பை அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இனிய நினைவலைகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்.)
|