முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் பயின்றோர் பேரவையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அப்பள்ளியின் துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
முன்னாள் மாணவர்கள்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சிறப்பான முறையில் கல்விப் பணியாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பல்வேறு நாடுகளில் பெரும்பெரும் பணிகளிலும், தொழில் அதிபர்களாகவும் & சமூக அக்கறைக்கொண்ட மாமனிதர்களாகவும் விளங்குகின்றனர்.
அத்தகைய நல்லுள்ளங்களை ஒருசேர இணைத்திடும் பணியை, பள்ளியின் பயின்றோர் பேரவை மும்முரமாக செய்து வருகிறது.
இம்முயற்சிகளின் துவக்கமாக, பயின்றோர் பேரவைக் கூட்டம் சென்ற 04.09.2017 அன்று நடத்தப்பட்டது.
பயின்றோர் பேரவையின் நோக்கம்
பள்ளியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் முறையாக பரிமாற்றுவதும், அப்பணிகளில் முன்னாள் மாணவர்களின் ஆலோசனைகளை மிகுதியாக்குவதுமே, இப்பேரவையின் முதன்மை நோக்கமாகும்.
இவ்வமைப்பின் மூலம், எம் பள்ளியில் பயின்று வெளியேறிய அனைத்து மாணவர்களையும் ஒரே குடைக்குள் ஒருங்கிணைத்து, பள்ளியையும் நம் சமூகத்தையும் - நற்பணிகளின் மூலம் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல ஏதுவாக அமையும் என நம்புகிறோம்.
இணையப் படிவம்
எம் பணிகளின் அடுத்த கட்ட முயற்சியாக, இணையவழி விண்ணப்படிவம் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் பள்ளியின் முன்னாள் மாணவர்களை இணைத்திடும் பணியினை துவங்கியுள்ளோம்.
இணையவழி படிவத்தை நிரப்பிட, இங்கே சொடுக்குக.
நிகழ்வுகளும் திட்டங்களும்
கலை-இலக்கியத் துறை மீதான ஆர்வத்தை மாணவ-மாணவிகளுக்கு வளர்த்திடும் முயற்சிகளில், நம் பள்ளி தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.
நகரின் பல்வேறு சமூக நல அமைப்புகளோடு கைகோர்த்து, அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்வுகளுள் ஒருசில கீழ்வருமாறு:
-- எட்டு வட்டார பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி
-- பிரபல கதைசொல்லி திரு குமார்ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு
-- பிரபல அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) வித்தகர் ஜனாப் முஹ்தார் அஹ்மத் குழுவினரின் பயிற்சி & கண்காட்சி
-- தூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு இன்ப சுற்றுலா
-- நான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்”!!
-- 2018-ஆம் வருடத்தின் பள்ளி ஆண்டு விழா
கடந்த சில ஆண்டுகளாக, இந்த பூமியின் வெப்பம் மிகுதியாவதை நாம் நன்குணர்கிறோம். வெப்பத்தை குறைக்கும் முக்கிய காரணியாக மரங்கள் விளங்குகின்றன. இந்த பேருண்மையை கருத்தில் கொண்டு, நம் பள்ளியில் ‘பசுமைத் திட்டம்’ ஒன்றை, 24.08.2017 அன்று துவங்கினோம்.
இத்திட்டத்தின் மூலம், பள்ளி வளாகத்தின் பரந்த நிலப்பரப்பில், மிகுதியான மரங்களை வளர்த்து - பசுமை நிறைந்த ஒரு சோலைவனமாக மாற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துவக்கமாக, வல்லுநர்களிடம் முறையான ஆலோசனைகள் பெறப்பட்டு, புன்னை, மகிழம், இலுப்பை, கடம்பு, நீர் மருதம், செண்பகம், பூவரசு, மகாகனி, சரக்கொன்றை, மந்தாரை, நாவல், புங்கன், வேம்பு, அரச மரம், எலுமிச்சை, மாதுளை, நொச்சி, நந்தியாவட்டம், வாடாச்சி, நாட்டு செம்பருத்தி, தங்க அரளி, சிறியா நங்கை, நாக தாளி, நெல்லி & ரோசா என 25 வகையான மரக்கன்றுகள் & செடிகள் நடப்பட்டன.
பள்ளி வளாகத்தை பசுமையாக்க வேண்டுமென்ற நிர்வாகத்தின் நோக்கத்தை, 04.09.2017 அன்று நடைபெற்ற பயின்றோர் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்களும் வலியுறுத்தியமைக் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று நல்ல பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, பயின்றோர் பேரவையில் இணைந்திடுமாறு முன்னாள் மாணவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல்:
கே.எம்.டீ.சுலைமான்
|