மக்கள் சேவையில் 20 ஆண்டுகளை நெருங்கும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் வெளியான - தேர்வுசெய்யப்பட்ட கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட, இணையதளத்தின் ஆசிரியர் குழுவும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு சிந்தனைத் தளமும் இணைந்து முயற்சிக்கவுள்ளன. இதுகுறித்த தகவலறிக்கை கீழே:-
20 ஆண்டுகளாக சேவை!
காயல்பட்டணம்.காம் இணையதளம் 1998-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு,2006-ஆம் ஆண்டு தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் ஓர் அங்கமானது. வருகின்ற 2018 டிசம்பர் மாதத்தில், இருபது ஆண்டுகளை எட்டும் இவ்விணையதளம், காயல்பட்டினத்தின் தவிர்க்கவியலாத ஊடகமாக விளங்கி வருகிறது.
ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் பக்கப் பார்வைகளைப் பெறும் இத்தளம், அன்றாடச் செய்திகளுடன் பல்சுவை இலக்கிய ஆக்கங்களையும் வாசகர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
செய்திகளை அதன் ஆழ அகலங்களுடனும், முழு உண்மைத் தன்மையுடனும் தருவதில் காயல்பட்டணம்.காம் முழுக் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்டங்கள், அரசிடமிருந்து - உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து குடிமக்களுக்குக் கிடைத்திட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் குறித்த விழிப்புணர்வை காயலின் குடிமைச் சமூகத்தினரிடையே பரப்பி வருவதிலும் காயல்பட்டணம்.காம் ஒரு முன்மாதிரியைப் பதித்துள்ளது என அதன் வாசகர்கள் பல்லாண்டுகளாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
17 ஆசிரியர்கள்... 244 ஆக்கங்கள்...
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் சிறப்புப் பக்கங்களுள், எழுத்து மேடை கட்டுரைப் பகுதி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு துவங்கிய இச்சேவை, இன்று வரை 17 ஆசிரியர்களின் தனித்துவமான 244 ஆக்கங்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் இருபது ஆண்டுகால ஊடகச் சேவையைக் கொண்டாடும் விதத்தில், இலக்கிய சமூக ஆர்வலர்களின் சிந்தனைத் தளமாக விளங்கும் இப்பகுதியில் வெளியான கட்டுரைகளுள் சிலவற்றை நூலாகத் தொகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை மிகுதியாக்குவதையும், எழுத்தார்வமிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கோடும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை, காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழுவும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு சிந்தனைத் தளமும் இணைந்து செயல்படுத்தவுள்ளன.
வாழ்வின் அன்றாட நீர்பரப்பிலிருந்து துள்ளி தாவும் மீன் குழந்தையை ஒத்த படைப்புகளின் மெல்லதிர்வைக் கவனப்படுத்துவதும், அவற்றுக்கான இலயத்தை கீதங்களுடன் இணைப்பதும்தான் இந்த சிறிய எட்டின் இலக்கு.
கட்டுரைத் தொகுப்பு
இத்தொகுப்பிற்காக, எழுத்து மேடை ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும், தத்தம் 3 சிறந்த கட்டுரைகளின் தலைப்புகள் பெறப்பட்டு, அக்கட்டுரைகளை (காயல்பட்டணம்.காம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகியனவற்றை இரு அமைப்புகளிலும் சார்ந்திராத) மூவரைக்கொண்ட ஒரு நடுவர் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள படி,
(1) சகோ. ஆஷிர் முஹம்மத் (துணைப் பேராசிரியர், ஆங்கிலத் துறை, புதுக் கல்லூரி, சென்னை)
(2) சகோ. எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (இலக்கிய ஆர்வலர், பாங்காக்)
(3) சகோ. சாளை ஜியாவுத்தீன் (இலக்கிய ஆர்வலர், தம்மாம்)
ஆகிய மூவர் நடுவர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். 17 ஆசிரியர்களின் 51 ஆக்கங்கள் தேர்வுக்காக முன்வைக்கப்பட்டு, மேற்படி நடுவர் குழு தேர்வு செய்யும் 20 ஆக்கங்கள் மட்டும் நூலாகத் தொகுக்கப்படவுள்ளன . மின்னணு வடிவிலும், அச்சு வடிவிலும் வெளியிடப்படும் இந்நூல் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
கூடுதல் தகவலுக்கு...
இந்த கூட்டு முயற்சி குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, இதன் ஒருங்கிணைப்பாளர்களை கீழுள்ள அலைபேசி / வாட்ஸ் அப் எண்களில் தொடர்புகொள்ளலாம்:
சாளை பஷீர் ஆரிஃப்: 99628 41761
எம்.எஸ்.ஸாலிஹ்: 99621 69854
எஸ்.கே.ஸாலிஹ்: 890 3330 440
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு |