காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டமை குறித்து - நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இரண்டே நாட்களில் சுத்தம் செய்யப்படும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் அவ்வப்போது கலங்கிய நிலையில் இருப்பதும், சில நேரங்களில் துர்நாற்றத்துடன் விநியோகம் செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இது சம்பந்தமாக, நகராட்சிக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக புகார் செய்யப்படும்போது எல்லாம், வெவ்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இரண்டாம் குடிநீர் திட்டத்தின் குழாய்கள் புதியதாக நிறுவப்பட்டதால், சில நேரங்களில் இவ்வாறு கலங்கிய நிலையில் குடிநீர் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது; சில இடங்களில் ஏற்பட்ட கசிவுகளினால் இவ்வாறு வருகிறது என விளக்கம் சில நேரங்களில் வழங்கப்பட்டுள்ளது.
நகரில் நேற்று (ஏப்ரல் 27) விநியோகம் செய்யப்பட குடிநீர், பல இடங்களில் கலங்கிய நிலையிலேயே இருந்துள்ளது.
இது குறித்து நகராட்சி தரப்பில் விசாரித்ததில், ஆற்றுக்கு அடியில் குடிநீர் எடுக்கப்படும்போது, சில நேரங்களில் இவ்வாறு வரும் என விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இது ஏற்புடையதல்ல.
சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில், சில மாதங்களுக்கு முன்பு தான் நகராட்சியின் சார்பாக CHLORINATOR என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் - குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வழக்கம் நகராட்சியில் அறவே இல்லை என்ற புகாரும் நீண்ட நாட்களாக தொடருகிறது.
நேற்று விநியோகம் செய்யப்பட குடிநீர், கலங்கிய நிலையில் இருந்தது சம்பந்தமான புகார்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்டது. இப்புகார் தொடர்பான புகைப்படங்களும், குரல்பதிவுகளும் - நகராட்சி நிர்வாகத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மேல்நடவடிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
இது சம்பந்தமாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்த் - நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கிய பதிலில், நகரில் உள்ள உயர்நிலை தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளும், பொன்னங்குறிச்சியில் உள்ள தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும், இரண்டு தினங்களுக்குள் அவை சுத்தம் செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நகராட்சி தரப்பில் இருந்து சுத்தம் செய்யும்பணிகள் சம்பந்தமாக வழங்கப்பட்ட படங்கள், இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் - இரண்டாம் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவுறாமல், இது சம்பந்தமாக நகரில் நிலவும் குழப்ப சூழல் குறித்தும் (உள்ளூர் குழாய் பதிப்பு, வீடுகளுக்கு வழங்கப்படும் இணைப்புகள் நிலை, தினம் வழங்கப்படவேண்டிய குடிநீர் நிலை, ஆற்றில் இருந்து எவ்வளவு குடிநீர் எடுக்கப்படுகிறது), நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் (CMA) திரு ஜி.பிரகாஷ் IAS அவர்களிடமும் நடப்பது என்ன? குழுமம் இன்று தெரிவித்தது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக - CMA பதில்வழங்கியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 28, 2018; 4:00 pm]
[#NEPR/2018042803]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|