விருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அளித்த புகாரைத் தொடர்ந்து, நியாய விலைக் கடை அலுவலர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகில் ரேஷன் கடை உள்ளது. இதன் பதிவு எண் - CD006. இந்த கடையின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கடுமையான அதிருப்தி உள்ளது.
இங்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும் மக்களை நிர்பந்தம் செய்து - சோப்பு, டீத்தூள், முருங்கை உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இப்பொருட்களை வாங்காவிட்டால், பிற பொருட்கள் தர படாது என அக்கடையினை நிர்வகிக்கும் பொறுப்பாளர் தெரிவிக்கிறார். இது குறித்து கேட்டால், தங்களுக்கு அப்பொருட்களை விற்பனை செய்ய மேலதிகாரிகள் இலக்குகள் வழங்கியிருப்பதாக கூறுகிறார் என அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து, ஏப்ரல் 16 அன்று மாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன? குழுமம் புகார் அளித்திருந்தது.
நடப்பது என்ன? குழுமம் சமர்ப்பித்திருந்த புகாரை விசாரிக்க கோரி, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு (DISTRICT SUPPLY OFFICER; DSO) - மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் (TALUK SUPPLY OFFICER;TSO) விசாரணைகள் மேற்கொண்டு கீழ்காணும் தகவலை வழங்கியுள்ளார்.
மனுதாரர் புகார் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அவர்களின் வாய்மொழி உத்தரவின் பேரில் பிற பொருட்கள் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். தற்போது திருச்செந்தூர் வட்டத்தில் செயல்படும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் அனைவருக்கும் நுகர்வோர் விருப்பத்தின் பேரிலேயே பிற பொருட்கள் விற்பனை செய்யப்படவேண்டும் என்றும், நிர்பந்தப்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
எனவே - நகரின் அனைத்து ரேஷன் கடைகளின் நுகர்வோர்கள் இந்த விளக்கத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு, ரேஷன் கடை பொறுப்பாளர்கள் தேவையில்லாத பொருட்களை விலைகொடுத்து வாங்க நிர்பந்தம் செய்தால், அது சம்பந்தமான தகவலை - நடப்பது என்ன? குழுமத்தின் நிர்வாகிகளுக்கோ, வட்ட வழங்கல் அலுவலருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 29, 2018; 3:00 pm]
[#NEPR/2018042904]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|