தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் 7 ஆண்டு பாடத்திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்று, ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது – பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளார். அவருக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
தூத்துக்குடி ஜாமிஆ பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி. இதன் பட்டமளிப்பு விழா & நூலகக் கட்டிட திறப்பு விழா, 30.04.2018. திங்கட்கிழமையன்று 09.30 மணிக்கு, கல்லூரியின் ‘அல்லாமா நூஹ் ஹளரத் நினைவரங்கில்’ நடைபெற்றது.
கல்லூரியின் நிர்வாகிகளும், சமுதாயப் புரவலர்களும் முன்னிலை வகித்த இவ்விழாவை, கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் ஜி.அஸ்ரார் அஹ்மத் மக்தூமி நெறிப்படுத்த, மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஹம்மத் ரியாஸ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும், தூத்துக்குடி புதிய துறைமுகம் பள்ளி இமாமுமான மவ்லவீ என்.எம்.கே.நூருல்லாஹ் விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். கல்லூரியின் தலைவர் நவ்ரங் எம்.ஸஹாபுத்தீன் வரவேற்றார். கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹீ – கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். முதல்வர் மவ்லவீ எம்.இம்தாதுல்லாஹ் ஃபாழில் பாக்கவீ கல்வி அறிக்கையை சமர்ப்பித்தார்.
மத்ரஸாவின் புதிய நூலகக் கட்டிடத்தை – கல்லூரியின் உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான பீ.மீராசா மரைக்காயர் திறந்து வைத்தார். கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்துரையாற்றினர்.
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்தவரும் – சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவருமான எம்.இ.எல்.நுஸ்கீ உடைய மகன் என்.செய்யித் அஹ்மத் உட்பட – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 மாணவர்கள் 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்றுத் தேர்ச்சி பெற்றமைக்காக ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது – பட்டச் சான்றிதழும், ஒரு மாணவர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துத் தேர்ச்சி பெற்றமைக்காக அவருக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது – பட்டச் சான்றிதழும் வழங்கப்பட்டது. விழா தலைவர் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த பல்வேறு வணிக நிறுவனங்கள், தனவந்தர்கள் சார்பில் – பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் அவையோரால் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்லூரி உறுப்பினர் எம்.அப்துல் கனீ நன்றி கூற, துஆ ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது. இதில், தூத்துககுடி, காயல்பட்டினம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. விழா நிறைவுற்றதும் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மவ்லவீ என்.செய்யித் அஹ்மத் மஸ்லஹீ - ‘ஆலிம் மஸ்லஹீ’ ஸனது பெற்று வந்ததைப் பாராட்டும் வகையில், அவர் சார்ந்த குருவித்துறைப் பள்ளிவாசலில் அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் வாழ்த்துரையாற்ற, பட்டம் பெற்ற மாணவர் ஏற்புரையாற்றினார். துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தொடர்ந்து, ஹாமிதிய்யா பைத் பிரிவு மாணவர்கள் பைத் பாடி நகர்வலமாகச் சென்று அவரை இல்லம் சேர்த்தனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிர்வாகத்தின் சார்பில், அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் ஆகியோரிணைந்து – பட்டம் பெற்ற மாணவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|