ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என்று அழைக்கப்படும். ‘ஷபே பராஅத்’, ‘பராஅத் இரவு’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்நாள் இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவைற்றிருக்கச் செய்திடக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழமையாக இருந்து வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல், குருவித்துறைப் பள்ளி, மஹ்ழரா, ஜாவியா உள்ளிட்ட பல இடங்களில் வழமை போல இவ்வாண்டும் பராஅத் இரவு நிகழ்ச்சிகள் 01.05.2017. செவ்வாய்க்கிழமையன்று 19.00 மணியளவில் நடத்தப்பட்டன. அனைத்திடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
குருவித்துறைப் பள்ளியில், அப்பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ தலைமையில் பராஅத் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ பராஅத் இரவு குறித்து விளக்கவுரையாற்றினார். முத்துச்சுடர் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ யாஸீன் ஓதலைத் துவக்கி வைக்க, அனைவரும் 3 முறை யாஸீன் ஓதினர்.
குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ ஆகியோர் ஒவ்வொரு யாஸீன் ஓதலுக்குப் பிறகும் அவற்றுக்கான சிறப்பு துஆ பிரார்த்தனையை வழிநடத்தினர். குருவித்துறைப் பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் மன்பஈ நிறைவு துஆ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
காயல்பட்டினம் ஜாவியாவில் அன்று 20.00 மணியளவில் நிகழ்ச்சி துவங்கியது. பராஅத் இரவின் மகத்துவம் குறித்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சிறப்புரையாற்றினார்.
ஜாவியா அரபிக் கல்லூரியில் அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் 3 யாஸீன் ஓதப்பட்டது. இஷா தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ – பராஅத் இரவின் மகத்துவங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். ஹாஜியப்பா தைக்கா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது. ஜாவியாவில் இந்நிகழ்ச்சி இவ்வாண்டுடன் - தொடர்ந்து 91 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|