கோடை வெப்பத்தைக் கருத்திற்கொண்டு, நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைச் செய்யாதிருப்பதன் மூலம் மின் தடையைத் தவிர்க்க, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின் வாரியத்திடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு மின்வாரியம் மூலம் மாதத்திற்கு ஒருமுறை - மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிணைப்பு நிறுத்தப்படுவது வழமையாகும். இந்த தினத்தில் - மின்வாரியம் சார்பாக முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை அறிவோம்.
நம் பகுதியில் - கோடை கால வெப்பத்தின் தாக்கம், பிற இடங்களை விட அதிகமாக இருக்கும் என்பதையும் அனைவரும் அறிவர். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.
இவ்வாண்டு - மே மாதம் 16 ஆம் தேதி வாக்கில் துவங்கி, ஜூன் மாதம் 16 ஆம் தேதி வாக்குவரை - இஸ்லாமிய சமுதாயத்தினர் ரமலான் (ரம்ஜான்) மாத நோன்பினை கடைபிடிக்க உள்ளனர்.
இந்த காலகட்டத்தில் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்வர். மேலும் - சூரியன் மறைந்தபின்பு உணவு உண்ண காலை முதல் பணிகளும் நடைபெற்றுவரும்.
இந்த சூழலை கருத்தில்கொண்டு, காயல்பட்டினம் பகுதியில் - மே மற்றும் ஜூன் மாத மாதாந்திர பராமரிப்பு பணிகளை, மே மாதம் முதல் பாதியிலும் (மே 1 - 15) மற்றும் ஜூன் மாதம் இரண்டாம் பாதியிலும் (ஜூன் 17 - 30) மேற்கொள்ள வேண்டி, மின்வாரியத்துறையின் அதிகாரிகளுக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு இன்று வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 30, 2018; 4:15 pm]
[#NEPR/2018043001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|