காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள – மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபுக்குச் சொந்தமான கட்டிடம், புதுப்பித்துக் கட்டுவதற்காக இடித்தகற்றப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் சித்தன் தெருவில் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி வளாகம், டாக்டர் அபுல்ஹஸன் க்ளினிக் மற்றும் நியாயவிலைக் கடை. சித்தன் தெரு முனையிலிருந்து துவங்கி, நியாய விலைக் கடை கட்டிடம் வரை நீடிக்கும் சொத்து, 1941வாக்கில் காயல்பட்டணம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த மறைந்த கானா செய்யித் முஹம்மத் ஆலிம் (கானா ஆலிம்) அவர்களால் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகும்.
இங்குள்ள நியாய விலைக் கட்டிடம் பலவீனமடைந்ததையடுத்து, 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடித்தகற்றப்பட்டு, பின்னர் புதுப்பித்துக் கட்டப்பட்டது.
படம்: கோப்பு
டாக்டர் அபுல்ஹஸன் க்ளினிக் செயல்பட்டு வந்த கட்டிடம் பலவீனப்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டு, அதைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டதையடுத்து, தற்போது அப்பழைய கட்டிடம் இடித்தகற்றப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடை, அதற்குப் பின்புறம் மேற்குப் பகுதியில் காலிமனை, அவற்றுக்கு நேர் தெற்கில் இரண்டு வாடகை வீடுகள், தற்போது இடித்தகற்றப்பட்டுள்ள டாக்டர் அபுல்ஹஸன் க்ளினிக் ஆகியவை அடங்கிய இச்சொத்து சபைக்கு வருமானம் தரக்கூடியதாக உள்ளது என்றும்,
குருவித்துறைப் பள்ளி மஹல்லாவுக்குட்பட்ட மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபுக்குச் சொந்தமானது என்றும்,
இச்சொத்தை எக்காலத்திலும் யாருக்கும் விற்கக்கூடாது எனவும், இச்சொத்திலிருந்து வரும் வாடகையை வசூலிக்கவும், கூட்ட – குறைக்கவும், அவ்வப்போது தேவைப்படும் பராமரிப்பு வேலைகளைக் கவனிக்கவும், தேவைக்கேற்ப கட்டிட அமைப்பை மாற்றியமைக்கவும் மட்டும் அந்தந்தக் காலத்தில் உள்ள சபை நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், 1941வாக்கில் கானா ஆலிம் எழுதியளித்த வக்ஃப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, 2009ஆம் ஆண்டின் நிர்வாகிகள் எஸ்.எம்.கபீர், நஹ்வீ இ.எஸ்.புஹாரீ ஆலிம், எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|