ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள், சஊதி அரபிய்யாவிலுள்ள புனித மக்கா, மதீனா நகரங்களிலும், ரியாத் நகரிலுமுள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் சேர்ந்து இஸ்லாமிய உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டது. அதில் திரளான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
எமது அக்ஸா ஃபவுண்டேஷன் சார்பாக கடந்த 14.04.2018 சனிக்கிழமை மாலை இஸ்லாமிய உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி காயல்பட்டினம், துஃபைல் காம்ப்ளக்ஸ் ஹனியா சிற்றரங்கில் நடைபெற்றது.
அக்ஸா ஃபவுண்டேஷன் நிறுவனர் S.A. அஹ்மத் ரஃபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ நெறிப்படுத்த, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர் இர்ஃபான் திருமறை வசனங்கள் ஓதி துவக்கினார். ஹாஃபிழ் M.N. முஹம்மத் புகாரி வரவேற்புரை வழங்கினார்.
அக்ஸா ஃபவுண்டேஷன் மற்றும் அதன் நோக்கத்தை நிறுவனர் அஹ்மத் ரஃபீக் அவர்கள் அறிமுகவுரையாக வழங்கினார்கள்.
சென்னை, பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி முதல்வர் டாக்டர் முஜீபுர் ரஹ்மான் உமரீ வழிகாட்டல் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், சஊதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் என்ன படிக்கலாம்? அதற்கான அடிப்படை கல்வித் தகுதி என்ன? எவ்வாறு விண்ணப்பிப்பது? எதிர்காலத்தில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? போன்றவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் ப்ளஸ் 2 மாணவர்கள் திரளாகப் பங்கேற்று, தமக்கு ஏற்பட்ட ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
நன்றியுரைக்குப் பின், கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அக்ஸா ஃபவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முதலாவது நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
M.M.முஜாஹித் அலீ
|