காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில், ஆண்டுதோறும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு United Super Cup கோப்பைக்கான United Football League (UFL) கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 04 முதல் 14ஆம் நாள் வரை நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில், ஜி-கூல் ராக்கர்ஸ் அணி வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி குறித்து, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இறுதிப் போட்டி:
14/05/2018 திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Silver Miners அணியும், G-Cool Rockers அணியும் மோதின. இதில், 2 - 0 என்ற கோல் கணக்கில் G-Cool Rockers அணி வெற்றிபெற்றது. அவ்வணியின் அஃப்ராஸ், ஆதில் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர்.
சிறப்பு விருந்தினர்:
இப்போட்டியில், நமது திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அரசின் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான திரு. அனிதா ஆர். ராதாக்ருஷ்ணன் M.L.A. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள். அவருக்குச் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதோடு, ஆட்ட இடைவேளையின்போது ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நடுவர்கள்:
போட்டிகள் அனைத்திலும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால், இஸ்மாஈல் மற்றும் சகோதரர் ஹக்கீம் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
பரிசளிப்பு விழா:
ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் யாசர் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சகோதரர் ஃபயாஜ் இறைமறை குர்ஆன் வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, அதனைத் தொடர்ந்து சகோதரர் அலாவுத்தீன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள், சுற்றுப் போட்டிக் குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாயும், அரையிறுதி வரை முன்னேறிய இரு அணிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட பரிசுகள்:
>>> வளரும் வீரருக்கான விருது Silver Miners அணியின் முஸ்தாக் அவர்களுக்குச் சகோதரர் ரபீக் அவர்கள் வழங்கினார்கள்.
>>> சிறந்த முன்கள வீரருக்கான விருது Bangkok Ball Blasters அணியின் மாலிக் அவர்களுக்குச் சகோதரர் ரபீக் அவர்கள் வழங்கினார்கள்.
>>> இறுதி போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசினை G-Cool Rockers அணியின் ஆதில் அவர்களுக்குச் சகோதரர் முத்து அவர்கள் வழங்கினார்கள்.
>>> சிறந்த கோல் கீப்பர் விருது G-Cool Rockers அணியின் ஃபரீத் அவர்களுக்குச் சகோதரர் நவ்ஃபல் அவர்கள் வழங்கினார்கள்.
>>> சிறந்த தடுப்பாட்ட வீரருக்கான விருது Woodlands அணியின் தாவூத் அவர்களுக்குச் சகோதரர் நவ்ஃபல் அவர்கள் வழங்கினார்கள்.
>>> லீக் போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசினை Silver Miners அணியின் தாவூத் அவர்களுக்குச் சகோதரர் ஷாஃபி அவர்கள் வழங்கினார்கள்.
தொடர்ந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றிக்கு முயன்ற அணியினருக்குப் பரிசுகளை, சிறப்பு விருந்தினர் திரு. அனிதா ஆர். ராதாக்ருஷ்ணன் M.L.A. அவர்கள் வழங்கினார்கள்.
நன்றியறிவிப்பு:
நடப்பாண்டு UFL போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியமைக்காக சகோதரர் கரீம், சகோதரர் ஃபாஜி, சகோதரர் ஜமால், சகோதரர் இஸ்மாயீல் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட சகோதரர் ஸல்மான் ஃபாரிஸ் (யான்பு), சுற்றுப்போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் உரிமையாளர்கள், லீக் போட்டிகள் அனைத்திலும் சிறந்த முறையில் வர்ணனை வழங்கிய சகோதரர் பாலப்பா, போட்டிகள் அனைத்திலும் மைதானத்திற்குத் தேவையான தண்ணீர் வழங்கிய BS Construction நிறுவனத்தார், பார்வையாளர்கள், அனுசரணை வழங்கிய Masha Allah Garments, SAIS Boutique, BGF United மற்றும் G-Cool நிறுவனத்தார்கள், போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அன்றாட போட்டி முடிவுகளைச் சமூக ஊடகங்களுக்கும் காயல் இணையதளங்களுக்கும் அனுப்பித் தந்த சகோதரர் தைக்கா சாஹிப் மற்றும் செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது. நன்றியுரை சகோதரர் யாசர் அவர்கள் வழங்கினார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘கோடாக்கா’ ஃபைஸல்
படங்கள்:
சுற்றுப் போட்டிக் குழுவினர்
|