இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மே 18ஆம் நாளன்று இறுதி நாள் என்ற தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் [மாநில அரசு பாடத்திட்டங்கள் (STATE BOARD)] நிரப்பப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார், மாநில அரசு பாடத்திட்ட பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்கீழ், CBSE/ICSE பாடத்திட்டங்கள்படி நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும், 25 சதவீத இடம் ஒதுக்கப்படவேண்டும்.
விண்ணப்பம் செய்ய - நாளை (மே 18) இறுதி தினம் - ஆகும்.
அரசின் இந்த திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், அதற்கான பதில்களும். (Frequently Asked Questions)
இந்த சட்டம் மூலம் எந்த வகுப்பில் சேரலாம்?
இந்த சட்டத்தின் கீழ் வரும் ஒரு பள்ளிக்கூடத்தின் முதல் வகுப்பு - LKG என்றால், LKG இல் சேர இந்த சட்டத்தை பயன்படுத்தலாம். UKG அல்லது அதற்கு மேலான வகுப்புகளில் சேர பயன்படுத்தமுடியாது. இருப்பினும் - LKG இல் சேர்ந்த மாணவர், தனது UKG, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என தனது 14 வயது வரை - இலவச கல்வியை, அதே பள்ளிக்கூடத்தில் பெறலாம்.
சில பள்ளிக்கூடங்களின் முதல் வகுப்பு - LKG ஆக இருக்கும், சில பள்ளிக்கூடங்களின் முதல் வகுப்பு 1 வது வகுப்பாக இருக்கும்; சில பள்ளிக்கூடங்களின் முதல் வகுப்பு 6 வது வகுப்பாக இருக்கும்.
எவ்வாறு இடங்கள் ஒதுக்கப்படும்?
ஒரு பள்ளிக்கூடத்தில் 30 இடங்கள் இருந்து, பெறப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை 30 அல்லது அதற்கு குறைவாக இருந்து, அவை எல்லாமே - விதிமுறைக்குட்பட்டு இருந்தால், அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும்.
ஒரு பள்ளிக்கூடத்தில் 30 இடங்கள் இருந்து, பெறப்பட்ட விண்ணப்பங்கள் எண்னிக்கை 30 க்கும் மேலாக இருந்து, 30 க்கு மேலான விண்ணப்பங்கள் தகுதியானவையாக இருந்தால், மே 23 அன்று - பள்ளிக்கூட வளாகத்தில், அதிகாரிகள், பெற்றோர்கள் முன்னர் - குலுக்கல் அடிப்படையில் மாணவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என எப்படி அறிவது?
மே 18 - விண்ணப்பம் செய்ய இறுதி தினம். அதன் பிறகு - பெறப்பட்ட விண்ணப்பங்களை பள்ளிக்கூடங்கள் பரிசீலனை செய்யும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் (காரணத்தோடு) - பள்ளிக்கூடத்தின் தகவல் பலகையில், மே 22 மாலை 5 மணிக்குள் போடப்படும்.
இந்த திட்டம் மூலம் பள்ளிக்கூடத்தில் சேர அடிப்படை தகுதி என்ன?
பள்ளிக்கூடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்களை இந்த திட்டம் மூலம் சேர்க்கலாம். இது தவிர, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவு, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் போன்ற பிரிவுகள் போன்றவை தகுதிகளாகும்.
விண்ணப்பங்களை பள்ளிக்கூடத்தில் கொடுக்கவேண்டுமா?
விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பித்தால் போதுமானது. பள்ளிக்கூடத்தில் விண்ணப்பத்தை கொடுத்தாலும், பள்ளிக்கூடமும் அந்த விண்ணப்பத்தை அரசு இணையதளத்தில் பதிவேற்றி, அதன் நகலை உங்களிடம் தரவேண்டும்.
இந்த திட்டப்படி பள்ளிக்கூடத்தில் இணைய - குறைந்த கட்டணம் ஏதாவது பள்ளிக்கூடத்திற்கு கொடுக்கவேண்டுமா?
கிடையாது. இந்த திட்டம் மூலம் சேர்க்கை பெறும் மாணவர்கள் - பள்ளிக்கூடத்திற்கு, எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. அவ்வாறு பள்ளிக்கூடங்கள் - கட்டணம் எதுவும் கேட்டால், இது சம்பந்தமான புகாரை கல்வித்துறையிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ தெரிவிக்கலாம்.
மாணவர் சேர்க்கை என்று நடைபெறும்?
அரசு அறிவிப்புபடி, இந்த திட்டத்தின் கீழான மாணவர் சேர்க்கை - மாநிலம் முழுவதும், மே 29 அன்று நிறைவுபெறும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 17, 2018; 5:30 pm]
[#NEPR/2018051701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|