காயல்பட்டினம் நகராட்சி சார்பில், நகரில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு விவசாயத்திற்குத் தேவையான உரம் தயாரிக்கும் நுண் உரம் செயலாக்க மையம் (Micro Compost Centre) – கடந்த 3 மாதங்களுக்கு முன்பு – 18ஆவது வார்டு சிவன் கோவில் தெரு இறுதியில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் வலசை பகுதியில் (பழைய பிரேத பரிசோதனை அறை அருகில்) அமைக்கப்பட்டுள்ளது.
நகரில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்ட பின், 2 மாதங்களில் – விவசாயத்திற்குத் தேவையான உரமாக அவை மாறுகிறது. இவ்வாறு பெறப்படும் உரம், நகராட்சியால் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உர அறிமுகம் & விற்பனை நிகழ்ச்சி, நேற்று (16.05.2018. புதன்கிழமை) காயல்பட்டினம் அம்மா உணவக வளாகத்தில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ப்ரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையம் குறித்து பங்கேற்றோரிடம் விளக்கிப் பேசி, பொதியிடப்பட்ட உரத்தையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
1 கிலோ உரம் 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், தேவைப்படுவோர் நகராட்சியில் கட்டணம் செலுத்தி – மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே, பரிசோதனை அடிப்படையில் இந்த உரம் மாடித் தோட்டத்தில் பயன்படுத்தப்பட்டதில், நல்ல விளைச்சல் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பொதுமக்கள் தம் வீடுகளில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை மட்டும் தனியாகப் பிரித்து வழங்கினால், அவதியின்றி அவை நுண் உரம் செயலாக்க மையத்தில் பரத்தப்பட்டு, உரமாக்கப்படும் என்றும், இதன் மூலம் பெறப்படும் வருமானம் நகர்நலப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில், முதல் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.
|