இன்று (16.05.2018.) தேசிய டெங்கு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, காயல்பட்டினம் நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை சார்பில், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) புனித செல்வமாதா தேவாலய வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று 11.00 மணிக்கு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ப்ரேம் குமார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு - டெங்கு பரவும் விதம், அதன் பரவலைத் தடுத்திடச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
டெங்கு பரவலை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, தேவையான விளக்கங்களைப் பெற்றனர்.
அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் பருகக் கொடுக்கப்பட்டது. விஷக் காய்ச்சலைப் பரப்பும் கொசுப் புழுக்கள் உருவாவதைத் தடுக்கும் மீன்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு, அவரவர் வீட்டுக் கிணறுகளில் அவற்றை வளர விடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஃபாத்திமா பர்வீன், சுகாதாரத் துறை மாவட்ட துணை இயக்குநர் கீதா ராணி, நிகழ்ச்சி நடைபெற்ற செல்வமாதா ஆலய பங்குத் தந்தை சில்வஸ்டர், கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) வட்டாரத் தலைவர் தஸ்னேவிஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவியரும் திரளாகக் கலந்துகொண்டனர். |