காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு 'ஊஞ்சல் தாத்தா' சிறுவர் கதைநூலை அன்பளிப்பாக வழங்கிடும் திட்டத்தை, 'காயல் நற்பணி மன்றம் – தம்மாம்' துவங்கியுள்ளது. இது குறித்து, அதன் நிர்வாகக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை கீழே:
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, 'காயல் நற்பணி மன்றம் – தம்மாம்' பல்வேறு நகர்நலத் திட்டங்களை தொய்வின்றி செய்துவருவதை தாங்கள் அறிவீர்கள். கல்விக்கான பங்களிப்புகள், மருத்துவப் பணிகள், நோன்புகால உதவிகள் என்பன போன்ற பல்வேறு சிறப்புவாய்ந்த திட்டங்களுடன், பள்ளி மாணவர்களுக்கான தனித்துவமான நிகழ்வுகளிலும் முயற்சிகளிலும் ஆர்வம்காட்டும் வண்ணமாக, சிறார் கதைநூலினை அன்பளிப்பாக வழங்கிடும் திட்டத்தை துவங்கியுள்ளோம், அல்ஹம்துலில்லாஹ்.
ஊஞ்சல் தாத்தா
எம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரான அ.ர.ஹபீப் இப்றாஹீம் எழுதி, சென்னை பாரதி புத்தகாலயத்தின் 'புக்ஸ் ஃபார் சில்ரன்' பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள 'ஊஞ்சல் தாத்தா' சிறுவர் கதைநூலை, இத்திட்டத்திற்காக தேர்வுசெய்துள்ளோம்.
1300+ நூல்படிகள் வழங்க ஏற்பாடு
முன்னதாக, 30.03.2018 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற எம் மன்றத்தின் 82-வது பொதுக்குழுக் கூட்டம் & 3-வது குடும்ப சங்கம நிகழ்வின்போது, இந்நூல் அன்பளிப்பு திட்டம் குறித்து அறிமுகம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் & ஆதரவாளர்களிடம், காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு - 'ஊஞ்சல் தாத்தா' கதைநூலினை அன்பளிப்பாக வழங்கிட, ஏறத்தாள 1300-க்கும் மேற்பட்ட நூல்படிகளுக்கான தொகை அனுசரணையாகப் பெறப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
பெறப்பட்ட தொகையில் இருந்து – சரியாக 50 விழுக்காட்டினை, மன்றத்தின் இதரப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நூல்படிகளை, எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் மூலம், நமதூர் பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கலை & இலக்கிய ஆர்வத்தை தூண்டிடும் நோக்கோடு, சென்ற 09.05.2017 ஞாயிறன்று, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சிறார்களுக்கான சிறப்பு பிரிவாக விளங்கும் கண்ணும்மா முற்றத்துடன் இணைந்து, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப்பள்ளி வளாகத்தில், 'கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல்’ நிகழ்வினை திறம்பட நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சியாகவும் & இந்த நூல் அன்பளிப்பு திட்டத்தின் துவக்கமாகவும், கண்ணும்மா முற்றம் & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் ஆகியன இணைந்து, 2018-ஆம் ஆண்டின் உலக புத்தக நாளை முன்னிட்டு, 21.04.2018 சனிக்கிழமையன்று, பெங்களூரு 'பஞ்சு மிட்டாய்’ சிறார் குழுவால் நடத்தப்பட்ட கதைசொல்லல் நிகழ்வின்போது, 'ஊஞ்சல் தாத்தா’ நூல்படிகள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் கீழ் வருமாறு:
-- மாணவர்களின் மத்தியில் வாசிப்பு பண்பாட்டை வளர்த்தல்; அதன்மூலம் அறிவுசார்ந்த ஒரு இளைய சமூகத்தினை உருவாக்கல்
-- சிறார்களுக்கு இலக்கியத்தின்மீதான ஆர்வத்தை தூண்டுதல்
-- புதுப்புது மனிதர்களையும், இடங்களையும், பண்பாடுகளையும் கதைகளின் மூலம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தல்
-- நல்ல நல்ல கதைநூல்களை மிகுதியாக அறிமுகம் செய்து, கையடக்கக் கருவிகளிடம் இருந்து அவர்களை மீட்டெடுத்தல்
-- கதைமாந்தர்களின் உணர்வலைகளையும், வாழ்வியல் நெறிகளையும், குழந்தைகளை உள்வாங்கச் செய்து - உறுதியான நம்பிக்கையையும் படைப்பூக்கத்தையும் அவர்கள் பெற்றிட வழிவகுத்தல்
-- உள்ளூர் எழுத்தாளரை ஊக்குவித்தல்; இன்னும் பற்பல புதிய எழுத்தாளர்கள் உருவாகிட வழிசெய்தல்
காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டதைப் போன்று, வருங்காலங்களில் நடைபெறவுள்ள சிறார் நிகழ்வுகளிலும், முகாம்களிலும், இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நூல்படிகள் வினியோகம் செய்யப்படவுள்ளன, இன்ஷா அல்லாஹ்.
இறைவன் நம் நல்ல நாட்டங்களை நிறைவேற்றி, நம் பணிகளை மென்மேலும் சிறப்புறச் செய்வானாக!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யத் இஸ்மாயீல் (தம்மாம்)
நிர்வாகக் குழு உறுப்பினர்
|