“மக்களைப் படிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்” என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் காயல்பட்டினத்தில் பேசினார். விரிவான விபரம்:-
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென்மாவட்ட மக்களைச் சந்திப்பதற்காக செவ்வாய்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். பின் இரண்டாவது நாளாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள மக்களைச் சந்தித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை காயல்பட்டினம், ஆறுமுகனேரி, புன்னைக்காயல் ஆகிய ஊர்களிலுள்ள மக்களை நேரில் சந்தித்தார்.
17.05.2018. வியாழக்கிழமையன்று காயல்பட்டினம் வந்த அவர், பேருந்து நிலையம் அருகில் பேசியதாவது:-
“ரமலான் நோன்பு நேரத்தில் இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களைப் படிப்பதற்காகவும், மக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவுமே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இதற்காக ஊர் ஊராகச் சுற்றி, மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறேன். இந்தச் சந்திப்பு அடிக்கடி நடைபெறும். நோன்பு நேரத்தில் உங்களுக்குத் தொந்தரவளித்ததற்காக வருந்துகிறேன்.
பொதுவாக, கட்சிக் கொடிகளைத் தலைவர்கள்தான் ஏற்றி வைப்பார்கள். ஆனால், இங்கு நமது மக்கள் நீதி மய்யத்தின் கொடியை, மேலிடப் பிரதிநிதி அப்துல் ரஹீம், காயல்பட்டினம் நகர பொறுப்பாளர் மந்திரம் ஆகியோர் இணைந்து ஏற்றி வைப்பர்” என்றார். பின்னர், அவர்கள் கொடியேற்றினர்.
மாவட்டச் செயலாளர் சேகர், நகர செயலாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஹிதாயத்துல்லாஹ், கணேசன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திருச்செந்தூரில் தங்கியிருந்த கமலஹாசனை, ஹாங்காங் தமிழ்ச் சங்க தலைவர் காயல் யு.நூஹ் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர் சுகா இதன்போது உடனிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை, அதன் மேலிடப் பிரதிநிதி காயல் அப்துர்ரஹீம் செய்திருந்தார்.
படங்கள்:
M.M.முஜாஹித் அலீ & அப்துர்ரஹீம் இயாஸ்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:19 / 18.05.2018.] |