காயல்பட்டினம் பப்பரப்பள்ளியில் குப்பைகளை எரிக்கவில்லை என – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சி பதிலளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் அன்றாடம் உருவாகும் குப்பைகள் - ஏறத்தாழ 50 ஆண்டுகளாக, பப்பரப்பள்ளி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கொட்டப்பட்டுவருகின்றன.
அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் - எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல், அரை நூற்றாண்டு காலமாக கொட்டப்பட்டு வந்ததால், நிலம் / நீர் / காற்று ஆகியவை மாசுபட்டுள்ளது. மேலும் அந்த குப்பைகள் அவ்வப்போது எரிக்கப்படுவதாலும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
குப்பைகளை எரிப்பது சட்டப்படி குற்றம். இவ்விஷயத்தை - நடப்பது என்ன? குழுமம், 2016 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
புகாரினை விரிவாக விசாரித்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், அவ்வாறு குப்பைகளை எரிப்பவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து, FIR பதிவு செய்யவேண்டும் என நகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகு - குப்பைகளை எரிக்கும் சம்பவங்கள் வெகுவாக குறைந்திருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 2018), மீண்டும் குப்பைகள் எரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, இவ்விஷயத்தை - நடப்பது என்ன குழுமம் - மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றது.
நடப்பது என்ன? குழுமத்தின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், காயல்பட்டினம் நகராட்சிக்கு அறிவுறுத்தி மே 2, 2018 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது அப்புகாருக்கு பதில் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி - நகராட்சி பகுதிகளில் குப்பைகள் ஏதும் எரிக்கப்படுவதில்லை என கூறியுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 1, 2018; 10:00 am]
[#NEPR/2018080101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|