காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்ற முஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பங்கேற்றார். தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கமும் இணைந்து – முஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவை 17.07.2018. அன்று காலையில் நடத்தின.
இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு, 50 முஸ்லிம் மகளிருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு இணை மானிய உதவித்தொகையை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் நலிவுற்ற முஸ்லீம் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மூலமும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படடு; வருகிறது. முஸ்லீம் பெண்களின் ஏழ்மை நிலைமையை போக்க அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட அரசு இணை மானியம் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் திரட்டிய ரூ.15.20 இலட்சத்திற்கு ஈடாக அரசு இணை மானியமாக ரூ.30.40 இலட்சம் வழங்கியுள்ளது. இத்தொகை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய முஸ்லீம் பெண்கள் 375 நபர்களுக்கு ரூ.40.68 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் நடைபெறும் இவ்விழாவில் 50 முஸ்லீம் மகளிருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. முஸ்லீம் மகளிர் மட்டுமல்லாமல் அனைத்து சமுதயாத்திலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் அனைவரும் அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகளை அறிந்து அவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இந்திரவள்ளி, மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்க கௌரவச் செயலாளர் வஹிதா மற்றும் அலுவலர்கள், முஸ்லீம் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முஸ்லிம் பெண்கள் உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறன் கொண்டோருக்கான சிறப்புப் பள்ளியைப் பார்வையிட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, அரசு மருத்துவமனை திடக்கழிவு மேலாண்மை நிலையம், கடற்கரை ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், அங்கத்தினரும் இதன்போது உடன் சென்றனர்.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 18:08 / 31.07.2018.] |