காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், வழித்தடம் மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, அவற்றின் மீது “காயல்பட்டினம் வழி” எனும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவங்கியுள்ளது. இதுகுறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக காயல்பட்டினம் வழியை புறக்கணித்து அடைக்கலாபுரம் வழியாக செல்லும் பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவுகிறது.
இது குறித்து - கடந்த இரண்டு ஆண்டுகளாக, மெகா | நடப்பது என்ன? குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
// கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுடன் சந்திப்பு
// சென்னையில் போக்குவரத்து துறை அரசு செயலருடன் சந்திப்பு
// தொடராக 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பு
// மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பேருந்து நிலையங்களில் அறிவிப்பு பலகை நிறுவுதல்
மேலும் இதன் தொடர்ச்சியாக, சில வாரங்களுக்கு முன்பு - போக்குவரத்து ஆணையர், திரு சமயமூர்த்தி IAS அவர்களை மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சென்னையில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது - காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிக்கும் பிரச்சனை முழுமையாக தீரவில்லை என்பது எடுத்துரைக்கப்பட்டது.
அதன் பயனாக, போக்குவரத்து ஆணையர் - கீழ்க்காணும் உத்தரவுகளை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பிறப்பித்தார்.
(1) அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு - காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு / தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
(2) காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு / தனியார் பேருந்துகளில் வழி காயல்பட்டினம் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டவேண்டும்
(3) மெகா அமைப்பினர், தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் பிரதிநிதிகளுடான சந்திப்புகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யவேண்டும்
அதன் தொடர்ச்சியாக, நேற்று (டிசம்பர் 26) முதல் - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகளில், வழி காயல்பட்டினம் என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவங்கியது. இந்த பணியினை - வீரப்பாண்டியன் பட்டினம் சந்திப்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூத்த அதிகாரி திருமதி பாத்திமா பர்வீன் துவக்கிவைத்தார். அப்போது - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் உடனிருந்தனர்.
அச்சமயம், காயல்பட்டினம் வழியை புறக்கணித்து சென்ற பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.
வழி காயல்பட்டினம் ஸ்டிக்கர், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அனைத்து பேருந்துகளிலும் அடுத்த சில நாட்களில் - இறைவன் நாடினால் - ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர்களுக்கான அனுசரணையை மெகா | நடப்பது என்ன? குழுமம் செய்துள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 27, 2018; 9:15 am]
[#NEPR/2018122701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|