காயல்பட்டினம் புறவழிச் சாலையில் தறிகெட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டியவரால் விபத்து ஏற்பட்டு, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கார், தள்ளுவண்டி ஆகியன சேதமுற்றன. விரிவான விபரம்.
திருச்செந்தூரைச் சேர்ந்த குருசாமித் தேவரின் மகன் காளியப்பன். இவர் கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, காயல்பட்டினம் கடற்கரை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, தனது மனைவியுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழங்களை விற்ற பின், அருகிலுள்ள புறையூரில் நடைபெறும் கந்தூரியில் கடை போடுவதற்காக புறவழிச் சாலை வழியே தனது தள்ளுவண்டியைத் தள்ளியவாறு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே, பேயன்விளையைச் சேர்ந்த ராமைய்யா என்பவரது மகன் பால்பாண்டி என்ற இளைஞர் கட்டுக்கடங்காத வேகத்தில் இருசக்கர வாகதன்தைத் தறிகெட்டு ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த காரில் முட்டி, தள்ளுவண்டியில் மோதி, அவரும் வண்டியுடன் கீழே சரிந்தார். இதில் அவரது கையில் இரத்தக் காயம் ஏற்பட்டது. முட்டப்பட்ட கார் முன்பக்கச் சக்கரம் சேதமுற்றது.
தள்ளுவண்டியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அது சுக்குநூறாக நொறுங்கி, அதன் மீதிருந்த பழங்கள் அனைத்தும் சாலை முழுதும் சிதறிக் கிடந்தன.
சிறிது நேரத்தில் அவ்விடம் வந்த ஆறுமுகநேரி காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தியதோடு, அடிபட்ட பால்பாண்டியை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
|