உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வில், மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் ஆகியோர் சிறப்புரையாற்றியுள்ளனர். நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இரண்டாம் அமர்வு – மனநல ஆலோசனையாளர் ஆர்.கணேஷ் சிறப்புரை:
அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட அமர்வு துவங்கியது. இதில் Life Improvement Mind Engineering (LIME) நிறுவனர், பிரபல மனநல ஆலோசனையாளர் திரு ஆர்.கணேஷ் M.A., ''மனது என்ற மகா சக்தி'' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
மனதின் தாக்கம்...
துவக்கமாக அறிவுக்கும் மனதுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியவர், மனது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். படிப்புக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அவர், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகமானோர் படித்தவர்களே என்று கூறி, சமீப காலங்களில் நடை பெற்ற சில கொலை சம்பவங்களை உதாரணமாக எடுத்துரைத்தார். அடுத்து அறிவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர் அது குறித்து சம்பவங்களுடன் விளக்கினார். படிப்பு, அறிவு இதனைத்தாண்டி மனம் என்பது பக்குவப்பட்டதாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார்.
கைபேசியின் தாக்கம்:
தற்போதைய கால கட்டத்தில் மொபைல் போனின் தாக்கம் குறித்து பேசிய அவர் ''மொபைல் போனை நீங்கள் ஆட்கொள்வதில்லை. அது உங்களை ஆட்கொள்கிறது'' என்று கூறி அதனால் ஏற்பட்டு வரும் கடும் விளைவுகளை பல்வேறு சம்பவங்கள், தன்னிடம் கவுன்சலிங் வந்த, பாதிக்கப்பட்டிருந்த பலரிடமும் கேட்டறிந்த நிகழ்வுகள் மூலம் விளக்கி விட்டு, ''மொபைல் போனை பயன்படுத்துங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் அதில் தீயவைகளை பார்ப்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.
அறிவை ஆள்வது மனது!
அடுத்து அறிவை ஆள்வது மனது என்று கூறியவர், மனதின் வலிமை குறித்து எடுத்துரைத்தார். ''நாம் உண்ணும் உணவு மட்டும் உள்ளே செல்வதில்லை.அது மட்டும் உணவல்ல. மாறாக ஐம்புலன்கள் மூலமாக உள்ளே செல்லும் அத்தனையும் உணவுதான். சாப்பிடக்கூடிய உணவு எப்படி மலமாக வெளியே வருகிறதோ அதே போல்தான், உங்கள் காது வழியாக கேட்கும் கெட்டது, தொடு உணர்ச்சி மூலம் உள்ளே அனுப்பும் கெட்டது, நாவின் சுவை மூலமாக உள்ளே அனுப்பும் கெட்டது, கண்களால் பார்க்கக் கூடிய கெட்டது எல்லாம் உள்ளே போய் உன்னுடைய Behavior - ல் மலமாக வெளியே வருகிறது என்று கூறி உதாரணங்களுடன் விளக்கினார். சமீபத்தில் பெங்களூரில் ஒரு கல்லூரியில் சென்றிருந்த போது மாணவர்கள் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை எடுத்துக் கூறி, இங்குள்ள மாணவர்கள் காலை முதல் மிகவும் அமைதியாக இருந்து கவனித்து வருவதாக மகிழ்ந்து பாராட்டினார். பேச்சைக் கேட்பதற்கு மனமிருந்தால் மட்டுமே அமைதியாக அமர்ந்து கவனிக்க முடியும். மனமிருந்தால் மட்டுமே பேசப்படும் விஷயங்கள் உள்ளே போகும். 30,000 மடங்கு அதிகமானது ஆழ்மனது. எனவேதான் எனக்கு முன்பு பேசிய கலியமூர்த்தி IPS அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், முன்னேற்றம் குறித்தும் நிறைய பேசினாலும் அவரது உரையை முடிக்கும் போது உணர்ச்சி பூர்வமாக மனதை தொடுமளவுக்கு பேசி நிறைவு செய்தார் என்று கூறிய அவர், கேட்பது வேறு, கவனிப்பது வேறு என்று கூறி விட்டு இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கினார்.
மனது என்பது ஒரு மாபெரும் சக்தி. நமது மனம் வளம் பெற்றிருந்தால் உயர்ந்த நிலையை அடைந்திட முடியும். ஆனால் நாம் மனதை சாத்தானாக வைத்திருக்கிறோம். மனம் பெரும்பாலும் நல்லதை விட தீயவற்றிலேயே அதீத கவனம் செலுத்துகிறது என்று கூறி அது குறித்து சம்பவங்களுடன் விளக்கிய அவர், இதனை தவிர்ப்பதற்காகவே இஸ்லாம் மார்க்கம் மனிதர்களை ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கொருமுறை தொழுகையில் ஈடுபடச் செய்து, அதன் மூலம் இறைவனுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி நேரான வழியில் வாழ்ந்திட வழிவகுத்துக் கொடுத்துள்ளது. இஸ்லாம் மார்க்கம் வகுத்துத்தந்துள்ள இந்த அழகான வழிமுறை மூலம் கெட்ட சிந்தனைகளிலிருந்து விடுபட முடிகிறது.எனவே மனம் அமைதியிழக்கும் போதோ, சைத்தான் நம்மை வழிகெடுக்க முயற்சிக்கும் போதோ சில நிமிடங்கள் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யுங்கள். அவரவர்கள் வழிபடும் இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள். மனதை இறை சிந்தனையின் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். நம்மை கெடுக்க முயற்சிக்கும் சைத்தான் ஓடிவிடுவான். இதன் மூலம் தீயவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பேசிய அவர், பெற்றோர்கள் பிள்ளைகளின் மீதுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாக பல்வேறு சமயங்களில் பிள்ளைகளின் மனமுரண்டுக்கு முன் தோற்றுப்போவதாக உதாரணங்களுடன் கூறி விட்டு, தயவு செய்து மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடிக்கவோ, ஈகோ பார்க்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பெற்றோர் – ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள்:
தொடர்ந்து,பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைத்து விட்டு, குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களின் குடும்பப்பின்னணி குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அரவணைப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றும், அதற்கான காரணத்தை சில சம்பவங்களோடு விளக்கினார். குழந்தைகளிடம் அதட்டலாக, கோபமாக பேசுவதைக்காட்டிலும், அன்பாக பேசும் போது அதனால் ஏற்படும் நல்ல மாற்றங்கள் குறித்தும் சம்பவங்களோடு எடுத்துரைத்தார். அது போன்று பெற்றோர்களுக்கு அறிவுரை கூறும்போது, மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர் கண்டிகையில், உடனே ஆசிரியரிடம் சென்று மாணவருக்கு சாதகமாக பேசாதீர்கள். மாணவர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளை பெற்றோர்கள் ஆதரிக்காதீர்கள். தவற்றை அவ்வப்போது திருத்தி விடுங்கள். மேலும் உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். சந்தேகப்படாதீர்கள். அவர்களை அதிக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்காதீர்கள். கட்டுப்பாடுகள் அதிகமாகும் போது அவர்கள் பொய் சொல்வதற்கோ, தவறான செயல்களை மேற்கொள்வதற்கோ அது காரணமாகி விடும் என்று கூறி சில நிகழ்வுகளையும் உதாரணமாக எடுத்துரைத்தார்.
மாணவர்கள்தான் எதிர்காலம். ஆழ்மனதில் என்ன பதிய வைக்கிறோமோ அதுதான் செயல்வடிவில் வெளிவரும். எனவே உயர்ந்த எண்ணங்களை, வளமானதை மனதில் விதைத்து மாணவ - மாணவியர் மாண்புள்ளவர்களாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.
நினைவுப் பரிசு:
அதனைத்தொடர்ந்து சொற்பொழிவாற்றிய திரு ஆர்.கணேஷ் அவர்களுக்கு இக்ராஃ செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வழக்குரைஞர் முஹம்மத் ஜுனைத் சிறப்புரை:
அதற்கடுத்து மூன்றாவதாக ID CSB - Jetskills நிறுவனர், உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு வழிகாட்டி வழக்கறிஞர் பி.முஹம்மது ஜுனைத் M.Sc.(IT), L.L.B. ''இங்குதான் கல்வி கற்க வேண்டும்'' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
உயர்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் முறை:
தற்போது என்னென்ன படிப்புகள் உள்ளன. எதை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும், தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவமிக்க படிப்புகள், தேர்ந்தெடுக்க வேண்டிய கல்லூரிகள் குறித்தும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான படிப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும், அதை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைத்தார். அத்துடன் எந்தெந்த துறையில் எப்படி சேரலாம் என்பதையும், அரசு வேலைவாய்ப்புகள் குறித்தும் அதில் கிடைக்கும் கணிசமான ஊதியத்தையும் பட்டியலிட்டு விளக்கியதோடு, உயர்கல்வி (பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு) குறித்த ஏராளமான தகவல்களை மாணவ - மாணவியருக்கு வழங்கினார்.
நினைவுப் பரிசு:
அதனைத்தொடர்ந்து சொற்பொழிவாற்றிய வழக்கறிஞர் ஜனாப் பி.முஹம்மது ஜுனைத் அவர்களுக்கு இக்ராஃ இணைச் செயலாளர் ஹாஜி ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப் அவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நன்றியுரை:
அதனைத் தொடர்ந்து இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியவர்களுக்கும், கலந்து கொண்ட மாணவ-மாணவியருக்கும், அவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியர்கள் அனைவரையும் நிகழ்விடத்திற்கு அழைத்து வர தங்கள் கல்லூரியின் வாகனங்களை ஏற்பாடு செய்து தந்த வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், மாணவியருக்கான பெண்கள் பகுதியில் பணியாற்றிய இக்ராஃ பெண் தன்னார்வலர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும், நட்சத்திர பேச்சாளர் திரு கலியமூர்த்தி IPS அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற ஏற்பாடு செய்த, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலி அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கான அனுசரனையளித்து ஆதரித்த ரியாத், தம்மாம்,ஜித்தா, கத்தார் காயல் நல மன்றங்களுக்கும், நிகழ்ச்சி நடத்த இடம் தந்துதவிய காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) நிர்வாகிகளுக்கும், நிகழ்ச்சியை நேரலை ஒளிபரப்பு செய்த பாளையம் உமர் ஒலி அவர்களுக்கும் இக்ராஃ கல்விச் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
நிகழ்ச்சியின் இறுதியாக இக்ராஃ செயற்குழு உறுப்பினர் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஸலவாத், கஃப்பாரா ஓத, அதனைத் தொடந்து நாட்டுப்பண்ணுடன் மதியம் 02:30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பங்கேற்றோர்:
இந்த நிகழ்ச்சியில் இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் தவிர தாய்லாந்து காயல் நல மன்ற தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுதீன், துபை காயல் நல மன்ற தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புஹாரி, முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி துணி முஹம்மது உமர், ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலர் ஹாஜி சட்னி எஸ்.ஏ.ஸெய்யது மீரான், அபுதாபி காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஏ.ஆர்.ரிபாயி சுல்தான், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஸெய்யது அபுதாஹிர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமி மற்றும் கல்வி / சமூக ஆர்வலர்களான ஹாஜி மக்கி நூஹுத் தம்பி, ஹாஜி எம்.ஏ.ஆதம் சுல்தான், ஹாஜி எம்.ஏ.காதர் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்பாடு:
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது தலைமையில், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது, அல்ஹாபிஃழ் எம்.ஏ.செய்யது முஹம்மது, கே.கே.எஸ்.முஹம்மது ஸாலிஹ், எஸ்.கே.ஸாலிஹ், அல்ஹாபிஃழ் எம்.எம்.முஜாஹித் அலி மற்றும் எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான அனுசரணையை ரியாத், தம்மாம், ஜித்தா, கத்தார் காயல் நல மன்றங்கள் செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி துவக்கம் முதல் இறுதி வரை சமூக ஆர்வலர் பாளையம் உமர் ஒலி அவர்களால் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|