எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சவுதி அரேபியா – ஜித்தா, காயல் நற்பணி மன்றத்தின் 41-ஆவது பொதுக்குழு மற்றும் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு என “காயலர் குடும்ப சங்கமம்” துவக்க நிகழ்வுகள் ஜித்தா வான் படை விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இஸ்திராஹா எனும் மிக விசாலமான ஓய்வு இல்லத்தில் வைத்து சிறப்பாக நடந்தேறிய அந்நிகழ்வு குறித்த அம்மன்றத்தின் அறிக்கை:
கடந்த 08.02.2019 வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்ற ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் காயலர் குடும்ப சங்கமம் என்ற இனிய இந்நிகழ்வின் ஆரம்பமாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
வரவேற்பு:
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா- ஷரஃபியா, ஆர்யாஸ் உணவக வளாகம் முன் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் சகோ. எஸ்.ஹெச். அப்துல்காதர், சகோ. சட்னி எஸ்.ஏ .கே. செய்யது மீரான், மற்றும் சகோ. ஓ.எப். செய்யது முகம்மது ஷாதுலி தலைமையில் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தத்தமது வாகனங்களில் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர். புனித மக்காவிலிருந்தும், மதீனா மற்றும் யான்புவிலிருந்தும் தமது வாகனம் மூலம் உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களுடன் திரளாக வந்து சேர்ந்தனர். வருகை தந்த அனைவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் தலைமையில் வரவேற்புக் குழுவினர்கள், சகோ. ஏ.எம்.செய்யது அஹமது மற்றும் சகோ.எம்.டபிள்யூ.ஹாமீது ரிபாய் ஆகியோர் அகமகிழ வரவேற்றனர்.
காலை உணவு:
வந்திருந்தோர் அனைவருக்கும் சுவை மிக்க காலை உணவு பசியாற இட்லி,உளுந்துவடை மற்றும் ரவை உப்புமா வகைகள் பஃபே முறையில் பரிமாறப்பட்டும், காயலின் சுவைமிகு இஞ்சி ஏலம் தேயிலையுடன் உபசரிக்கப்பட்டது. வந்திருந்தோர் முகமலர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உற்சாகமாக உரையாடி, நலம் விசாரித்துகொண்டிருந்தனர். மறுபுறம் அமைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் புதிதாய் வந்தவர்கள் உட்பட உறுப்பினர்கள் யாவரும் தம் வருகையை பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பியும் தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராகவும் இணைத்து கொண்டார்கள்.
விளையாட்டு போட்டிகள்:
முதலாவதாக காலை 10:00 மணியளவில் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் சிறுசுகளின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. துள்ளிக்குதித்து வந்த சிறுவர்கள், சிறுமியர்கள், மழலைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஐப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.எஸ்.டி.ஷேக் அப்துல்லாஹ், சகோ எஸ்.ஹெச். அமீர் சுல்தான் மற்றும் சகோ அல்ஹாபிழ், எஸ்.ஐ.ஸல்மான் பாரிஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பெனால்டி கிக் போட்டி:
பெரியவர்களுக்கு வெளி விளையாட்டரங்கில், முதலாவதாக கால்பந்து பெனால்டி கிக் போட்டி அழகிய பெயரிட்டு 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகுழுக்கள் வழமையான உற்சாகத்துடன் கலந்து கொள்ள போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட பெரியவர்கள் காயல் வீதிகளில், விளையாடும் சிறார்களாக மாறி கள்ள விளையாட்டு - நசுவினி ஆட்டம் ஆட முற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண் முன் கொண்டு வந்தது. போட்டியில் பங்கு பெற்றவரகள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடும் சிறுவர்களாக மாறினர்.
வாலிபால் எனும் கைப்பந்து போட்டி:
அடுத்து வாலிபால் விளையாட்டு நடைபெற்றது. இவ்விளையாட்டும் 6 குழுக்களாக முன்னர் போல் பிரிக்கப்பட்டு விளையாடின. மிகுந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் நடந்தேறிய வாலிபால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
குட்டீஸ் போட்டிகள்:
மறுபுறம், குட்டீஸ்களுக்கான வெளி விளையாட்டரங்கில் மழலைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், பலூன் உடைத்தல், ஓட்டபந்தயம் என அனைத்து போட்டிகளிலும் மழலைகளும், சிறுவர்களும், சிறுமியர்களும் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர். சிறார்களின் விளையாட்டுக்களை தாய்மார்கள் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கான அனைத்து போட்டிகளையும் சகோ. அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஐப், மற்றும் சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் ஆகியோர் முன்னின்று வழமைப்போல் அழகுற நடத்தினர்.
மங்கையர்களுக்கான போட்டி:
விசாலாமான உள்ளரங்கில் மங்கையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. மங்கையர்களுக்குரிய போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர். மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர்.
ஜும்ஆ தொழுகை:
ஜும்ஆ தொழுகை நேரமானதால் மதியம் 12:00 மணிக்கு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, நீச்சல் குளம் திறக்கப்பட்டது. அதில் சிறியவர், பெரியவர் என அனைவரும் உற்சாகமுடன் நீந்தி விளையாடி மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் மதியம் 01:00 மணி அளவில் உள்ளரங்கில், ஜும்ஆ சிறப்புத் தொழுகை, காயல் ஆலிம் ஜனாப். செய்யிது முஹிய்யத்தீன் காஹிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஜும்மா தொழுகையை நிறைவேற்றிய பின் 41-ஆவது பொதுக்குழு மற்றும் 09-ஆம் அமர்விற்கான தேர்வு பெற்ற நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் ஆரம்பமாகியது.
பொதுக்குழுவை மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன் தலைமை ஏற்று நடத்த, சகோ.எஸ் எஸ் ஜாபர் சாதிக், சகோ.என்.எம். அப்துல் மஜீத், சகோ. செய்யிது முஹிய்யத்தீன் காஹிரி ஆலிம், சகோ.ஹாஜி முஹம்மது மீரா சாஹிப், சகோ.ஹாஜி அப்துல்லாஹ் சாஹிப், மற்றும் சகோ. கலவா முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை சகோ.ஷேக் அப்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். சகோ ஹாபிழ் எம்.என். ஸாலிஹ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
இந்த பொதுக்குழு சிறப்பாக நடை பெறுவதற்கு பெருந்திரளாக வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் தன் அகங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இம்மன்றம் ஆற்றிய பணிகளை சுருங்க சொல்லி, தலைமை உரை ஆற்ற வந்த இம்மன்றத்தின் தலைவர் குளம். எம்.ஏ. அஹமது முஹியத்தீன் தனதுரையில் மன்றம் இதுவரையில் என்னால் இயன்றவரை அமானிதமாக தந்த, அந்த தலைமை பதவியை சரியான முறையில் நடத்தி வந்தேனா என்று எனக்கு தெரியாவிட்டாலும், உங்களுக்கு நிச்சயமாக எல்லாம் தெரிந்திருக்கும். அதில் குறை இருப்பின் பொருந்திக் கொண்டு, இனி புதியதாக அமையவிருக்கின்ற புதிய தலைமைக்கு என்னால் முடிந்த ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தருவேன் என்று உறுதி கூறுவதோடு மன்றம் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிட எனது வாழ்த்துக்களையும் துஆவையும் தந்து, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டிக்கொண்டு தனது உரையை நிறைவு செய்து அமர்ந்தார்.
புதிய நிர்வாக குழுவினர்கள் அறிமுகம்:
மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட எழுவர் குழுவின் தலைவர் சகோ. எஸ்.எஸ் ஜாபர் சாதிக் அவர்கள் கடந்த அமர்வின் நிர்வாகிகளுடைய சேவைகளைப் பாராட்டி, அதுபோல் வரும் புதிய நிர்வாகிகளும் தொடர்ந்து நல்ல பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மன்றத்தின் கடந்த நிர்வாகக் குழுவை கலைத்து, 2019 - 2020 பருவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாக குழுவினர்களை பொதுக்குழுவில் அறிமுகம் செய்தார். புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வாசிக்க, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் அல்லாஹு அக்பர் என்று தங்களது ஆதரவைத் தெரிவித்து அகமகிழ்ந்தனர்.
மன்ற செயல்பாடுகள்:
இந்த மன்றம் தோன்றிய ஆரம்ப காலம் முதல் இன்றுவரை 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வந்து சென்றிருக்கின்றார்கள். பல உறுப்பினர்கள் தாயகம் சென்று விட்டார்கள். சிலர் இவ்வுலகை விட்டும் பிரிந்து மறு உலக வாழ்க்கை அடைந்துவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்பதவி கொடுப்பான், என்பதோடு எல்லோரும் ஒத்துழைப்பு தந்து இன்று வரை இம்மன்றம் உலகிலுள்ள எல்லா மன்றங்களுக்கும் எடுத்துக்காட்டாக, சிறந்த மன்றமாக சேவையாற்றி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதுபோல் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்திற்கு நாம் தொடர்ந்து முழு ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கி பின் நின்று பணியாற்றுவோம் என்று உறுதியளித்தார். மன்றம் இதுவரை வழங்கிய தொகை மற்றும் ஆற்றியுள்ள சேவைகளைப் பற்றி தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு பேசி உரையை நிறைவு செய்தார் மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.எ.கே. செய்யது மீரான்.
அடுத்ததாக உரை நிகழ்த்த வந்த மற்றுமொரு செயலாளர் சகோ.எம்.ஏ.செய்து இபுறாஹீம். இம்மன்றம் தோன்றிய ஆரம்ப நாள் முதல் கொண்டு நம் ஊர் மக்களுக்காக எத்தனையோ பல நன்மைகளை செய்துள்ளது, செய்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. உலகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனித மக்கமா நகரம் அருகில் இருக்கும் ஜித்தாவில் நமது மன்றம் உலகளாவிய அளவில் நல்ல, பெயருடன் புகழுடன் இருப்பதற்கு காரணம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையும், உங்களுடைய மேலான ஒத்துழைப்பும் தான். இதுபோல் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகக் குழுவினர் தொடர்ந்து, நமது ஊர், சமுதாய மக்களுக்காக பல சேவைகளை தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். புதிய தலைமையின் கீழ் இயங்கும் மன்றத்திற்கு எங்களுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்கும் என்பதை அறியத் தருகின்றேன். புதிய நிர்வாகக் குழுவினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் சகோதரர் எஸ் எஸ் ஜாபர் சாதிக் அவர்கள் தலைமையின் கீழ் ஏழு பேர் கொண்ட குழு அமைத்து, அவர்கள் கலந்து ஆலோசித்து நல்ல ஒரு முடிவை இங்கே வழங்கியிருக்கின்றார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்து தந்த உறுப்பினர்கள் அனைவரும் மிக துடிப்புடன் பணியாற்றக்கூடியவர்கள். அதன்படி புதிய நிர்வாகம் உங்கள் ஆதரவுடன் இன்று முதல் செயல்படும் என்பதை இங்கே அறியத்தருகின்றேன். எனக்கு முன் பேசியவர்கள் எல்லாம் மன்றத்தின் அருமை பெருமைகளை புகழ்ந்து கூறினார்கள் அந்த புகழ் நிலைத்து நின்று, நம் ஊர்மக்களுக்கு பலசேவைகளை செய்திட உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன். நாம் செய்த பணிகள் இலேசான பணிகள் அல்ல. நீங்கள் சாதாரணமாக அள்ளித்தந்த உங்களுடைய சந்தாக்கள் தான் எத்தனையோ பேருடைய கண்ணீரை துடைத்து இருக்கின்றது. பல பேருடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி இருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 1400 பயனாளிகள் இம்மன்றம் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள். நாம் செய்த சிறு உதவிகள் எல்லாம் அல்லாஹ்வின் புறத்தில் பல நன்மைகளை நமக்கு பெற்றுத் தரக்கூடியது. என்று சில ஹதீஸ்களையும் எடுத்துக்கூறி, இந்த மன்றத்தின் கண்ணியம் காப்பதிலே, நான் முனைப்பாக நின்றேன். நான் வகித்த இந்த பதவியில் நிறைவாக செய்திருந்தால் அது இறைவனுக்கே உரித்தானது, குறை இருப்பின் அது என்னைச் சார்ந்தது. என்னுடைய பணிக்காலங்களில் நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னுடைய செயல்பாடுகளிலோ, என்னுடைய பேச்சிலோ, யாருடைய மனதும் பாதித்திருந்தால், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மேலும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் ஆதரவும் தந்த அனைவரையும் நினைத்துப் பார்த்து நன்றி கூறுகின்றேன் என்று கூறி புதிதாக பதவியேற்கும் தலைவர் மற்றும் செயலாளர்கள் அவர்களின் திறமைகளையும், குணங்களையும் எடுத்துரைத்து புதிய நிர்வாகம் திறம்பட செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக தனது உரையை நிறைவு செய்தார்.
புதியதாக தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட சகோதரர் பிரபு எஸ். ஜே. நூர்தீன் நெய்னா தனது அறிமுக உரையில், இம்மன்றம் ஆரம்பகாலம் முதல் நல்ல முறையில் சிறந்த பணிகளை ஆற்றி வருகின்றது. நாம் கல்வி, மருத்துவம், சிறுதொழில் போன்றவற்றிற்காக எண்ணற்ற பயனாளிகளுக்கு உதவிகள் செய்து வந்துள்ளோம். நம் மன்றத்தின் மூலம் கல்விக்கென இக்ராஃ கல்விச் சங்கம், மருத்துவத்திற்கென ஷிஃபா அறக்கட்டளை மற்றும் மக்கள் மருந்தகம் ஆகியவற்றை நமதூரில் ஏற்படுத்தி அந்த பணிகளை திறம்பட செயலாற்றிய முன்னாள் உறுப்பினர்கள் பதவி துறந்து ஆலோசகர்களாக அமர்ந்து, எங்களை இந்த பதவியில் அமர்த்தி இருக்கின்றார்கள். அமானிதமாக எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பதவியை இறையருளால் நாங்கள் திறம்பட செயலாற்ற உங்கள் அனைவர்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தொடர்ந்து தர வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வதுடன், பதவி விலகிய நிர்வாக உறுப்பினர்கள் எங்களுக்கு மேலான நல்ல ஆலோசனைகளையும் தந்து எங்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதவிகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது நாங்களாக விரும்பி பெற்றதல்ல, உங்களின் ஆதரவோடு இந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளோம். இந்த மன்றம் இதுவரை ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. எந்த கொள்கையில் இருந்தாலும், எந்த அரசியல் அமைப்பில் இருந்தாலும், அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, நம் ஊர் மக்களின் நலனுக்காக இங்கே ஓன்றுகூடி செயல்படுவோம். இனிவரும் செயற்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வைக்கலாம் என்று இருக்கிறோம். இந்த மன்றத்தின் செயல்பாடுகள் ஜனநாயக முறைப்படி நடக்கிறது. ஆகவே யாரும் மனம் திறந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று நல்ல பல அழகிய கருத்துக்களை எடுத்துக்கூறி தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார்.
நிதி நிலை அறிக்கை:
கடந்த செயற்குழு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்தது, சந்தா மற்றும் நன்கொடைகளின் தற்போதைய வரவு மற்றும் இருப்பு விபரங்களை கூறியதுடன், மன்றம் ஆரம்பித்தது முதல் இதுவரையிலும் இந்த மன்றம் நம் மக்களுக்கு வழங்கிய மொத்த தொகையின் விபரம், மேலும் கடந்த ரமழானில் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு வழங்கிய தொகை என்று பட்டியலிட்டு விபரமாக மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அதனை அடுத்து புதியதாக சவுதி வந்து வேலையில் சேர்ந்த நமதூர் சகோதரர்கள் இம்மன்றத்தில் தங்களை இணைத்துக்கொண்டதுடன் ஒவ்வொருவராக வந்து தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.
காயல் களரி சாப்பாடு:
பொதுக்குழு நடைபெறும் வேளையில், காயல் மண்ணுக்கு சொந்தமான சுவைமிகுந்த களரி சாப்பாடு முதலில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பரிமாறப்பட்டது. அதன்பின் பொதுக்குழு கூட்டம் நிறைவேறியதும் ஆண்களுக்கான பந்தி ஆரம்பமானது. கமகமக்க சுவைமிகு களறி கறி, கத்தரிக்கா மாங்கா, புளியானம் என காயலை நினைவுபடுத்தி அதன் அதீத மணத்தால் மீண்டும் காயல் மண்ணுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றது. இச்சுவைமிக்க களரி சாப்பாடு, யான்பு சகோதரர்கள் ஒன்றிணைந்து சகோ கலவா இபுறாஹீம் தலைமையில் சிறப்புற தயார் செய்யப்பட்டிருந்தது.
உண்டு களித்து சிறிது ஓய்வெடுக்கும் வேளையிலே இன்னிசை இளவல் சகோ. எம். எப். யாகூத்துல் அர்ஸ் மற்றும் சகோ.ஆதம் அபுல் ஹசன் ஆகியோரது இனிய குரலோசையில் நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய பாடல்களை கேட்டு மகிழ்ந்தனர்.
அதன் பிறகு அஸர் தொழுகையை உள்ளரங்கில் கூட்டாக நிறைவேற்றிய பின், பட்டர் குக்கிஸ், பிஸ்கட், மற்றும் தேனீர் சுவையுடன் உள்ளரங்க போட்டி இசைப்பந்து சுற்று ஆரம்பமானது. வந்திருந்த அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்று இறுதியில் ஒருவர் வெற்றி கண்டார்.
அடுத்து மஃக்ரிப் தொழுகையும் கூட்டாக நடைபெற்றது.
சிறப்பு பட்டிமன்றம்:
தொழுகையை நிறைவேற்றிய பின் மிக அருமையான நகைச்சுவை பட்டிமன்றம், இன்றைய கால சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் மற்றும் வலைத்தளங்களின் பெருக்கம் நமக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்ற தலைப்பிலே ஆரம்பமானது. சாதகம் என்ற தலைப்பிலே சகோ. எம்.டபிள்யூ. ஹாமித் ரிஃபாய், சகோ.ஏ.எம்.செய்து அஹமது, சகோ.பிரபு. எஸ்.ஜே .நூருதீன் நெய்னா பங்குபெற, பாதகம் என்ற தலைப்பின் கீழ் சகோ.எம்.ஏ. செய்து இப்ராஹீம், சகோ. ஷேக் அப்துல்லாஹ், சகோ.ஆதம் அபுல் ஹஸன் ஆகியோர்கள் வாதிட்டனர். நடுவராக சகோ.குளம் அஹமது முஹியத்தின் இருந்து இருதரப்பு வாதங்களையும் உள்வாங்கிக் கொண்டு தனது அழகான தீர்ப்பை வழங்கி மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஆரவாரப்படுத்தினார். அதில் எத்தனையோ நல்ல விஷயங்களை நாம் அறிந்து கொண்டாலும், அதனை நல்ல முறையில் பயன்படுத்தி சில நன்மைகளை பெற்றாலும், அதில் அதிக தீமைகளே இருக்கிறது. அதனால் ஓடியாடி விளையாடும் சிறார்களையும், வாலிபர்களையும், மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் முடமாக்கி விட்டது. எனவே அது பாதகமே பாதகமே என்று கூறி கல கலப்பான பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.
கலகலப்பான அந்த பட்டிமன்றத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=8c74-TO53ic
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், ஆண்களுக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர். முன்னிலை வகித்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.
இறுதியாக ஜித்தா-ஷரஃபியா மற்றும் யான்பு ஆர்யாஸ் உணவகத்தில் உண்டுகளிக்க 50 ரியால் மதிப்புள்ள கூப்பன் 3 ஆண்களுக்கும், 75 ரியால் மதிப்புள்ள கூப்பன் 3 குடும்பத்தினருக்கும் என குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டது. அதில் சகோ. எஸ். ஹெச். அப்துல் காதர், சகோ. என்.எம். சம்சுதீன் தாரிக், சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் மற்றும் பெண்கள் சார்பாக அவர்களின் கணவன்மார்கள் பெற்றுக்கொண்டனர்.
நன்றியுரை:
குடும்ப சங்கம விழாவாக நடைபெற்ற இனிய இந்நிகழ்விற்கு அயராது பாடுபட்டு உழைத்த அன்பு சகோதரர்கள் அனைவர்களுக்கும், உணவு வகைகளுக்கு, குடிநீர், மற்றும் தின்பண்டம், பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவைகளுக்கு தாரளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், மக்கா, மதீனா யான்பு மற்றும் ஜித்தாவிலிருந்து வந்து பெருந்திரளாக கலந்து கொண்ட அனைவர்களுக்கும் சகோ.எம்.டபிள்யூ.ஹாமீது ரிபாய் தனது நன்றி கலந்த பாராட்டுக்களை கூறி நிறைவு செய்தார்.
பிரார்த்தனை:
சகோ.ஜனாப் செய்யிது முஹிய்யத்தீன் காஹிரி ஆலிம் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
சிறப்பு விருந்தினர்கள்: <>
ஜித்தா, மக்கா, மதீனா, யான்பு, ரியாத், தம்மாம், ஜீஸான் என சவுதி அரேபியாவின் கிழக்கு, மேற்கு, மத்திய வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திரளான காயலர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ரியாதில் இருந்து சகோ.ஆர்.எஸ்.எல்.. மீரா நெய்னா, தம்மாமில் இருந்து சகோ. ஏ.ஹெச். சதக்கத்துல்லாஹ், மற்றும் அமெரிக்காவில் இருந்து சகோ. குளம் எம்.டி. சேக்னா ஆகியோர் புனித மக்காவில் சிறப்பான உம்ரா கடமைதனை நிறைவேற்றி விட்டு இந்த காயலர் குடும்ப சங்கமத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இதில் கலந்து கொண்ட அனைத்து காயலர்கள் ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் KWA-JEDDAH பெயர் பதித்த T-Shirts அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் 118-ஆவது செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 01-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 07-00 மணிக்கு வழமைப்போல் இம்பாலா கார்டனில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
காயலர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பை சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ..சட்னி எஸ்.ஏ.கே,செய்யது மீரான், சகோ. எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் , சகோ.சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி, மற்றும் சகோ. பொறியாளர் அல்ஹாபிழ்,எம்.ஹச்.முஹம்மது அலி ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
08.02.2019.
|