உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சியில், புகழ்பெற்ற நட்சத்திரப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரையாற்றியுள்ளார். நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இக்ராஃ ஏற்பாட்டில் நடைபெற்ற “வெற்றிப்படிகள்” வழிகாட்டு நிகழ்ச்சி! நட்சத்திர பேச்சாளர் கலியமூர்த்தி IPS பங்கேற்பு!
காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த 13ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம். இதற்கு உறுதுணையாக உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு காயல் நல மன்றங்களும், அறக்கட்டளைகளும் இக்ராஃவுடன் இணைந்து பல கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியும், அணுசரணையளித்தும் வருகிறது.
நவீனங்கள் மிகைத்து விட்ட இக்காலத்தில், கல்வியின்றி- அதுவும் உயர் கல்வியின்றி முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. அம்முன்னேற்றத்தை அடையச் செய்திடும் உயர்கல்வி எது என சரிவர தெரியாமலும், எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடல் இல்லாமலும் ஒரு இலக்கற்ற பயணமாகவே இன்றைய மாணவ- மாணவியரின் கல்விப் பயணங்கள் அமைந்துள்ளன. இதனால் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் அமையாமலோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போய் விடுகிறது.
நிகழ்முறை:
இக்குறையைக் களைந்திட, பெரு நகரங்களில் தேவையான வழிகாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை காயல்பட்டினத்திலும் நடத்தி, இந்நகர மாணவ சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் வருடம்தோறும் பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் 2018-19 கல்வியாண்டின் முக்கிய கல்வி நிகழ்ச்சியாக ''வெற்றிப் படிகள்'' என்ற நிகழ்ச்சி இக்ராஃ கல்விச் சங்க ஏற்பாட்டில் கடந்த 09-01-2019 புதன் கிழமையன்று காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடைபெற்றது.
பங்கேற்ற பள்ளி மாணவ - மாணவியர்:
நகரிலுள்ள சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகிய ஏழு பள்ளிகளைச் சார்ந்த 10 மற்றும் +2 பயிலும் 1200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் தமிழ் பிரிவு மாணவியர் மற்றும் நகரின் கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஏ.கலியமூர்த்தி IPS அவர்கள் ''மாணவர்களின் வெற்றிப்பாதை'' என்ற தலைப்பிலும், மனநல ஆலோசனையாளர் திரு ஆர்.கணேஷ் M.A. அவர்கள் ''மனது என்ற மகா சக்தி!'' என்ற தலைப்பிலும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி, வழக்கறிஞர் பி.முஹம்மது ஜுனைத் M.Sc.(IT), L.L.B. அவர்கள் ''இங்குதான் கல்வி கற்க வேண்டும்'' என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்ற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
முன்னிலை வகித்தோர்:
நிகழ்ச்சி காலை 10:30 மணிக்கு துவங்கியது. இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மது தலைமை தாங்கினார். இக்ராஃ செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, இணைச்செயலாளர் ஹாஜி ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப், இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால், ஹாஜி ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத் தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுதீன், ஜித்தா காயல் நற்பணி மன்ற பொருளாளர் எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம், துபை காயல் நல மன்ற துணைத் தலைவர் சாளை ஷேக் ,ஸலீம், மற்றும் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் துணைச்செயலர் அல்ஹாபிஃழ் எஸ்.ஏ.ஆர்.அஹமது இஸ்ஹாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். அல்ஹாஃபிழ் ஐ.நஜ்முதீன் ஹுனைஃப் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து இக்ராஃ துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மது வரவேற்புரையாற்றினார். அடுத்து சிறப்பு பேச்சாளர் குறித்த அறிமுகவுரையை இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வழங்கினார்.
கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். சிறப்புரை:
அதனைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும், சமூக சிந்தனையாளரும், புகழ்பெற்ற நட்சத்திர பேச்சாளருமான திரு ஏ.கலியமூர்த்தி IPS ''மாணவர்களின் வெற்றிப்பாதை'' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இக்ராஃவுக்குப் பாராட்டு:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்விச் சேவைகளையும், நிகழ்ச்சி ஏற்பாட்டையும் வெகுவாகப் பாராட்டிப் பேசிய அவர், இது போன்ற கல்விப்பணிகளை உலகின் எந்தப் பகுதிகளிலெல்லாம் மேற்கொள்ளப் படுகிறதோ அந்த ஊர் சிறந்து விளங்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது என்று கூறி விட்டு, சாதி, சமய வேறுபாடின்றி காயல்பட்டினத்தின் அனைத்து சமுதாய மக்களும் கல்விக்காக இந்த அரங்கில் ஒன்று கூடியுள்ளதை பார்க்கும் போது உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்த அவர் தாமும், மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நடை பெற்ற ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டி அப்துல் கலாம் அவர்கள் தெரிவித்த ''வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு'' என்ற கூற்றை இங்கே கண்கூடாகக் கண்டு மகிழ்வதாகவும், இந்த ஊரில் மதுக்கடைகளே இல்லை என்பதை கேள்விப்பட்டு ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த பெருமை உங்கள் அனைவரையும் சாரும் என்றும் கூறிய அவர் தயவு செய்து இதை தொடருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
வாழ்வில் வெற்றி பெற...
அடுத்து மாணவ - மாணவியரை நோக்கி, ''எனது பேச்சை கவனமாக கேட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அறிந்து தெளிவு பெற்று வெளியேறுவீர்கள்'' என்று கேட்டுக் கொண்ட அவர், துவக்கமாக தமிழ் மொழியின் சிறப்பு பற்றி சில நிமிடங்கள் உரையாற்றினார். தொடர்ந்து கல்வியின் சிறப்பு பற்றி விளக்கினார். அப்போது, படித்தவர்கள் - படிக்காதவர்கள், ஏழைகள் - செல்வந்தர்கள், உயர்ந்தவர்கள்- தாழ்ந்தவர்கள் என யாராக இருந்தாலும் முதலில் விசாரிக்கும் போது என்ன படித்துள்ளீர்கள் என்றுதான் கேட்பார்களே தவிர எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளீர்கள் என்று கேட்பதில்லை. இந்த இக்ராஃ அறக்கட்டளையானது என்ன படிக்க வேண்டும்? எப்படி முன்னேற வேண்டும் என்று விளக்கவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்களே தவிர பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதற்காக நடத்தவில்லை. பணத்தை தேடியே ஓடிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இந்த அறக்கட்டளை கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சி நடத்துகிறார்களே ஏன்? கல்வி ஏழைகளுக்கு செல்வம். செல்வர்களுக்கு அணிகலன். வீட்டிற்கு விளக்கு, நாட்டிற்கு நன்மை, பெண்களுக்கு பாதுகாப்பு.
மனிதனாக இரு!
பள்ளிகளின் சிறப்பு என்பது நீங்கள் நினைப்பதை விட பெரியது. ஏனென்றால் கோயிலுக்கு செல்ல இந்துவாக இருக்க வேண்டும். மசூதிக்கு செல்ல இஸ்லாமியராக இருக்க வேண்டும். தேவாலயத்திற்கு செல்ல கிறிஸ்துவராக இருக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளிக்கு வரவேண்டுமென்றால் மனிதனாக இருந்தால் மட்டுமே போதும். இதுதான் பள்ளியின் சிறப்பு என்று கூறிய அவர், ''ஊருக்குள் நுழையும் போது பார்த்தேன், கூட்டமாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். என்ன கூட்டம் என்று கேட்டேன். ரேஷன் கடையென்றும், இலவச பொங்கல் பரிசு பொருட்கள் வாங்கிட காத்திருப்பதாகவும் சொன்னார்கள். உள்ளபடியே மனம் கணத்தது. நீங்கள் பிளஸ் டு வரை படித்து இந்நிகழ்ச்சியில் வந்து அமர்ந்திருக்கிறீர்களே. இதெற்கெல்லாம் யார் காரணம் என்று யோசித்துள்ளீர்களா? உங்கள் படிப்பா? மதிப்பெண்களா? திறமையா? அறிவா? அழகா? இல்லை. இதெல்லாம் இரண்டாம் பட்சம். மூல முதல் காரணம் என்ன தெரியுமா? இப்படி கடும் வெயிலிலும், மழையிலும், வயலிலும், வரப்பிலும், அலுவலகத்திலும், வீட்டிலும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் முதுகெலும்பு ஓடிய பாடுபடுகின்ற தந்தையையும், முழு வயிறு காணாமல் உங்களை வளர்க்கின்ற தாயையும் நீங்கள் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான் இந்த கல்வியை 12 ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்றார்.
கல்வியின் மகத்துவம்:
''இந்தியாவில் கோடிக்கணக்கான மாணவர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் காலெடுத்து வைக்க முடியாமல் தவிக்கிறார்கள். உங்களுக்கு இந்த அருமை, பெருமை புரிய வேண்டுமென்றால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்த கல்வி ஒன்றுதான் பிறப்பு முதல் இறப்பு வரை உதவக்கூடியது. இந்த கல்வி ஒன்றுதான் படிக்கின்ற மாணவனையும், அவன் பிறந்த வீட்டையும், இந்த நாட்டையும் உயர்த்தக் கூடியது. அதனால்தான் இந்த இக்ராஃ அறக்கட்டளையானது இந்த கல்விப் பணிகளை செய்து வருகிறது. அதுமட்டுமல்ல எவ்வளவு பெரிய கோடீஸ்வரனுக்கு நீ மகளாக பிறந்தாலும், மகனாக பிறந்தாலும் கல்வியை, அதன்மூலம் வருகின்ற அறிவை - பெற்றோர்களிடமிருந்து பணத்தை, நிலத்தை, வீட்டை சொத்தாக பெறுவதைப் போல் எவராலும் பெற முடியாது. நீ படித்துத்தான் பெற முடியும். இதுதான் கல்வியின் பெருமை'' என்று கூறிய அவர் பெண்களுக்கும் ஏன் கல்வி முக்கியம் என்பது குறித்தும், கல்வியின் சிறப்பு குறித்து நபிகள் பெருமானார் உட்பட அறிஞர் பெருமக்கள் பலரும் கூறியவற்றையும் அடுக்கடுக்காக எடுத்துரைத்து விட்டு 12 -ஆம் வகுப்பு படித்து முடித்ததும் பெண்களை முடக்கி வைக்காமல் தொடர்ந்து படிக்க வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
தலை குனிந்தால் தலை நிமிரலாம்!
தொடர்ந்து மாணவ - மாணவியரை ஊக்கப் படுத்திப் பேசிய அவர், ''அத்துனை பேரும் சாதிக்கப் பிறந்தவர்கள். யாரெல்லாம் புத்தகத்தை நோக்கி தலை குனிகிறார்களோ அவர்கள் நாளை உலகில் தலை நிமிர்ந்து நடக்கலாம். நீங்கள் தலை நிமிர வேண்டுமா? தலை குனிய வேண்டுமா? பிளஸ் டூ பரீட்சை வருகிறது. நீங்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமானால் தலை குனிந்து படியுங்கள். ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் படிக்க வேண்டும்'' என்று கூறியவர், இந்திய அளவில் NEET தேர்விலும், JEE தேர்விலும் முதன்மையாக வந்த இரு மாணவர்களை சந்திக்கையில் அவர்களின் வெற்றி குறித்து தனித் தனியாக கேட்ட போது இருவரும் சொன்ன ஒரே பதில் ''TV பார்த்து 3 வருடம் ஆகிறது. செல்போனை தொட்டு 2 வருடம் ஆகிறது. தினமும் 10 மணி நேரம் படிப்பேன்'' என்றனர்.\இப்படி கடின உழைப்புடன் படிப்பவர்கள் முதலாவதாக வருவார்களா வரமாட்டார்களா? உங்களால் ஏன் முடியாது? உங்களிடம் உள்ள திறமை உங்களுக்கே தெரியாது. அதுதான் பிரச்சனை என்று கூறியவர், உங்களாலும் முடியும் என்று பல்வேறு உதாரணங்களுடன் கூறி நம்பிக்கையூட்டியதோடு, வாழ்க்கையில் இன்பமாக இருக்க வேண்டுமானால் சிறுது காலம் கஷ்டப்பட்டு கல்வி கற்றேயாக வேண்டும் என்று கூறி விட்டு, குறிப்பாக ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசியதோடு, தனது வாழ்வில் சந்தித்த பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துரைத்து முன்னேற்றத்திற்கான நம்பிக்கையூட்டினார். அத்துடன் கல்வி வேறு, அறிவே வேறு என்பதை விளக்கிப் பேசி விட்டு, படித்தவர்கள் - படிக்காதவர்களின் வேறுபாடுகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சரியான உயர்கல்வியால் மட்டுமே உயர்வான வேலைவாய்ப்பு!
அடுத்து கல்லூரிப் படிப்பு முடித்தவர்கள் நிலை குறித்து பேசிய அவர், 5 கோடி வேலைகள் இந்தியாவில் காலியாக உள்ளது. ஆனால் 50 கோடிக்கு மேல் வேலை இல்லாமல் உள்ளனர். வேலை உள்ளது. ஆனால் வேலை இல்லாமல் உள்ளனர். ஏன்? இந்தியாவில் இலட்சக்கணக்கானோர் B.E. படித்து விட்டு திறமையற்றவர்களாக வேலைவாய்ப்பின்றி உலா வருவதையும், 80 சதவிகிதம் பொறியியல் பட்டதாரிகளும், 90 சதவிகிதம் ஆர்ட்ஸ் பட்டதாரிகளும் வேலை வாய்ப்பு பெற தகுதியற்றவர்களாக திகழ்வதாக ஆய்வறிக்கை கூறுவதை வேதனையுடன் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் ஒருவர் பொறியியல் பட்டதாரி என்று ஒரு சான்றிதழை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதாகவும், இதுவே அமெரிக்காவில் பொறியியல் படிப்பவர்கள் அத்துடன் மேற்படிப்பு P.hd வரை படித்தும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு திறமையான ஒரு பொறியாளராக மாறி செயலாற்றி வருவதையும் உதாரணங்களுடன் கூறி விட்டு, திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்றும், மாறாக பல பாடங்களில் Arrears போட்டும், 40 சதவிகித மதிப்பெண்கள் எடுப்பதற்கும் பதிலாக படிக்காமலேயே இருந்து விடலாம் என்றும் வேதனையுடன் கூறினார்.
நூல் வாசிப்பு:
அடுத்து நூல் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். வாளினுடைய கூர்மையும், நூலினுடைய கூர்மையுமே இந்த உலகை ஆள்கிறது. காலப்போக்கில் வாளினுடைய கூர்மை முனை மழுங்கி நூலினுடைய கூர்மை மட்டுமே ஆட்சி செய்யும் அளவுக்கு எஞ்சி நிற்கிறது. கூர் தீட்டப்படாத எதுவும் முனை மழுங்கிப் போகும். மூளையும் அப்படித்தான். நம்முடைய மூளை கூர் தீட்டப்படவேண்டும் என்று கூறிய அவர், மரணத் தருவாயில் கூட நூலை வாசித்தவர்களின் சரித்திரத்தை எடுத்துக் கூறி விட்டு, மரணத்தின் பிடியில் இருந்தவர்களே நூலை வாசித்து அறிவை வளர்த்துக் கொண்டிருக்க, நூறாண்டு காலம் வாழ வேண்டிய நாம் நூல் வாசிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டு விட்டு, மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும் நினைவுபடுத்தினார்.
எண்ணம் போல் வாழ்வு!
எனது உரையை முழுமையாக கேட்டு கடைபிடிப்பீர்களானால் உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும் என்று கூறியவர், இந்த இக்ராஃ அமைப்பு என்னைப் போன்றவர்களை இங்கே அழைத்து வந்து பேச வைப்பது ஏன்? எவராவது உங்களில் 10 பேர் IAS / IPS ஆகி விட மாட்டார்களா? பெரிய விஞ்ஞானியாக ஆகி விட மாட்டார்களா? அல்லது மிகப்பெரிய மாமனிதர்களாக ஆகி விட மாட்டார்களா? என்ற ஆசைதான். நான் இந்த அரங்கினுள் நுழையும் போதே ''இறைவா! இந்த ஆயிரம் பேர்களில் குறைந்தது நூறு பேருடைய வாழ்க்கையிலாவது மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடாதா'' என்று நினைத்துக் கொண்டே நுழைந்தேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீ என்ன ஆக வேண்டும் என்று எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய். நான் ஒரு IAS / IPS, ஆசிரியர், விஞ்ஞானி யாக ஆக வேண்டும் என்று எதை வேண்டுமானாலும் எண்ணி முயற்சி செய்தால் அதை அடைந்து விடுவாய். இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. நாம் எதை நினைக்கிறோமோ அதையே அடைவோம்.எனவே எண்ணுவதை உயர்ந்ததாக, பெரிதாக எண்ணுவோம் என்றார்.
விடா முயற்சியே நிறைவான பலன் தரும்!
மனிதன் வித்தியாசமாக சிந்திப்பதன் மூலம் தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மட்டுமின்றி நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்காட்ட முடியும் என்பதுதான் இந்த இக்ராஃ அறக்கட்டளையின் நோக்கமே. உங்கள் எல்லோரின் வாழ்க்கைப் பாதையை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் அடிப்படை நோக்கம். உங்களைப் பார்க்கும் போது உங்களினுள் ஏதோ ஒன்று இருப்பதை நான் பார்க்கிறேன். என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அனைவரிடமும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதுதான் மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. உன்னுடைய ஆர்வம் என்ன என்பதை கண்டு பிடித்த மாத்திரத்திலேயே உனது வெற்றியின் பாதையில் முதல் படியில் அடியெடுத்து வைக்கின்றாய். அடுத்த படி என்ன தெரியுமா? உனது ஆர்வம் என்ன என்பதை தெரிந்து கொண்டு உடல், பொருள், ஆவி, நாடி, நரம்பு அனைத்தையும் அதில் செலவு செய்தால் வெற்றி உன்னுடைய கதவை தட்டும் என்று கூறிய அவர், தன்னுடைய ஏழ்மை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விளக்கினார். நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பணமின்றி கல்லூரியில் படிக்க முடியாமல் போன துவக்க காலத்தை சுட்டிக்காட்டி தனது உயர்ந்த நோக்கம், அயரா முயற்சிகள் மூலம் SP ஆக உயர்ந்து வந்த பாதையை நினைவு கூர்ந்தார்.
இலட்சியமில்லா வாழ்க்கை முகவரியில்லாக் கடிதம் போல!
''இலட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்தைப் போன்றது. மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒற்றைக் குறிக்கோளை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்த வரை செய்வதல்ல முயற்சி. முடியும் வரை செய்வதே முயற்சி. போராடத் துணிந்த அத்தனை பேருக்கும் வெற்றிக்கதவு திறந்தே இருக்கிறது'' என்று நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித்தெளித்த அவர், ''சிறு வயதிலேயே உங்களை வருத்திக் கொண்டு முயற்சி செய்தால் வாழ்க்கை முழுதும் இன்பமாகி விடும். மாறாக சிறு வயதிலேயே இன்பமாக இருந்து கொண்டு கடினமாக உழைக்கவில்லையென்றால் வாழ்க்கை முழுதும் கஷ்டப்படுவீர்கள். எனவே கடினமாக படித்து முன்னேற கற்றுக் கொள்ளுங்கள். கடின உழைப்பில்லாமல் யாரும் முன்னேறியதாக உலகில் சரித்திரம் இல்லை'' என்று கூறினார்.
பெற்றோரின் கண்ணீருக்குக் காரணமாகி விடாதீர்!
இறுதியாக பெற்றோர்களின் சிறப்புப் பற்றியும், பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது செலுத்தும் அன்பு, பாசம், தியாகம் குறித்தும், அவர்கள் மீது மாணவ-மாணவியர் அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், அவர்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமை குறித்தும் எடுத்துக் கூறிய அவர், தாயின் சக்தி எவ்வளவு உன்னதமானது என்பதையும், பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் சில சம்பவங்கள் மூலம் எடுத்துரைத்தார். அப்போது கேட்டுக் கொண்டிருந்தவர்களில் பலரும் கண்கலங்கியதை பார்வையிட்ட அவர் அந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டி, தயவு செய்து இந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் யாரும் உங்கள் பெற்றோரின் கண்களில் கண்ணீர் வருவதற்கு காரணமாகி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட அவர், இந்த காயல்பட்டினம் மாணவர்களிடம் பேசியது அத்தனையும் வார்த்தைகளல்ல. விதைகள்! இந்த நிலம் வளமான நிலம் என்பதை நானறிவேன். வளமான நிலத்திலே விழுகின்ற விதைகள் ஆலமரம் போன்று தழைத்தோங்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என்று நம்பிக்கை விதைகளை விதைத்து இக்ராஃவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
கூர்ந்து கவனித்த மாணவர்கள்...
(ஒவ்வொருவரும் முன்னேறுவதற்கான ஒரு இலட்சியத்தை,தாமே ஏற்படுத்திக் கொள்வது, அந்த இலக்கை அடைவதற்கு கனவு காண்பது, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது, அதற்கடுத்து அதற்கான கடின உழைப்பை மேற்கொள்வது என துவங்கி இதனை எப்படி அடைவது என்பது வரை பல்வேறு சம்பவங்கள், தனது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், பல்வேறு சாதனையாளர்களின் பின்னணி, அவர்களின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருந்த அயராத உழைப்பு, ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பொன்னானது என்பதனையெல்லாம் உதாரணங்களுடன் தெளிவாக, எளிதாக மாணவ-மாணவியர் புரிந்து கொள்ளும் வண்ணம் விரிவாக விளக்கிய இவரின் பேச்சை அனைத்து மாணவ-மாணவியரும் இறுதி வரை எவ்வித சலசலப்புமின்றி கூர்ந்து கவனித்தது இவரது பேச்சின் வசீகரத்தை உணர்த்தியது). .
நினைவுப் பரிசு:
அதனைத்தொடர்ந்து சொற்பொழிவாற்றிய திரு ஏ.கலியமூர்த்தி IPS அவர்களுக்கு இக்ராஃ துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மது அவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது. இந்த இடைவேளையின் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் திரு ஏ.கலியமூர்த்தி IPS அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆசிரியர்களும், மாணவ - மாணவியரும் நேரில் சந்தித்து பேசியும், கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். மாணவியர் பலரும் அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்று மகிழ்ந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|