காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 05 அன்று இருபத்து எட்டாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, விளக்கவுரையையும், அந்நாள் மிஃராஜ் நாள் என்பதால் அதுகுறித்த வரலாற்றையும் – காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழங்கினார். அன்று இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அவர்களின் நினைவு நாளாதலால், அவர்களது வாழ்க்கைச் சரித உரையை ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்கினார்.
அன்று 19.00 மணிக்கு, சட்டமேதை ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதும், அஜ்மீர் காஜா நாயகம் அவர்கள் மீதும் புகழ்மாலை (மர்திய்யா) ஓதும் மஜ்லிஸ், காயல்பட்டினம் ஷெய்கு ஹுஸைன் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் என்.டீ.ஷெய்க் சுலைமான் ஜுமானீ தலைமையில் நடைபெற்றது. ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் எஸ்.ஏ.அஹ்மத் யாஸீன் கிராஅத் ஓதி துவக்கி வைக்க, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா துஆ ஓதி நிறைவு செய்தார்.
ரஜப் 29ஆம் நாள் (ஏப்ரல் 06) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.கே.காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ வழங்குகிறார். அந்நாள் சட்டமேதை ஷாஃபிஈ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் என்பதால் அவர்களது வாழ்க்கைச் சரித உரையை, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|