காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுவதும் வழமை. அந்த அடிப்படையில் 07.04.2019. ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதிகாலை நிகழ்ச்சிகள்:
அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாமிதிய்யா மத்ரஸா மாணவர் எஸ்.எம்.நூஹ் மிக்தாத் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிறைவுநாள் பாடம் ஓதித் துவக்கி வைக்கப்பட்டது.
காலை நிகழ்ச்சிகள்:
காலை நிகழ்ச்சிகளை – தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ‘அக்கு ஹீலர்’ ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார். அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்கினார்.
தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் என்.டீ.எஸ்.முஹம்மத் சாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ உரையாற்றினார்.
அபூர்வ துஆ பிரார்த்தனை:
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூ தாஹிர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.
சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், நாட்டு நலன், நிலையான நல்லாட்சி, இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, விவசாய நல்விளைச்சல், விவசாயிகளுக்குப் பாதுகாப்பு, நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு, நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்துகொண்டனர்.
பிரார்த்தனையில் பங்கேற்ற முக்கியமானோர்:
காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர், செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உட்பட - நகர பொதுமக்களும், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இட வசதி:
ஆண்களுக்கு, மஜ்லிஸின் ஆண்கள் பகுதி ஹல்கா, பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, குருவித்துறைப்பள்ளியின் உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, குருவித்துறைப்பள்ளி மையவாடி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பெண்களுக்கு, மஜ்லிஸின் பெண்கள் பகுதி ஹல்கா, கிழக்குப் பகுதி மைதானம், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா, வாவு அப்துல் கஃப்பார் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒரே குரலில் ‘ஆமீன்’ என்று கூறி, துஆ - பிரார்த்தனை செய்தனர்.
துஆ இறைஞ்சிய ஆலிமுக்கு வழியனுப்பு:
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிறைவுற்ற பின்னர், துஆ இறைஞ்சிய ஆலிமை - ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் பாடி நகர்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
ஆறுமுகநேரி காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸ் வைபவக் கமிட்டியின் சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கே.எம்.டீ. மருத்துவமனை, எஸ்.டி.பீ.ஐ. கட்சி ஆகியவற்றின் சார்பில் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனம் நிகழ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரிலிருந்து தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அப்பாபள்ளித் தெருவிலிருந்தே வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பாபள்ளித் தெரு - தீவுத் தெரு சந்திப்பில் துவங்கி, மஜ்லிஸ் வளாகம் வரை ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
அரபிக் கல்லூரிகளுக்கு விடுமுறை:
அபூர்வ துஆ பிரார்த்தனையை முன்னிட்டு, அன்று காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரி, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு உள்ளிட்ட மத்ரஸாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மாலை நிகழ்ச்சிகள்:
16.45 மணிக்கு, நபிகள் நாயகம் மீது சுப்ஹான மவ்லித் ஓதும் மஜ்லிஸ் நடைபெற்றது. மஸ்ஜிதுல் ஈமான் பள்ளியின் இமாம் கே.எம்.ஹாமித் லெப்பை தலைமையேற்க, ஹாமிதிய்யா மாணவர் ஹாஃபிழ் எச்.கே.எம்.முஹம்மத் அலீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
17.35 மணிக்கு எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இரவு நிகழ்ச்சிகள்:
19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்பில் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியின் இமாம் மக்கீ ஹாமித் லெப்பை தலைமையில் நடைபெற்றது.
21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மாணவர் எம்.ஏ.ஹைதர் அலீ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா கைரீ வழங்கினார்.
நேர்ச்சை வினியோகம்:
ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா நன்றி கூற, கே.எம்.டீ. பள்ளியின் இமாம் எஸ்.எம்.செய்யித் ஹுஸைன் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மறுநாள் (08.04.20189. திங்கள்) 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் என்.டீ.எஸ்.முஹம்மத் சாலிஹ் ஆலிம், துணைத்தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், மேலாளர் என்.எஸ். நூஹ் ஹமீத், இணைச் செயலாளர்களான எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் சாலிஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ, துணைச் செயலாளர் என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஆகிய நிர்வாகிகளும், வைபவக் கமிட்டி தலைவர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஆலிம் தலைமையில் – மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, குளம் முஹம்மத் தம்பி உள்ளிட்ட வைபவக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
நோனா உவைஸ் & தினகரன் ப்ரவீன் |