காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் குடிநீருக்காக வரியையும் தவறாமல் செலுத்திவிட்டு, தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடுவதைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் - சுமார் 9500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. நகரின் தினசரி தேவையான 36 லட்சம் லிட்டர் குடிநீர் - தினமும், பொன்னங்குறிச்சி திட்டம் மூலம் பெறப்பட்டாலும், நான்கு நாட்களுக்கு ஒருமுறையே பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரும் முறையாக வழங்கப்படுவதில்லை.
மக்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றான குடிநீர் வழங்கும் ஒப்பந்தப்புள்ளி விநியோகம் விஷயத்தில் - முறையான முன் அனுபவ நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாமல், மாதவன் என்ற நபருக்கு இப்பணிகளில் வழங்கப்பட்டுள்ளது.
எப்போது தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் - நகராட்சி மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. வரியையும் செலுத்திவிட்டு, ஒவ்வொரு நாளும் - எப்போது தண்ணீர் வரும் என்று மக்கள் ஏங்கி நிற்கும் அவலம் நிலவுகிறது.
12.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரம் காயல்பட்டினம். 50,000 மக்கள் வாழும் இவ்வூரில் - எப்போது தண்ணீர் வழங்கப்படும் என்ற அடிப்படை தகவலை தெரிவிக்க காயல்பட்டினம் நகராட்சி எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
வழிபாட்டுத்தலங்களில் குடிநீர் திறக்கும் தினங்களில் அறிவிப்பதாக கூறுகிறார்கள். இது எல்லா வழிபாட்டுத்தலங்களிலும், எல்லா நாட்களிலும் செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தாலும் - இது எல்லா மக்களையும் சென்றடையவதில்லை.
காயல்பட்டினம் நகரின் - முக்கிய பகுதிகளில் தகவல் பலகை நிறுவி, குடிநீர் வழங்கப்படும் நேரம் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். காயல்பட்டினம் போன்ற பெரிய நகரில் - இது சாத்தியமான விஷயம் அல்ல. எப்போது தண்ணீர் வரும் என வீடுகளில் உள்ள பெண்களும், முதியவர்களும் தினமும் - சாலைகளுக்கு வந்து, தகவல் பலகையை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.
எனவே - தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், குறுஞ்செய்தி, சமூக ஊடகம், உள்ளூர் தொலைக்காட்சிகள் போன்ற எளிதான வகையில் இந்த தகவல்களை வழங்கிட பல முறை இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மெத்தன போக்கினை கடைபிடித்து வருகிறார்.
// பல தினங்களில் காலையில் குடிநீர் வழங்கப்படும் என அறிவித்தால், மாலையில் தான் வழங்கப்படுகிறது.
// திடீரென சில தினங்களுக்கு - பராமரிப்பு பணி என குடிநீர் வழங்கப்படுவதில்லை. எந்த பராமரிப்பு பணி என்றும் பொது மக்களுக்கு தெரிவிப்பதில்லை.
// குடிநீர் வழங்கப்படும் தினங்களில், அத்தினங்களில் குடிநீர் பெறவேண்டிய சில பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது; சில பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் முறையான பதில் இல்லை
// பல தினங்களில் துர்நாற்றத்துடனும், கலங்கிய நிலையிலும் குடிநீர் வழங்கப்படுகிறது
// அடிக்கடி குடிநீர் குழாய்கள் வெடித்து, சாலைகளில் நீர் கசிந்து, வீணாகும் அவலமும் நிகழ்கிறது
எனவே -
1) முன் அனுபவம் நிபந்தனைகள் இல்லாமல் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியினை ரத்து செய்து, முன் அனுபவம் நிபந்தனைகள், பொது மக்களுக்கு விநியோகம் தகவல் பரிமாறப்படவேண்டும் போன்ற நிபந்தனைகளை இணைத்து மறு ஒப்பந்தப்புள்ளி கோரவும்
2) எப்போது தண்ணீர் வரும் என்ற ஏக்கத்தையும், மன உளைச்சலையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தாமல் - எளிதான வகையில் குடிநீர் விநியோகம் அட்டவணையை பொதுமக்களுக்கு வழங்கிட உத்தரவிடவும் கோரி - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக, இன்று - தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|