அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, 19.12.2019. வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
13.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 05:00 மணி அளவில் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் எம்.ஏ. முஹம்மது ஹசன் தலைமையேற்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஐ.அப்துல் காதர், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாலை சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பிரதிநிதி தோழர் பன்னீர்செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் காதர் சாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்டி. சலாஹுத்தீன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தின் நோக்கம் பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாஸுல் அஸ்ஹப் விளக்கம் அளித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பன்னீர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஹசன் மெய்தீன், அதிமுக கட்சியை சேர்ந்த டாக்டர் காயல் மவுலானா, காங்கிரஸ் பேரியக்கத்தின் முஸ்தபா கமால், திமுகவின் சார்பில் கேப்டன் சதக்கத்துல்லாஹ், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் நஜீப், மறுமலர்ச்சி திமுக நகர அவைத் தலைவர் காதர் ஒலி, நாம் தமிழர் கட்சி நகர பொறுப்பாளர் வக்கீல் அபூபக்கர் சித்தீக், நகர KACF ஒருங்கிணைப்பாளர் சாலை சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய சனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் யாசர் அரபாத், நகர்மன்ற முன்னால் உறுப்பினர் திரு. சாமி அண்ணன், KACF அட்மின் திரு. கண்ணன், எம்.எல்.சேக்னா லெப்பை ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இந்திய குடியாட்சித் தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக சர்க்கார், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றி உள்ளது. இதனால் நாடு முழுவதும் இந்த மசோதா குறித்து விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்த சட்டம் மதச்சார்பற்ற இந்தியாவின் அடித்தளத்தையே சிதைத்து விடும்.
இந்திய அரசமைப்பு, மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஆனால், இந்த சட்டம் மத பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது. சிறுபான்மையினர்க்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தான் இந்த சட்டம் என்றால், அதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும்.
இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களையும், மியான்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் விட்டு விட்டனர்.
இந்த மசோதாவை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்த கூட்டம் கண்டனத்தையும் மிகுந்த கவலையையும் தெரிவிக்கிறது.
2. மத்திய பாஜக சர்க்கார் அமுல் படுத்தியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்து குரல் எழுப்பிய காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
3. மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அதனை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் நகர அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் எதிர்வரும் 19.12.2019 வியாழக் கிழமை மாலை பிரம்மாண்டமான கண்டன கூட்டம் நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளர் ஹாஜி, தர்கா பராமரிப்பு பேரவை அமைப்பாளர் ரஹமத்துல்லா, சிபிஎம் கட்சியின் நகரச் செயலாளர் ஜான்சன், மக்கள் நுகர்வோர் பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் புகாரி, திமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, கே.ஏ.சி.எஃப். ஜப்பான் ஷாமு ஷிஹாப்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் முஹம்மது சபீர் அலி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹசன் நன்றி கூறினார். காயல்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூசாலிஹ் துஆ ஓத கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தின் ஏற்பாடுகளை எம்.இஜட்.சித்தீக், என்டி.முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|