அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, 18.12.2019. புதன்கிழமையன்று காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நமதூர் சார்பாக எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் 13.12.2019 வெள்ளிக்கிழமை பின்னேரம் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஐக்கியப் பேரவையின் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
பேரவையின் தலைவர் அல்ஹாஜ் S.O. அபுல்ஹசன் கலாமி அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் கீழ்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண் : 1
நமது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் இதயத்தில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
மேலும் நமது தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலையும் இந்த சட்டத் திருத்தத்தால் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது-
இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் அனைத்து தரப்பினரும் தங்களது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக இக்கூட்டம் தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.
தீர்மானம் எண் : 2
இச்சட்டத் திருத்தத்தை கண்டிக்கும் விதமாக, எதிர்வரும் 18.12.2019 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் நமதூர் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் : 3
நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள பேரவை நிர்வாகத்திற்கு இக்கூட்டம் அனுமதியளிக்கிறது.
இறுதியாக நன்றியுரை துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளைச் சார்ந்தோர், பொதுநல அமைப்பினர் மற்றும் தன்னார்வலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |