காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, மகுதூம் தெரு ஆகிய தெருக்களில் புதிதாகத் தார் சாலை வருவதைத் தடுப்பது யார் என்பதை விளக்கி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் ஏற்கனவே தவலறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேற்படி தெருக்களில் புதிதாகத் தார் சாலை அமைத்திட தான் நிறைவேற்றிய தீர்மானத்தைச் செயல்படுத்திட தானே தயங்குவதாக – காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) புஷ்பலதாவின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
PAVER BLOCK சாலைகளுக்கு பதிலாக - சொளுக்கார் தெரு மற்றும் மஃதூம் தெரு - ஆகியவற்றில் தார் சாலை அமைத்திட - காயல்பட்டினம் நகராட்சி, இவ்வாண்டு ஆகஸ்ட் 9 அன்று தீர்மானம் (#1869) நிறைவேற்றியது.
- இது குறித்து நிறைவேற்றப்படும் இரண்டாவது தீர்மானம். இந்த தீர்மானத்தை நிறைவேற்றியவர் - காயல்பட்டினம் நகராட்சியின் பொறியாளர் (ஆணையர் பொறுப்பு) - திருமதி புஷ்பலதா.
அந்த தீர்மானத்தை நிறைவேற்றி - ஆகஸ்ட் 14 அன்று (ந.க..176/2017/அ3) - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு, விபரங்களை - ஆணையர் (பொ) திருமதி புஷ்பலதா அனுப்பியும் வைத்தார். அதன் பிறகு - அந்த கோப்புக்கு ஒப்புதல் வாங்க எந்த அவசர நடவடிக்கையும் அவர் மேற்கொண்டதாக தெரியவில்லை.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள் தொடர்ந்து சென்னையில் உயர் அதிகாரிகளை சந்தித்து கொடுத்த அழுத்தத்தை அடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) திரு பாஸ்கரன் IAS - காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு, அக்டோபர் 23 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார்.
அந்த கடிதத்தில் - திருநெல்வேலியில் உள்ள மண்டல இயக்குனர் (RDMA) மூலமாக, மண்டல செயற்பொறியாளர் (REE) கருத்துரு இணைக்கப்பட்டு விபரங்களை அனுப்பாமல் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், நேரடியாக - தானே, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ளார் என நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) தெரிவித்துள்ளார்.
மேலும் - சில விபரங்களை குறிப்பிட்டு, அவற்றினை அறிக்கையாக - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் (RDMA) அலுவலகம் மூலமாக - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு அனுப்பிடவும் கூறியுள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு பாஸ்கரன் IAS அவர்களால் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திருமதி புஷ்பலதா அவர்களுக்கு, இந்த கடிதம் அனுப்பப்பட்டு - ஏறத்தாழ 2 மாதங்கள் ஆகப்போகிறது. ஆனால் - இன்றைய தேதி வரை இந்த அறிக்கையை காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தயார் செய்யவில்லை.
இன்று இது சம்பந்தமாக, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல செயற்பொறியாளர் (REGIONAL EXECUTIVE ENGINEER) திருமதி சுப்புலட்சுமி அவர்களிடம் மெகா அமைப்பு வினவியதில், காயல்பட்டினம் நகராட்சியிடம் இருந்து இது குறித்து எந்த அறிக்கையும், இன்றைய தேதி வரை தான் பெறவில்லை என கூறினார்.
இது சம்பந்தமாக - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளர் (CHIEF ENGINEER) திரு நடராஜன் அவர்களை நேரடியாக சந்தித்த மெகா நிர்வாகிகளிடம், இதுவரை காயல்பட்டினம் நகராட்சியின் அறிக்கை தங்களை வந்தடையவில்லை என தெரிவித்தார்.
தார் சாலை போட - ஆகஸ்ட் மாதம் தான் நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்த - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஏன் தயக்கம் காண்பிக்கிறார்?
தார் சாலை போடக்கூடாது என அரசியவாதிகளின் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளாரா?
தார் சாலை போடக்கூடாது என ஒப்பந்ததாரர் நெருக்கடி கொடுக்கிறாரா?
சமூக அமைப்புகள் / ஆர்வலர்கள் என்ற பெயரில், நகராட்சியை அன்றாடம் வலம்வரும் இடைத்தரகர்கள் - ஏதேனும் நெருக்கடி கொடுக்கிறார்களா?
CMA கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை - காயல்பட்டினம் நகராட்சி எடுத்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - மெகா அமைப்பு சார்பாக வினவப்பட்ட கேள்விக்கு, நகராட்சி மூலம் இன்று கிடைக்கப்பட்ட பதிலில் – “(CMA) கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, விரிவான கருத்துரு தயாரிக்கப்பட்டு சமர்ப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது...” என தெரிவிக்கப்பட்டுள்ளது - குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|