கத்தர் காயல் நல மன்றத்தின் 37ஆவது பொதுக்குழுக் கூட்டம் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில், மன்றத்திற்குப் புதிய தலைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 06.12.2019. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், கத்தர் அல்ஃகோர் நகரிலுள்ள அல்ஃபர்கிய்யா கோஸ்ட் கடற்கரையில், மன்றத் தலைவர் மொகுதூம் மீரான் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, வரவேற்புரையாற்றினார்.
‘கவிக்குயில்’ ஃபாயிஸ் இஸ்லாமிய இன்னிசை பாடினார். தொடர்ந்து, வேலைவாய்ப்புகளைத் தேடி கத்தர் நாட்டிற்குப் புதிதாக வந்த காயலர்களும், வேலைவாய்ப்பைப் பெற்று மன்றத்தின் புதிய உறுப்பினரான காயலர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். வேலை தேடும் காயலர்களுக்கு மன்ற உறுப்பினர்கள் தத்தமக்கு இயன்ற வகைகளில் உதவி – ஒத்துழைப்புகளை வழங்கிட உறுதியளித்தனர்.
தலைமையுரை:
மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.மொகுதூம் மீரான் தலைமையுரையாற்றினார்.
இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பில் - மன்றத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் – காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த அனுசரணையுடன் செய்யப்படும் ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடை இலவசப் பகிர்வு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, அதன் நிர்வாகச் செலவினங்களுக்கான அனுசரணை, அரசு போட்டித் தேர்வுகளுக்கு நகர மாணவர்களை ஆயத்தப்படுத்தல், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், கே.எம்.டீ. மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்படவுள்ள டயாலிஸிஸ் பிரிவு, ரைஸ் ட்ரஸ்ட் இளவல்களுடன் இணைந்து நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மரங்கள் நடல், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் முன்னெடுப்பில் – அனைத்துலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் நடத்தப்படும் இமாம் – முஅத்தின்கள் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான அனுசரணை உள்ளிட்ட - மன்றத்தின் இதுநாள் வரையிலான நகர்நலப் பணிகளைப் பட்டியலிட்டு விளக்கியதோடு, அனைத்துப் பணிகளிலும் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வழங்கி வரும் தொய்வற்ற நல்ல ஒத்துழைப்புகளுக்காக நன்றி தெரிவித்தார். இனி வருங்காலங்களில் இன்னும் அதிகளவில் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்ராஃ தலைவர் உரை:
முன்னிலை வகித்த எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், இக்ராஃவின் தலைமைப் பொறுப்பைத் தற்போது மன்றம் ஏற்றுள்ளதையும் – அதையொட்டி செய்யப்பட்டுள்ள பணிகள், இக்ராஃவின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
இக்ராஃ மூலம் ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை – கடன் அடிப்படையில் முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இவ்வகைக்குத் தேவைப்படும் நிதி மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாகவும், இதுகுறித்து உலக காயல் நல மன்றங்களுக்கு விளக்கி வருவதாகவும், அவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் இன்னும் நல்ல முறையில் செயல்படுத்த ஆவன செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னிலையாளர் உரை:
முன்னிலை வகித்த எம்.என்.முஹம்மத் யூனுஸ் உரையாற்றுகையில், சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இருவரையும் அறிமுகப்படுத்திப் பேசியதோடு, அவர்களை வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
இக்கூட்டத்தில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளராகவும் – இன்ன பிற மக்கள் நல அமைப்புகளின் பொறுப்புகளிலும் இருந்து நகர்நலப் பணிகளாற்றி வரும் கே.எம்.டீ.சுலைமான், கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதியாகவும் - இயற்கை வழியிலான வாழ்வியலை மக்களுக்குத் தொடர்ந்து பரப்புரை செய்தும், தேவைப்படுவோருக்கு ‘மருந்தில்லா மருத்துவ’ முறையில் சிகிச்சையளித்தும் சேவையாற்றி வரும் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் இவ்விருவருக்கும் மன்றத்தின் சார்பில் முறையே புதிய தலைவர் ஏ.செய்யித் முஹ்யித்தீன், ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பளித்தனர்.
மன்றத்தின் சார்பில் இந்தக் கூட்டத்திற்கு தன்னை அழைத்து கண்ணியப்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்துப் பேசிய கே.எம்.டீ.சுலைமான், மன்றத்தின் நகர்நலத் திட்டப் பணிகளைப் பாராட்டிப் பேசியதுடன், இனி வருங்காலங்களில் அத்திட்டங்களை இன்னும் மெருகேற்றிச் செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இயற்கை வழியிலான வாழ்வியலின் அவசியம், பசி – தாகம் – உறக்கம் – ஓய்வு ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் கவனித்துச் செயல்பட்டால் உடலில் பெரிய அளவில் தொந்தரவுகள் ஏற்படாது என்றும், ஒருவேளை ஏதேனும் சிற்சிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் – எந்த மருந்துகளுமின்றி விரைவாக அவை சரியாகும் என்றும் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் பேசினார்.
பசித்தாலன்றி உணவுண்ணாதிருத்தல், தாகித்தாலின்றி நீரருந்தாதிருத்தல், இரவான பின் - அவசியமேற்பட்டாலேயொழிய எதுவும் சாப்பிடாதிருத்தல், 21.00 மணியுடன் பணிகளை முடித்துக்கொண்டு உறங்கத் துவங்கல் ஆகியவற்றின் பயன்களை விரிவாக விளக்கி அவரது உரை அமைந்திருந்தது.
வரவு செலவு கணக்கறிக்கை:
மன்றப் பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் – மன்றத்தின் கடந்த ஓராண்டிற்கான வரவு – செலவு கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
புதிய தலைவர் தேர்வு:
மன்றத்தின் புதிய தலைவராக மூத்த உறுப்பினர் ஏ.செய்யித் முஹ்யித்தீன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ் தலைவர் மொகுதூம் மீரான் அவருக்கு பயனாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
நிகழ் பருவமான கடந்த இரண்டாண்டுகளில் மன்றத் தலைமைப் பொறுப்பைத் தனது புன்சிரிப்புடன் கூடிய இன்முகத்தால் அனைவரையும் கவரும் வகையில் அனைவரையும் வழிநடத்தியமைக்காக நிகழ் தலைவருக்கு மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அவரது சேவைகள் நினைவுகூரப்பட்டன.
துணைச் செயலாளர் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம் நன்றி கூற, ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
மதிய உணவு:
மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும் அனைவருக்கும் மதிய உணவாக – நமதூர் மக்களால் நடத்தப்படும் சென்னை ரெஸ்டாரன்ட் தயாரிப்பிலான சுவையான சிக்கன் & மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள்:
மதிய உணவைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற மன்ற உறுப்பினர்களுக்குத் தனியாகவும், மழலையருக்குத் தனியாகவும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, கண்களைக் கவரும் பயனுள்ள பரிசுகள் பலவும் வழங்கப்பட்டன. மகளிருக்கும் அவர்களது பகுதியில் தனியே பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னோடி விளையாட்டுப் போட்டிகளாக – 21.11.2019. வியாழக்கிழமையன்று 20.00 மணிக்கு பவுலிங் போட்டியும், 28.11.2019. அன்று 20.00 மணிக்கு கால்பந்துப் போட்டியும் நடத்தப்பட்டன. அதில், மன்றத்தின் இளவட்டங்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுள் வெற்றி பெற்றோருக்கும் இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகள்:
அனைவரும் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். மஃரிப் வேளையை அடைந்ததும் கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுகை நடத்தப்பட்டது.
மன்ற நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் - ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, முஹம்மத் முஹ்யித்தீன் (மம்மி), இசட்.எம்.டி.அப்துல் காதிர், தாவூத், பி.ஃபைஸல் ரஹ்மான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் (பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்)
[கூடுதல் தகவல்கள் & படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 05:35 / 12.12.2019.]
|