Miscellaneous Fee என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக – காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியரிடம் வசூலித்த தொகை திருப்பியளிக்கப்படுவதாக, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
MISCELLANEOUS FEE என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி வசூல் செய்த தொகை திரும்ப கொடுக்கப்படுகிறது!
தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயக்குழு (TAMIL NADU PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE) - தமிழக அரசினால், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைவராக கொண்டு செயல்புரியும் குழுவாகும்.
இந்த குழு - மாநிலத்தில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட - மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அதிகாரம் பெற்றதாகும்.
இந்த குழு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகமாக - SMART CLASS என்ற பெயரில் - காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 2400 ரூபாய் - 2018 - 2019 கல்வியாண்டில் வசூல் செய்தது. (மொத்தம் சுமார் - 36 லட்சம் ரூபாய்)
[2017 - 2018 கல்வியாண்டில், இதே வகைக்கு - ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும், சட்டத்திற்கு புறம்பாக - 2100 ரூபாய், இப்பள்ளிக்கூடம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது].
இது குறித்து - பெற்றோர்கள் சிலரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பும் (மெகா) - கல்விக்கட்டணம் நிர்ணையம் குழுவிடம் முறையிட்டதை அடுத்து - சட்டத்திற்கு புறம்பாக 1400 மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தலா 2400 ரூபாயினை திரும்பி வழங்கிட - தமிழக அரசு உத்தரவிட்டது.
அந்த உத்தரவில் - கல்வியை நிறைவு செய்து வெளியில் செல்லும் மாணவர்களிடம் - அந்த தொகை ரொக்கமாக கொடுக்கப்படவேண்டும் என்றும், கல்வியை அதே பள்ளியில் தொடரும் மாணவர்களின் - 2019 - 2020 கல்வியாண்டு - கல்விக்கட்டணத்தில் - 2400 ரூபாய் கழிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளியில் சென்ற மாணவர்களுக்கு ரொக்கமாக - 2400 ரூபாய் திரும்ப கொடுத்த அப்பள்ளிக்கூடம், கல்வியை தொடரும் பெற்றோர்கள் செலுத்தும் நடப்பு கல்வியாண்டு கட்டணத்தில் - அந்த தொகையை இதுவரை கழிக்கவில்லை. ஆனால் - அந்த தொகையை கழித்துவிட்டதாக, கல்விக்கட்டணம் நிர்ணயக்குழுவிற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் - அப்பள்ளிக்கூடம் தவறான அறிக்கையினை வழங்கியுள்ளது.
இது சம்பந்தமாக - மெகா | நடப்பது என்ன? குழுமம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, நடப்பு கல்வியாண்டில், &இதர கட்டணம் (MISCELLANEOUS FEE)* என்ற பெயரில், அப்பள்ளிக்கூடம் ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் 3500 ரூபாய் - சட்டத்திற்கு புறம்பாக - வசூல் செய்ய தொடங்கியது.
இந்த தொகை சிலரிடம் - மாசம் 350 என்ற அடிப்படையிலும், சிலரிடம் - மூன்று மாசத்திற்கு 1050 ரூபாய் என்ற அடிப்படையிலும் - வசூல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக - சில பெற்றோர்கள் புகார் தந்ததை அடுத்து - மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மெகா அமைப்பு சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு பதில் வழங்கிய எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை, *MISCELLANEOUS FEE என்ற பெயரில் 3500 ரூபாய் வசூல் செய்ய, கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு - பள்ளிக்கூடத்திற்கு வழங்கிய ஆணையில் அனுமதித்துள்ளதாக - பொய்யான தகவலை தெரிவித்தார்.
இந்த பதில் கிடைக்கப்பட்ட பின்பு, 3500 ரூபாய் வசூல் செய்ய கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு அனுமதிக்கவில்லை என்பதனை - அந்த குழு, அந்த பள்ளிக்கூடத்திற்கு வழங்கிய ஆணை மூலமாகவே, மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு - மெகா அமைப்பு மூலம் - தெளிவு படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து - அந்த பள்ளிக்கூடம், MISCELLANEOUS FEE என்ற பெயரில் வசூல் செய்த தொகையினை, நடப்பாண்டு நிலுவையில் உள்ள கல்விக்கட்டணத்தில் கழிக்க தொடங்கியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|