காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் தேங்கும் மழைநீர் வழிந்தோடிக் கடலில் கலக்கும் பகுதியில் நகராட்சியே கட்டிடம் கட்டியிருப்பது குறித்து - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் பல தெருக்களில் தேங்கும் மழை நீர் - அருகில் உள்ள இயற்கையான வடிகால்கள் வழியாக - கடலினை சென்றடைகிறது. இந்த இயற்கையான வடிகால்கள் - பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளால் தடைபட்டு - நகரின் பல பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகள் - பொது மக்களில் சிலரால் - ஏற்படுத்தப்படுகிறது என்பது பரவலான கருத்து என்றாலும், காயல்பட்டினம் நகராட்சி - தனது சொந்த கட்டிடத்தை - இந்த இயற்கை வடிகாலை தடுக்கும் விதத்தில் - கட்டியுள்ளது பலருக்கு தெரியாது.
மழைநீரின் இயற்கையான ஓட்டத்தை தடுக்கும் விதத்தில், மக்கும் குப்பையை உரமாக்க என்ற பெயரில் - கடற்கரை பூங்காவிற்கு சற்று வடமேற்கில் - நகராட்சி கட்டிய கட்டிடம் தான் அது. இந்த கட்டிடம் - கீரிக்குளம் என மக்கள் அழைக்கும் பகுதியில் அமைந்துள்ளது.
எதற்காக, எவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது, இதனால் நகராட்சிக்கு ஏற்பட்டுள்ள நிதியிழப்பு விபரங்கள் - இறைவன் நாடினால் - விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|