நலத்திட்டப் பணிகள் செய்ததாகக் காண்பித்து, நகராட்சியின் மக்கள் வரிப்பணம் 7 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், இழப்புக்கு யார் பொறுப்பு என்றும் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் தினசரி சுமார் 12 டன் குப்பைகள் உருவாகிறது என்றும், வேறு ஆவணங்கள் - 18 டன் குப்பைகள் உருவாகிறது என்றும் தெரிவிக்கின்றன. நடுத்தர நகரமாக கருதப்படும் காயல்பட்டினத்தில் தலைக்கு தினமும் (PER CAPITA) சுமார் - 350 கிராம் குப்பை உருவாகுவதாக கருதப்பட்டு, அந்த அடிப்படையில் இந்த புள்ளிவிபரங்களை அரசு துறைகள் தயாரிக்கின்றன.
இவ்வாறு உருவாகும் குப்பைகளில் - பொதுவாக 40 சதவீதம், மக்கும் குப்பை (BIO-DEGRADABLE) என்றும் கணக்கிடப்படும்.
நகரில் தினமும் உருவாகும் 5 டன் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயோ காஸ் திட்டம், கடையக்குடி (கொம்புத்துறை) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, *தினமும் எவ்வளவு மக்கும் குப்பை கொண்டு செல்லப்படுகிறது, எவ்வளவு மின்சாரம் அதில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்ற தகவல் இல்லை.
அந்த திட்டத்திற்கு தேவையான 5 டன் குப்பை தினமும் வழங்கப்படுகிறதா என்பதே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் நிலையில், கூடுதலாக நான்கு இடங்களில் - பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் - மக்கும் குப்பைகளுக்கு என கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
(1) பயோ காஸ் திட்டம் இடத்திலேயே (SURVEY NO.278/1B) - சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் - மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் - 3 டன் கொள்ளளவு கொண்ட MICRO COMPOST CENTRE என்ற மக்கும் குப்பையில் இருந்து உரம் (COMPOST) தயாரிக்கும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
(2) சிவன் கோவில் தெரு மயான இடத்திற்கு அருகில் (SURVEY NO.392/5) சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் - மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் - 3 டன் கொள்ளளவு கொண்ட MICRO COMPOST CENTRE என்ற மக்கும் குப்பையில் இருந்து உரம் (COMPOST) தயாரிக்கும் மற்றொரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
(3) காயல்பட்டினம் நகராட்சி வளாகத்திலேயே சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் - பொது நிதியில் இருந்து - ONSITE COMPOST CENTRE என்ற மக்கும் குப்பையில் இருந்து உரம் (COMPOST) தயாரிக்கும் மற்றொரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
(4) அது போக - காயல்பட்டினம் கடற்கரை அருகே, சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் - பொது நிதியில் இருந்து - ONSITE COMPOST CENTRE என்ற மக்கும் குப்பையில் இருந்து உரம் (COMPOST) தயாரிக்கும் மற்றொரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நகரில் தற்போது 18 டன் குப்பை உருவாகிறது; அதில் 40 சதவீதம் மக்கும் குப்பை என எடுத்துக்கொண்டாலும், மக்கும் குப்பை அளவு - சுமார் 7 - 8 டன் மட்டுமே. ஆனால் - தற்போது குறைந்து 11 டன் அளவிற்கு, காயல்பட்டினம் நகராட்சி - பயோ காஸ் திட்டம் போக, நான்கு புது கட்டிடங்களை கட்டியுள்ளது.
இவை அவசியமா என கேள்வி எழுந்தாலும், அரசின் கொள்கைபடியும், நிதி உள்ளது/வருகிறது; தொலைநோக்கு பார்வையில் கட்டப்பட்டன என விளக்கம் வழங்கப்படலாம்.
அது ஒருபுறம் இருக்க - காயல்பட்டினம் கடற்கரை அருகே கட்டப்பட்டுள்ள - மக்கும் குப்பைக்கான கட்டிடம், மக்கள் கூடும் இடத்திற்கு மிக அருகாமையில் உள்ளது மட்டுமன்றி, கடலில் மழைநீர் சேரும் வழித்தடத்தை (கீரிக்குளம் பகுதி) மறைத்து கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு கட்டிடங்களுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? குழுமம் சார்பாக கேட்கப்பட்டது.
அதற்கு தற்போது பதில் வழங்கிய, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட பொது தகவல் அலுவலர், காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை தவிர்த்து, மீது மூன்று இடங்களுக்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் - அனுமதி (AUTHORISATION) வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூடுதல் தகவலை நேரடியாக வழங்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் ஒருவர் - கடலுக்கு செல்லும் மழைநீரை மறைத்து, CRZ இடத்திற்குள் கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசு துறையான நகராட்சி, பல லட்ச ரூபாய் செலவில் ஒரு பணியினை துவக்குவதற்கு முன்பு - அந்த திட்டம் அவசியம் தானா, அந்த இடத்தில் அந்த திட்டத்தை கொண்டு வருவதால் - மக்களுக்கு ஏதேனும் இடைஞ்சல் உள்ளதா, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா, பிற அரசு துறைகளின் அனுமதி கிடைக்குமா என பார்க்கவேண்டும்.
ஆனால் - அவசியமில்லாத ஒரு திட்டத்தை, பொருத்தமற்ற ஒரு இடத்தில் - பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் - காயல்பட்டினம் நகராட்சி - சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் அமல்படுத்தியுள்ளது. இன்றளவும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை.
பொது மக்களின் வரிப்பணத்தில் காயல்பட்டினம் நகராட்சியால் சட்டத்திற்கு புறமாக கட்டப்பட்ட, பயனற்ற இந்த கட்டிடத்திற்கு ஆன 7 லட்சம் ரூபாய் இழப்பிற்கு யார் பொறுப்பு?
திட்டம் வகுத்த - சுகாதாரத்துறை ஆய்வாளரா?
வடிவமைத்த பொறியியல் துறை அதிகாரிகளா?
ஒப்புதல் வழங்கிய ஆணையரா?
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|