காயல்பட்டினம் நகராட்சியில் நிரந்தர ஆணையர் இல்லாததால், நகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள நிவாரணப் பணிகள் உட்பட மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர ஆணையரை விரைவாக நியமித்திட வேண்டும் என்றும் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் – சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் ஜூலை மாதம் முதல் நிரந்தர ஆணையர் நியமிக்கப்படவில்லை. அந்த மாதத்தில் நகராட்சி பொறியாளராக நியமனம் செய்யப்பட திருமதி புஷ்பலதா - நகராட்சி பொறுப்பு ஆணையராக செயலாற்றி வருகிறார்.
ஒருவரே இரு பொறுப்புகளை கவனிப்பதால் - நகராட்சியின் அடிப்படை, அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு நகராட்சி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் - தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி, கொசுக்கள் தொல்லை, சுகாதார கேடு என பல்வேறு இன்னல்களை பொது மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
மேலும் - பொறியாளரே, நீண்ட நாட்கள் ஆணையர் பொறுப்பு என்ற பணியினை கவனிப்பதும் - பல்வேறு தவறுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே - உடனடியாக காயல்பட்டினம் நகராட்சிக்கு - நேர்மையான, திறமையான ஆணையரை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்யக்கோரி - இன்று சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் திரு ஹர்மந்தர் சிங் IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு பாஸ்கரன் IAS ஆகியோர்களிடம் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? சார்பாக - கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|